Wednesday Dec 25, 2024

அருள்மிகு பத்ரிநாராயணர் திருக்கோயில், (பத்ரிநாத்)

முகவரி

அருள்மிகு பத்ரிநாராயணர் திருக்கோயில், பத்ரிநாத் தாம், சாமோலி மாவட்டம், உத்தரகாண்ட் மாநிலம். தொலைபேசி எண் 070607 28843.

இறைவன்

இறைவன்: பத்ரிநாராயணன் இறைவி: அரவிந்தவல்லி

அறிமுகம்

பத்திரிநாத் கோவிலில் மூலவராக காட்சிதரும் பத்ரிநாராயணர் கருப்புநிற சாளக்கிராமத்தினால் ஆனவர். பெருமாளின் சிறப்பு பெற்ற 108 திவ்ய தேசங்களில் 99 வது திவ்ய தேசமாக பத்ரிநாத் கோவில் அமைந்துள்ளது. பத்ரி நாராயணரின் சிலை கிபி 9 ஆம் நூற்றாண்டில் காஞ்சி சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வது சுலபம் அல்ல. கடுமையான மலை பாதைகளை கடந்து தான் செல்ல வேண்டி இருக்கும். கி.பி. 9ம் நூற்றாண்டில் காஞ்சி சுவாமிகள் இங்கு வந்தபோது இந்த மூர்த்தியை பிரதிஷ்டை செய்தார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் தேவப்பிரயாகை என்ற இடத்திலிருந்து 124 மைல் தூரத்தில் இந்த தலம் அமைந்துள்ளது. இங்கு செல்வதற்கு இலகுவான வழி டேராடூன் சென்று செல்வதுதான். டேராடூனிலிருந்து பஸ்களில் இவ்வூரை அடையலாம். இந்த கோயிலுக்கு செல்லும் முறையே வித்தியாசமானது. இது மிகப்பயங்கராமான மலைப்பாதை என்பதால் பஸ்கள் காலை 6 மணியளவில் புறப்பட்டு மாலை 4.30 மணி வரை ஓடிக்கொண்டிருக்கும். பின்பு அடுத்தநாள் காலையில் புறப்பட்டு மாலையில் பத்ரிநாத்தை சென்றடையும். 2நாட்கள் பஸ் பயணம் இருக்கும். இடையில் ஜோஷிமாத் என்ற ஊரில் பஸ்கள் நிறுத்தப்படும். இங்கிருந்து மறுநாள் புறப்பட்டு 42 கி.மீ. தொலைவிலுள்ள பத்ரிநாத்தை அடையலாம். இப்போதுள்ள கோயில் கட்டடம் 18ம் நூற்றாண்டில் கார்வால் அரசர்களால் கட்டப்பட்டது. கர்ப்பகிரகம், தரிசன மண்டபம், சபா மண்டபம் ஆகியவை உள்ளன. கருடன், குபேரன், நாரதர், மகாலட்சுமி, ஆதிசங்கரர், சுவாமி தேசிகன், ராமானுஜ குருவின் சீடர் பரம்பரர் மற்றும் நாராயணர் சிலைகள் எழுப்பப்பட்டுள்ளன. ஸ்ரீமன் நாராயணன் வேதங்களை சிருஷ்டித்து தானே ஆதி குருவாக தோன்றி மக்களை உய்விக்கும் பொருட்டு, நரநாராயணனாக இமாலயத்தில் திருஅவதாரம் எடுத்து தவக்கோலம் பூண்டார். அது சமயம், லட்சுமி தேவியானவள் பத்ரி (இலந்தை மரம்) – யாக உருவெடுத்து மகா விஷ்ணுவிற்கு நிழல் கொடுத்து நின்று அவருடைய தவம் பூர்த்தியடைய உதவிசெய்தாள். இதன் காரணமாகவே இவ்விடத்திற்கு பத்ரிகாஸ்ரமம் என்ற பெயர் பெற்றது. ஸ்ரீமன் நாராயணன் தவம் பூர்த்தியான பின் மனிதனுக்கு முதலில் இங்கு தான் தாரக மந்திரரோபதேசம் செய்ததாக கூறுவர். உலகில் தோன்றிய ஞானம் அனைத்திற்கும் ஆரம்ப இடம் இதுவே. இத்தலத்தை திருமங்கை ஆழ்வாரும், பெரியாழ்வாரும், தங்களது பாசுரங்களால் மங்களாசாஸனம் செய்துள்ளனர்.

புராண முக்கியத்துவம்

கைலாயத்தில் இருக்கும் சிவனுக்கும், பிரம்மனுக்கும் முன்னொரு காலத்தில் ஐந்து தலைகள் இருந்தது. தன் கணவரான சிவனுக்கும் ஐந்து தலை, பிரம்மனுக்கும் ஐந்து தலை என்ற கேள்வியுடன் சிவபெருமானிடம் விவாதத்தை ஏற்படுத்திய பார்வதி தேவியால் சிறு குழப்பம் ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த சிவபெருமான் பிரம்மனின் ஒரு தலையை கிள்ளி எடுத்து விட்டார். இதனால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டு விட்டது. அவர் கிள்ளி எடுத்த பிரம்மனின் தலை கையை விட்டு கீழே விழவில்லை. இதற்கான தீர்வினை விஷ்ணுவிடம் கேட்டபோது, ‘பூலோகத்தில் வசிக்கும் பதிவிரதையிடம் பிச்சை எடுத்து, அவள் கையால் அளிக்கும் பிச்சையினை சிவபெருமான் பெற்றால்’, பிரம்மஹத்தி தோஷம் நீங்கிவிடும் என்று தீர்வினை கூறினார்.இதனால் பூலோகம் வந்தடைந்தார் சிவபெருமான். பூலோகத்தில் பத்ரி ஆசிரமத்தில் நாராயணர், தாரக மந்திரத்தை மாணவர்களுக்கு உபதேசித்துக் கொண்டிருந்தார். அந்த ஆசிரமத்தில் நாராயணருக்கு உதவி செய்து கொண்டிருந்த மஹாலக்ஷ்மியிடம் சிவன் பிச்சை கேட்க, மகாலட்சுமி பிச்சை அளித்ததும் சிவபெருமானின் கையில் இருந்த பிரம்மனின் தலை கீழே விழுந்தது. அந்த இடம்தான் இன்று பத்ரிநாத்தில் பிரம்ம கபாலம் என்று அழைக்கின்றனர். இதனால் இந்த இடத்தில் பித்ருக்களுக்கு பிண்டம் வைப்பது சிறப்பாக கருதப்படுகிறது. நமக்கு நாமே ஆத்ம பிண்டமும் வைத்துக்கொள்ளலாம்.

நம்பிக்கைகள்

பலன்கள் திருமணத்தடை உள்ளவர்கள் பத்ரி நாதரையும், மகாலட்சுமியையும் வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. இங்குள்ள பிரம்ம கபாலம் என்னும் இடத்தில் முன்னோர்களுக்கு கயா போல பிண்டமிட்டு, அலக்நந்தா என்னும் ஆற்றில் பிண்டத்தை கரைத்தால் புண்ணியம் ஏற்படும் என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்

இந்தக் கோவிலில் ஓடிக்கொண்டிருக்கும் ஐந்து தீர்த்தங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. தப்த குண்டம், நாரதகுண்டம், கூர்ம தாரா, பிரகலாததாரா, ரிஷிகங்கர் என்று ஐந்து ஆறுகள் உள்ளன. கூர்ம தாரா எனும் தீர்த்தம் அன்னதான பிரசாதம் செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. தப்த குண்டம் தீர்த்தத்தில் ஸ்நானம் செய்த பிறகு தான் கோவிலுக்குள் செல்ல வேண்டும்.இங்கு ஓடிக்கொண்டிருக்கும் கங்கை நதியில் ஸ்நானம் செய்வது என்பது ஆபத்தானது. இந்த தப்த குண்டத்தில் இருக்கும் நீர் சுடுதண்ணியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வளவு குளிர்ந்த பிரதேசத்தில் இந்த நீர் எப்படி வெண்நீராக மாறுகிறது என்பது இதுவரை யாராலும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் இதற்கான ஒரு புராணக்கதை உண்டு. அக்னி பகவான் ஒரு நாள் உணவில் நெய் அதிகமாக சேர்த்துக் கொண்டார். இதனால் அவருக்கு ஏற்பட்ட அஜீரண பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்று விஷ்ணு பகவானிடம் வேண்டுதல் வைத்தார். விஷ்ணு பகவான், அக்னி பகவானை, தண்ணீராக மாறச் செய்து, அந்தத் தண்ணீரில் பக்தர்கள் நீராடினால் அவருடைய பாவமெல்லாம் கறைந்துவிடும் என்றும், அதேபோல் அக்னி பகவானின் அஜீரண கோளாறும் நீங்கும் என்றும் வரமளித்தார். அந்த சம்பவத்திற்குப் பின் தான் அக்னி பகவான், நாராயணரின் பாதங்களிலிருந்து நீர் ஊற்றாக எடுத்து தப்த குண்டத்தில் பாய்ந்தார் என்கிறது புராணம். சூடான நீர் ஓடும் இந்த தப்த குண்டத்தில் நதிக்கு அருகில் உள்ள அலக்நந்தா நதியில் நாம் தொட முடியாத அளவிற்கு குளிர்ந்த நிலையில் நீர் இருப்பது அதிசயமான ஒன்று.

திருவிழாக்கள்

கிருஷ்ண ஜெயந்தி, ஜூன் மாதம் 8 நாட்கள் நடைபெறும். பத்ரி கேதார் திருவிழா.

காலம்

2000 – 3000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

உத்தரகாண்ட்

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ரிஷிகேஷ்

அருகிலுள்ள இரயில் நிலையம்

ரிஷிகேஷ்

அருகிலுள்ள விமான நிலையம்

ஜாலி கிராண்ட்

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top