அருள்மிகு விஜயாலய சோழீஸ்வரர் திருக்கோயில், புதுக்கோட்டை
முகவரி
அருள்மிகு விஜயாலய சோழீஸ்வரர் திருக்கோயில், நார்த்தாமலை, புதுக்கோட்டை மாவட்டம் – 622 101
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
விஜயாலய சோழீஸ்வரம், நார்த்தாமலை கிராமத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் மலைமீது அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இக்கோயில் பல்லவர் மற்றும் சோழர் கலைப்பாணியினைக் கொண்டதாகக் கூறப்படுகிறது. [2]கோயிலின் வெளிப்புறச் சுவரில் உள்ள கல்வெட்டின்மூலமாக இது சாத்தன் பூதி என்பவரால் கட்டப்பட்டதாகவும், மழையின் காரணமாக இடிந்துவிட்டதால், மல்லன் விடுமன் என்பவர் இதனை விஜயாலய சோழன் காலத்தில் புதுப்பித்தார் என்றும் கூறப்படுகிறது. விஜயாலயன் காலம் முதல் இக்கோயில் விஜயாலய சோழீஸ்வரம் என்று வழங்கப்பட்டு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
புராண முக்கியத்துவம்
கருவறையில் பெரிய சிவலிங்கம் உள்ளது. பிரதான கோயிலின் அர்த்த மண்டபத்தில் சாந்து பூசப்பட்டு வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. உட்பிரகாரச் சுவர்களில் பண்டைய ஓவியங்கள் அழிந்த நிலையில் உள்ளன. இந்த ஓவியங்கள் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று கருதப்படுகிறது. இத்தலத்தில் அதிட்டானம் முதல் உச்சிவரை கல்லாலானது. இத்தலம் கட்டுமான கற்கோயிலாகும். மூலஸ்தானத்திற்கு மேலேயுள்ள விமானம் நான்கு அடுக்குகளைக் கொண்டுள்ளது. முதல் மூன்று அடுக்குகள் சதுரமாகவும், அதற்கு மேலேயுள்ள அடுக்கு வட்டமாகவும், அதற்க்கு மேலே குமிழ்போன்ற சிகரமும் அதற்கு மேலே வட்டமான கலசமும் காணப்படுகின்றது. கோபுரத்தில் நடன மங்கைகள் உள்பட பல அற்புதச் சிலைகள் உள்ளன. இது தமிழகக் கோயில் அமைப்பிலே தனித்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கோயிலின் முன், மூடு மண்டபம் ஒன்று உள்ளது. சோழர் காலத்திற்கே தனித்துவமான சுவர்களும் அவற்றில் அழகிய வேலைப்பாடுகளும் காணப்படுகின்றன. கூரையின் உட்புறத்திற் சிறுகோயில்கள் (பஞ்சரங்கள்) உள்ளது. முன்னுள்ள மண்டபத்தின் தூண்கள் பல்லவர் பாணியிலேயே உள்ளன. ஒரு காலின் மேல் மறுகாலை வைத்த தோற்றமுடைய இரு தூவாரபாலகர்கள் நுழைவாயிலில் உள்ளனர். ஆரம்பகாலச் சோழர் கலைப்பாணியில் இத்தலம் முக்கிய அம்சமாகும். பிரதானமான கோயிலைச் சுற்றி ஏழு துணைக்கோயில்கள் இருக்கின்றன. நீண்டு செல்லும் குன்றின் முக்கால் பங்கு உயரத்தில் விஜயாலய சோழீஸ்வரம் கோயிலும் சுற்றி ஆறு சிறு கோயில் கட்டுமானங்களும், பிரதானக் கோயிலில் நந்திக்குப் பின்னால் இரு குடைவரை கோயில்கள் உள்ளன.
காலம்
9 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நார்த்தாமலை
அருகிலுள்ள இரயில் நிலையம்
புதுக்கோட்டை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி