இராசிபுரம் நித்தியசுமங்கலி அம்மன் கோவில், நாமக்கல்
முகவரி :
இராசிபுரம் நித்திய சுமங்கலி அம்மன் கோவில்,
இராசிபுரம்,
நாமக்கல் மாவட்டம் – 637408.
இறைவி:
நித்திய சுமங்கலி அம்மன் ,
அறிமுகம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் எனும் ஊரில் நித்திய சுமங்கலி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது வழக்கமாக அனைத்து மாரியம்மன் ஆலயங்களிலும் சில பண்டிகைகளின் போது அம்மனின் முன் கம்பம் நடப்படும் ஆனால் இக்கோவிலில் இது நிரந்தரமாக நித்திய சுமங்கலி அம்மனுக்கு நேராக நடப்பட்டுள்ளது எனவே இந்த அம்மனுக்கு நித்திய சுமங்கலி எனும் பட்டம் சூட்டப்பட்டுள்ளது. சேலத்தில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் உள்ளது. சேலத்தில் இருந்து ராசிபுரத்தில் பேருந்து வழித்தடங்கள் உள்ளன. அங்கிருந்து கோவிலுக்கு பேருந்துகள் செல்கின்றன
புராண முக்கியத்துவம் :
கடையெழு வள்ளல்களின் ஒருவரான “வல்வில் ஓரி” கொல்லி மலையை தலைமையிடமாக கொண்டு ஆட்சி புரிந்த காலமது. அந்த காலத்தில் விவசாயி ஒருவர் தனது நிலத்தை உழுது கொண்டிருந்தார். அப்போது நிலத்தின் ஓரிடத்தில் கலப்பை மாட்டிக் கொண்டது. என்னவென்று தோண்டி பார்த்தபோது பீடம் ஒன்று கிடைத்தது.
வெளியே எடுத்தவுடன் தான் மாரியம்மன் எனவும் அவளுக்கு அங்கேயே கோயில் அமைத்து வழிபாடு நடத்த வேண்டும் எனவும் அசரீரி ஒலித்தது. அங்கேயே ஊர் மக்கள் சிறு குடில் அமைத்து வழிபட்டனர். பின்பு அந்நாட்டு மன்னன் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக கிடந்தான். இதனால் மனம் வருந்திய அரசி வேதனைப்பட்டாள்.
இக்கோயிலுக்கு வந்து அம்மனை அழுது மன்றாடி தன் கணவனின் உயிரை மீட்டு தருமாறு தன் தாலிக்கொடியை கையிலேந்தி வேண்டிக் கொண்டு அங்கேயே அழுது மயங்கினாள். இதனை கண்டு மனமிறங்கி இந்த மாரியம்மனும் அவள் கணவனின் உயிரை மீட்டருளினாள். இதனால் இன்புற்ற அரசி பெண்களுக்கு தாலி வரமருளும் நித்திய சுமங்கலி அம்மன் என போற்றினால் அதுவே அவளின் திருநாமம் ஆனது. வல்வில் ஓரி காலத்தில் இக்கோயில் கட்டபட்டது என தல வரலாறு கூறுகிறது.
நம்பிக்கைகள்:
குழந்தை வரம் வேண்டும் மகளிர் ஐப்பசி மாதத்தில் இக்கோவிலில் இருக்கும் கம்பத்திற்கு பதிலாக புதிய கம்பத்தை நடுவர். பழைய கம்பத்தை ஒரு கிணற்றருகே எடுத்துச்சென்று தயிர் சாதத்தை நைவேத்யமாக படைத்து அதனை உண்பார்கள் இவ்வாறு செய்தால் குழந்தை பாக்கியத்தை பெற்றுத்தரும் என்பது அதிகம். சுமங்கலிப் பெண்களின் அடையாளமான மலர்கள் நித்திய சுமங்கலி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெறும் இச்சடங்கின் பெயர் பூச்சாட்டு இத்தருணத்தில் அம்மனை வழிபடும் பாக்கியம் கிடைப்பது அதிர்ஷ்டமும், மிகவும் நல்லதாகவும் கருதப்படுகிறது.
சிறப்பு அம்சங்கள்:
கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் கோயில்களிலும் திருவிழாவின் போது மட்டும் வேப்ப மரத்தால் ஆன கம்பம் நடப்பட்டு அதனை சிவனாக பாவித்து திருகல்யாணம் நடத்தி திருவிழா நடத்துகின்றனர்.
பண்டிகை முடிந்ததும் கம்பம் அகற்றப்பட்டு நீர்நிலைகளில் சேர்க்கப்படும். ஆனால் இந்த திருகோயிலில் வருடம் முழுவதும் கம்பம் அப்படியே இருக்கும். கணவனை (சிவன்) விட்டு நீங்காத அம்பிகை அதனால் தான் “நித்திய சுமங்கலி மாரியம்மன் “ என்ற திருநாமத்துடன் விளங்குகிறாள்.
திருவிழாக்கள்:
இந்த திருகோவிலில் ஐப்பசி மாதம் முதல் செவ்வாயன்று திருவிழா துவங்கி 15 நாட்கள் திருவிழா நடத்தப்படுகின்றது. திருவிழா துவங்கும் நாள் முதல் தினமும் அம்மன் திருவீதி உலா நடத்தப்படுகின்றது. பூச்சாட்டுதல், கம்பம் மாற்றுதல், தீமிதித்தல், பொங்கல் வைத்தல், தேரோட்டம் என திருவிழா நடைபெறுகிறது வசந்த உற்சவத்துடன் திருவிழா முடிவடையும்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான 3-ஆம் நாள் வேப்ப மர கம்பம் மாற்றப்படும். அன்றைய தினம் குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு தயிர் சாத பிரசாதம் வழங்கப்படும். இதனை பெற்று உண்பவர்களுக்கு குழந்தை வரம் கிடைத்து வருகின்றது. திருவிழாவில் அம்மனுக்கு நேர்த்திக் கடனாக அக்னி சட்டியெடுத்தல், அலகு குத்துதல், தீமிதித்தல், பொங்கல் வைத்தல், உருளுதண்டம் போடுதல் போன்றவற்றை செய்கின்றனர் பக்தர்கள்.
காலம்
500 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
இராசிபுரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாமக்கல்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி