அருள்மிகு வராக மூர்த்தி திருக்கோயில்
முகவரி
அருள்மிகு வராக மூர்த்தி திருக்கோயில், பெரமண்டூர், திண்டிவனம் – 604 302.
இறைவன்
இறைவன்: வராக மூர்த்தி இறைவி: பூதேவி
அறிமுகம்
1300 ஆண்டுகள் பழமையான கோயில். ஆண்டாள் நாச்சியாருக்கும் வராக அவதாரத்தில் சம்பந்தம் உண்டு. தசாவதாரங்களில் மூவுலகங்களையும் அளந்து திரிவிக்கிரம அவதாரம் கூட இந்த பூமியில் காலூன்றி நின்றது. ஆனால் வராக அவதாரமும் பூமியை தன் கொம்பில் ஒரு தூசியை போல எளிதாக தூக்கி நின்று அருளியது. அதனால் அவதாரங்களில் வராக அவதாரம் பெரியது என்கிறார்கள் ஆச்சாரியர்கள். இத்தலத்தில் ஸ்வாமிக்கு கோயில் எழுப்புமாறு மகேந்திரவர்ம பல்லவன் பணிக்க பாட்டுடைத் தலைவனாக விளங்கிய நல்லியக்கோடன் அதை நிறைவேற்றினான். செங்கல் கட்டுமானம் ஆக இருந்த ஆலயத்தை கற்றளியாக எழுப்பினான். பிற்காலத்தில் அந்நய ஆதிக்கத்தால் பராமரிப்பு இன்றி மிகவும் சிதிலமடைந்த இந்த ஆலயம் சில ஆண்டுகளுக்கு முன்புதான் புனரமைக்கப்பட்டது. சுவாமியின் வலது திருப்பாதம் பூமியில் பதிந்து இருக்க இடத்தை ஆதிசேஷன் தாங்கி நிற்கிறார் பூமி பிராட்டி அமர்த்தி ஆலிங்கனம் செய்த திருக்கோலம் இந்த அற்புத தரிசனம் இக்கோயிலில் மட்டுமே காணப்படுகிறது கருவறைக்கு வெளியே இடப்பாதத்தை ஆதிசேஷன் தாங்கி நிற்கிறார். மடங்கிய இடது தொடையில் பூமிப் பிராட்டியை அமர்த்தி ஆலிங்கனம் செய்த திருக்கோலம்! கருவறைக்கு வெளியே இடப்புறம் ஸ்ரீதேவி பூதேவி சமேதராகக் காட்சி கொடுக்கும் கோதண்டராமரை கண்டு மகிழலாம். வலப்புறம் ஆழ்வார்கள் சன்னதி, வெளி மண்டபத்தில் விஷ்ணு துர்க்கை அருள்பாலிக்கிறாள். ஆலயம் புனரமைக்கப்பட்டு விட்டாலும் திருப்பணிகள் சில பாக்கி உள்ளன. குறிப்பாக, வளாகத்தில் கல்யாண உற்சவம் நடைபெற ஏதுவாக மண்டபம் அமைக்கும் பணி நிதி நெருக்கடியால் நின்றுபோயுள்ளது. அதுவும், பெருமாள் அருளால் விரைவில் நிறைவேறும் என்கிறார்கள் ஆலய நிர்வாகிகள்.
புராண முக்கியத்துவம்
இவர்களை அடிப்படையாகக் கொண்டே பாவபுண்ணியம் சொர்க்க நரகங்கள் இயங்குகின்றன. பூமியை பரிபாலனம் செய்வது தேவர்களின் கடமை. அந்த பூமியை இல்லை என்றால் அவர்களின் பணி என்னவாகும்? மேலும் அந்த பரமன் படைத்த பிரபஞ்ச ஒழுங்கை குலைப்பது என்பது அந்த பரமனையே எதிர்ப்பதாகுமெ! ஆனால் அது செய்யத் துணிந்தான் அசுரன் ஹிரண்யாட்சன். பூமியை தூக்கி சென்று மறைத்து வைத்தான். பஞ்சபூதங்களின் காப்பு இல்லாமல் பூமியை மறைத்து வைத்தால் அதில் வாழும் ஜீவர்களின் நிலை என்னவாகும்? அந்த வைகுண்ட வாசன் பார்த்துக் கொண்டிருப்பாரா…… பூமியை தன் கொம்புகளால் தாங்கி மீட்டார். பூமாதேவி பகவானின் காருண்யத்தால் சிலிர்த்தாள். ஆபத்துக்காலத்தில் தனக்கு கிடைத்த இந்த பாக்கியம் சாதரண ஜீவர்களுக்கும் கிடைக்க வேண்டும் அதற்கான உபாயத்தை தாங்களே அருள வேண்டும் என்று வேண்டிக்கொண்டாள். அப்போது வராக சுவாமி ஒரு உபாயத்தை உபதேசித்தார்.ஸ்ரீவராக உவாச: “ஸ்த்திதே மநஸி ஸுஸ்வஸ்த்தே ஸரீரே ஸதி யோ நர: தாதுஸாம்யே ஸ்த்திதே ஸ்மர்த்தா விச்வரூபஞ்ச மாமஜம் ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்ட்டபாஷாண ஸந்நிபம் அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம்” இந்த ஸ்லோகத்துக்கு “வராக சரம ஸ்லோகம்” என்று பெயர். நல்ல ஆரோக்கியத்தோடு மனதும் உடலும் இருக்கும்போது ஒருவன் ஒரு கணமேனும் நம்பிக்கையோடு என்னை நினைப்பான் எனில் அவன் வயதாகி உடல் தளர்ந்து போகும்போது நான் அவனை நினைப்பேன் என்பது இதன் கருத்து. எவ்வளவு பெரிய உபாயம் இதைப்பற்றி கொண்டுதான் “அப்போதைக்கிப்போதே…….” என்று ஆழ்வார் பாடி அருளினார். வராகர் அருளிய உபதேசம் பக்தர்களுக்கு சொல்லப்பட வேண்டிய தருணம் வந்தது. பூமி பிராட்டி இந்த மண்ணில் ஆண்டாள்யாய் அவதரித்தாள். பாசுரங்கள் பாடி அந்தப் பரந்தாமனை போற்றினாள். ஆண்டாள் போற்றிய மார்கழியில் ஆண்டாளை பூதேவித் தாயாராகக் கண்டு வணங்குவது மகா பாக்கியம். ஹிரண்யாட்சனை வதம் செய்தும் வராக ஸ்வாமியின் உக்கிரம் குறைய வில்லை அதைக்கண்டு பிரம்மா முதலான தேவர்கள் அஞ்சி நடுங்கினர் சாந்தமடைந்து காட்சி அருளுமாறு வேண்டினர் அவர்களின் வேண்டுதலுக்கு இறங்கிய சுவாமி சாந்த மூர்த்தியாக பூமிப் பிராட்டியை ஆலிங்கனம் செய்த கோலத்தில் திருக்காட்சி தந்து அருளினார். அவ்வாறு அவர் காட்சி தரும் திருத்தலம் பெரமண்டூர். தேவர்கள் அனைவரும் பெரும் கூட்டமாக மண்டி (நெருக்கிக் கொண்டு) நின்று வராக சுவாமியை பூஜை செய்த ஊர் என்பதால் ‘பெருமண்டி’ என்று வழங்கப்பட்டு பின் ‘பெரமண்டூர்’ ஆனது.
நம்பிக்கைகள்
வராக சுவாமி என்றாலே பூமியை காப்பவர் என்பதுதான் முதலில் தோன்றும். வாங்கிய நிலத்தில் பிரச்சனை, நீண்ட நாள்களாக முயற்சி செய்தும் சொந்த வீடு வாங்க முடியாத நிலை, நில பத்திரங்களை பிரிப்பதில் வில்லங்கள், வீடு கட்டி முடிக்க முடியாமல் தடுமாறுதல் ஆகிய பிரச்சனை உள்ளவர்கள் இங்கு வந்து வேண்டிக் கொண்டால் அந்த குறைகளைத் தீர்ப்பார். நிலம் தொடர்பான பிரச்சினைகள் நீங்க நிலப்பத்திரங்களைக் கொண்டு வந்து சுவாமியின் பாதத்தில் வைத்து நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் நன்மைகள் உண்டாகும். சுவாமி இங்கு பூமி தேவியை ஆலிங்கனம் செய்த நிலையில் காட்சி தருவதால் இது திருமண பரிகார தலமாகவும் விளங்குகிறது. குழந்தை வரம் பெற்றதால் நன்றிக் காணிக்கையாக துலாபாரமும் சில பக்தர்கள் கொடுக்கிறார்கள். சுவாமியின் ஒரு கண் பூமாதேவியையும் மறுகண் தரிசிக்க வரும் பக்தர்களை காணும் விதமாகவும் திருகோலம் அமைந்துள்ளது விசேஷம். ஆகவெ ஸ்வாமியின் பார்வை பட்டால் தீராத நொயெல்லாம் விரைவில் தீரும். வீட்டில் செல்வம் பெருகும்.
சிறப்பு அம்சங்கள்
ஸ்வாமி சாந்த மூர்த்தியாக பூமிப் பிராட்டியை ஆலிங்கனம் செய்த கோலத்தில் திருக்காட்சி அருள்வது சிறப்பு. ஸ்வாமியின் ஒரு கண் பூமாதேவியையும் மறுகண் தரிசிக்க வரும் பக்தர்களை காணும் விதமாகவும் திருகோலம் அமைந்துள்ளது விசேஷம். அர்த்தமண்டப விதானத்தில் சுவாமியை தரிசித்துப் பணிவதுப்போல் ராகு கேது அம்சமாக சர்ப்பம் ஒன்று காணப்படுகிறது. எனவே இத்தலம் ராகு கேது பரிகார தலமாகவும் விளங்குகிறது. தேவர்கள் அனைவரும் வந்து பூஜை செய்த பெருமாள் இவர். அனுக்கிரக மூர்த்தி.
காலம்
1000 to 2000
நிர்வகிக்கப்படுகிறது
–
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திண்டிவனம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திண்டிவனம்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி