Thursday Dec 26, 2024

அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவில், திருச்சி

முகவரி

அருள்மிகு தாயுமானவசுவாமி திருக்கோயில், மலைக்கோட்டை, திருச்சி – 620 002. திருச்சி மாவட்டம். போன்: +91- 431 – 270 4621, 271 0484, 270 0971.

இறைவன்

இறைவன்: மாத்ருபூதேஸ்வரர், தாயுமானேஸ்வரர், தாயுமானவர் இறைவி: மட்டுவார்குழலி, சுகந்த குந்தளாம்பிகை

அறிமுகம்

திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் பெண்ணுக்கு மகப்பேறு காலத்தில் தாயாக வந்து உதவிய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள ஆறாவது சிவத்தலமாகும்.

புராண முக்கியத்துவம்

வாயுபகவான், ஆதிசேஷனுக்கிடைய தங்களில் யார் பெரியவர் என போட்டி வந்தது. ஆதிசேஷனை மீறி, கைலாய மலையை வாயு பகவான் பெயர்ப்பது என அவர்களுக்கு போட்டி வைத்துக்கொண்டனர். அப்போது கைலாயத்தின் ஒரு பகுதி இத்தலத்தில் விழுந்தது. இம்மலையில், மூன்று தலைகளுடைய “திரிசிரன்’ என்னும் அசுரன், சிவனை வேண்டி தவமிருந்தான். பல்லாண்டுகள் தவமிருந்தும் சிவன், அவனை சோதிப்பதற்காக காட்சி தரவில்லை. எனவே, அசுரன் தனது இரண்டு தலைகளை அக்னியில் போட்டுவிட்டு, மூன்றாவது தலையையும் போடத்துணிந்தான். அப்போது அவனுக்குக் காட்சி தந்த சிவன், இழந்த இரு தலைகளை மீண்டும் பெற அருள் செய்தார். பின்பு, அசுரனின் வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார். அசுரனின் பெயராலேயே, “திரிசிரநாதர்’ என்று பெயர் பெற்றார். தலம் “திரிச்சிராமலை’ என்று அழைக்கப்பட்டு, திருச்சி என மருவியது. இத்தலவிநாயகர் செவ்வந்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இத்தலத்திற்கு தென்கைலாயம் என்ற சிறப்பு பெயரும் உண்டு. மலையில் அமைந்த இக்கோயிலில், குன்றின் மத்தியில் ஒரு பிரகாரம் இருக்கிறது. இதை, “மேல்வீதி’ என்றும், மலையைச் சுற்றி அடிவாரத்திலுள்ள வீதியை, “கீழ்வீதி’ என்றும் சொல்கிறார்கள். விழாக்களின்போது இவ்விரண்டு வீதிகளிலும் சுவாமி உலா செல்வார். நவக்கிரக மண்டபத்தில் மனைவியர் உஷா, பிரத்யூஷாவுடன் சூரியன் காட்சி தருகிறார். இம்மண்டபத்தில் கிரகங்கள் அனைத்தும், சூரியனை நோக்கி திரும்பியிருக்கின்றன. மலை அடிவாரத்தில் “மாணிக்கவிநாயகர்’ இருக்கிறார். தனிச்சன்னதியிலுள்ள முத்துக்குமாரசுவாமியை, அருணகிரியார் திருப்புகழ் பாடியிருக்கிறார். அம்பாள் சன்னதிக்கு அருகில், ஒரு பள்ளத்திற்குள், “பாதாள அய்யனார்’ இருக்கிறார்.

நம்பிக்கைகள்

திக்கற்றவர்களுக்கு இத்தலத்து ஈசன், தாயாக இருந்து அரவணைத்துக் காக்கிறார். தாயை இழந்தவர்கள் இவரிடம் வேண்டிக்கொண்டால், அவர்களுக்கு தாயாக இருந்து வழி நடத்துவார் என்பது நம்பிக்கை. சுகப்பிரசவம் ஆவதற்கு இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்

உறையூரைத் தலைமையாகக் கொண்டு சோழ மன்னன் ஒருவன் இப்பகுதியை ஆண்டு வந்தான். அவ்வேளையில் சாரமா முனிவர் என்னும் சிவபக்தர், இத்தலத்தில் நந்தவனம் உருவாக்கி, தினமும் சிவனுக்கு செவ்வந்தி மலர் படைத்து பூஜித்து வந்தார். ஒருசமயம் வணிகன் ஒருவன், முனிவரின் நந்தவனத்தில் மலர்களைத் திருடி, மன்னனுக்குக் கொடுத்தான். அம்மலர் மீது ஆசை கொண்ட மன்னன், தினமும் வணிகனை மலர் கொண்டு தரும்படி சொன்னான். எனவே அவன் நந்தவனத்தில் தொடர்ந்து திருடி வந்தான். இதனால், சாரமா முனிவரின் சிவபூஜை தடைபட்டது. அவர், மன்னனிடம் சொல்லியும் அவன் கண்டுகொள்ளவில்லை. வருந்திய முனிவர், சிவனிடம் முறையிட்டார். அவருக்காக சிவன், மன்னனின் அரசவை இருந்த திசையை நோக்கித் திரும்பி, உக்கிரப்பார்வை பார்த்தார். இதனால் அப்பகுதியில் மண் மழை பொழிந்தது. தவறை உணர்ந்த மன்னன், சிவனை வேண்டி மன்னிப்பு பெற்றான். இவ்வாறு தவறு செய்பவர்களைத் தண்டிப்பவராக இத்தலத்து இறைவன் அருளுகிறார். செவ்வந்தி மலர் படைத்து வழிபடப்பட்டவர் என்பதால் இவருக்கு, “செவ்வந்தி நாதர்’ என்ற பெயரும் உண்டு. தாயும் ஆனவர்!: தனகுத்தன் என்ற வணிகன் இவ்வூரில் வசித்தான். கர்ப்பிணியான அவனது மனைவி, உதவிக்கு தாயை அழைத்திருந்தாள். தாயும் அவளது வீட்டிற்கு கிளம்பி வந்தாள். வழியில் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் அவளால் வீட்டிற்கு வரமுடிய வில்லை. இதனிடையே, அவளுக்கு பிரசவ வலி உண்டானது. தன்னைக் காக்கும்படி திரிசிராநாதரிடம் வேண்டினாள் ரத்னாவதி. அப்போது, சிவன் அவளது தாயின் வடிவில் சென்று, பிரசவம் பார்த்தார். காவிரியில் ஒரு வாரம் வரையில் வெள்ளம் ஓடவே, அதுவரையில் சிவன், தாயின் இடத்திலிருந்து அப்பெண்ணிற்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்தார். வெள்ளம் வடிந்தபிறகு, ரத்னாவதியின் தாய் வீட்டிற்கு வந்தாள். அவளது வடிவில் மற்றொருவள் இருந்ததைக் கண்ட, இருவரும் அதிர்ச்சியடைந்தனர். அப்போது சிவன் இருவருக்கும் சுயவடிவில் காட்சி கொடுத்தருளினார். தாயாக இருந்து அருளியதால் இவர், “தாயுமானவர்’ என்று பெயர் பெற்றார். உச்சிப்பிள்ளையார்: திருச்சி என்றாலே உச்சிப்பிள்ளையார் தான் நினைவிற்கு வருவார். இவர் இத்தலத்தில் கோயில் கொண்டிருக்கிறார். அயோத்தியில் ராமபிரான் பூஜித்த ரெங்கநாதரை பெற்ற விபீஷணன், இலங்கைக்குக் கொண்டு சென்றான். வழியில் இங்கு பெருமாளை வேண்டி பூஜை செய்ய எண்ணினான். ராமர், ரங்கநாதர் சிலையை வழியில் வைக்கக்கூடாது என நிபந்தனை விதித்திருந்ததால், விபீஷணன் அங்கு சிறுவன் வடிவில் வந்த விநாயகரிடம் சிலையைக் கொடுத்து விட்டுச் சென்றான். விநாயகர், விபீஷணன் வரும் முன்பாக அச்சிலையை கீழே வைத்துவிட்டார். நீராடியபின்பு வந்த விபீஷணன் கோபம் கொண்டு, சிறுவனை விரட்டிச் சென்றான். இங்கு மலை உச்சிக்குச் சென்ற விநாயகர், சுயரூபம் காட்டினார். இவர், “உச்சிப்பிள்ளையார்’ என்று பெயர் பெற்றார். விநாயகர் சதுர்த்தி விழா இவருக்கு 10 நாட்கள் விமரிசையாகக் கொண்டாடப்படும். சுகப்பிரசவ வழிபாடு: மட்டுவார்குழலி அம்பாள் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவளுக்கு சுகந்த குந்தளாம்பிகை என்றும் பெயருண்டு. வாசனையுடைய கூந்தலை உடையவள் என்பது இதன் பொருள்.கர்ப்பிணிப் பெண்ணின் வீட்டிலிருந்து யாராவது ஒருவர் வந்து, இந்த அம்பிகைக்கு 21 கொழுக்கட்டை, 21 அப்பம் படைத்து, ஒரு துணியில் மஞ்சள், குங்குமம், வெற்றிலையை கட்டி அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள். இதனால், சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை. சுகப்பிரசவ ஸ்லோகம்: கர்ப்பிணிகள் தாயுமானவர், அம்பிகையை வேண்டி, கீழேயுள்ள ஸ்லோகத்தை தினமும் 3 முறை சொல்லி, வழிபட்டால் சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை. “”ஹே, சங்கர, ஸ்மரஹர! பிரமதாதிநாத மன்னாத! ஸாம்ப! சசிசூட! ஹா! திரிசூலின் சம்போ! ஸுகப்ரசவக்ருத! பவ! தயாளோ ஸ்ரீமாத்ருபூத! சிவ! பாலய! மாம் நமஸ்தே!” சுவாமி முன்னே… கொடிமரம் பின்னே…!: கோயில்களில் சிவன் சன்னதிக்கு எதிரில்தான் கொடிமரம் இருக்கும். ஆனால், இக்கோயிலில் சிவனுக்கு பின்புறம் கொடிமரம் இருக்கிறது. முன்பு இக்கோயிலில் சிவன் சன்னதி, கிழக்கு திசையை நோக்கி இருந்தது. எனவே, பிரதான வாசலும், கொடிமரமும் கிழக்கு திசையில் அமைக்கப்பட்டது. சாரமா முனிவருக்காக, மன்னனைத் தண்டிக்க சிவன் மேற்கு திசை நோக்கித் திரும்பி விட்டதால், சன்னதி வாசலும், கொடி மரமும் அங்கேயே நிலைத்து விட்டது. சிவனுக்கு பூஜையின்போது சன்னதிக்குப் பின்புறத்தில்தான் (கிழக்கு திசையில்) மேளதாளம் வாசித்து, தேவாரம் பாடுகின்றனர். ஞான தெட்சிணாமூர்த்தி: விஜயரகுநாத சொக்கர் என்னும் மன்னர் இப்பகுதியை ஆண்டபோது, அவரிடம் கேடிலியப்ப பிள்ளை என்பவர், கணக்காளராக பணியாற்றினார். தாயுமானவ சுவாமி மீது பக்தி செலுத்திய அவர், சிவனருளால் ஆண் குழந்தை பெற்றார். குழந்தைக்கு “தாயுமானவர்’ என சுவாயின் பெயரையே சூட்டினார். இளமையிலேயே கல்வி, கேள்விகளில் சிறந்து திகழ்ந்த தாயுமானவரை, மன்னன் தன்னிடம் பணியமர்த்திக் கொண்டான். இத்தலத்தில் பல்லாண்டுகாலம் சிவனுக்கு சேவை செய்த அவருக்கு சிவன், குருவாக (தெட்சிணாமூர்த்தி) இருந்து உபதேசம் செய்து ஆட்கொண்டார். இவர் இக்கோயிலில் தர்ப்பை ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார். இவருக்கு கீழே சனகாதி முனிவர்கள் நால்வருடன், சிவயோகமாமுனிவர், பதஞ்சலி, வியாக்ரபாதர், திருமூலர் என 8 சீடர்கள் இருக்கின்றனர். அருணகிரியார் தனது திருப்புகழில் இவரைக் குறித்து, “தர்ப்ப ஆசன வேதியன்’ என குறிப்பிட்டு பாடியிருக்கிறார். வாழைத்தார் வழிபாடு!: கோயில்களில் சுவாமியிடம் வேண்டிக்கொள்பவர்கள் சர்க்கரைப்பொங்கல் அல்லது ஏதாவது ஒரு சாதத்தை படைத்து வேண்டிக்கொள்வார்கள். ஆனால், குழந்தை வரம் கிடைக்கவும், சுகப்பிரசவம் ஆகவும் இத்தலத்தில் தாயுமானவருக்கு வாழைத்தார் படைத்து, பாலபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.வாழை மரம், எப்போதும் அழிவில்லாமல் தழைத்துக் கொண்டே இருக்கும் தன்மையுடையது. இவ்வாறு வாழையடி வாழையாக குடும்பம் தழைக்க வேண்டுமென்பதன் அடிப்படையில் இவ்வாறு படைக்கிறார்கள். வாழையை மூலஸ்தானத்தில் வைத்து பூஜித்து, பின்பு அதை பிரசாதமாகக் கொடுத்துவிடுகிறார்கள். மர வடிவில் மகாலட்சுமி: சிவன் சன்னதி பிரகாரத்தில் மகாலட்சுமி, நின்ற கோலத்தில் இருக்கிறாள். இவளது சிலை மரத்தில் செய்யப்பட்டதாகும். குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாக இவளுக்கு பால், தேன், குங்குமப்பூ சேர்ந்த கலவையை படைத்து, நெய் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். வெள்ளி தோறும் இவளுக்கு “ஸ்ரீவேத சூக்த மந்திர ஹோமம்’ நடத்தப்படுகிறது. மற்றோர் சன்னதியில் மரத்தில் செய்யப்பெற்ற, துர்க்கையும் காட்சி தருகிறாள். பிரகாரத்தில் அருகில் சாரமா முனிவர் வணங்கியபடி இருக்க விஷ்ணு துர்க்கை எட்டு கரங்களுடன் காட்சி தருகிறாள். மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள் இவளுக்கு ராகு காலத்தில் செவ்வரளி மாலை அணிவித்து, பாயசம் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள். பிரசவம் பார்க்கும் சிவன்: சித்திரை பிரம்மோற்ஸவத்தின் 5ம் நாளில், சிவன் ரத்னாவதிக்கு பிரசவம் பார்த்த வைபவம் நடக்கிறது. அன்று, சோமாஸ்கந்தர் அருகில் கர்ப்பிணிப்பெண் ரத்னாவதியின் சிலையை வைக்கின்றனர். அப்போது, திரையிட்டு சிவன், ரத்னாவதி இருவரையும் மறைத்துவிடுவர். இவ்வேளையில் ரத்னாவதியின் மடியில் குழந்தை அமர வைத்து அலங்கரித்து, பின்பு திரையை விலக்கி தீபராதனை காட்டுவர். இந்த வைபவத்தின் போது, பிறந்த குழந்தைகளுக்குக் கொடுக்கும், மருந்து மற்றும் தைலமே பிரசாதமாக தரப்படும். இதைச் சாப்பிடும் பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை. சங்குச்சாமி!: கோயில் கொடிமரத்திற்கும், பலி பீடத்திற்கும் இடையில் கையில் சங்கு வைத்து ஊதியபடி சிவகணம் ஒன்று இருக்கிறது. இதை, “சங்குச்சாமி’ என்று அழைக்கிறார்கள். இவர் எப்போதும் சிவனின் பெருமைகளை சங்கு ஊதியபடி சொல்லிக் கொண்டிருப்பாராம். எனவே இவர், கையில் சங்குடன் இருப்பதாகச் சொல்கிறார்கள். இவருக்கு, “சங்கநாதர்’ என்றும் பெயருண்டு. சிவன் இக்கோயிலில் இருந்து புறப்பாடாகும் வேளையில், இவர் சங்கு ஊதி அறிவிப்பார் என்றும் சொல்வதுண்டு. நந்தி கோயில்: சிவன், அம்பாள் மட்டுவார்குழலி மற்றும் உச்சிப்பிள்ளையார் ஆகிய மூவரும் இந்த குன்றில் தனிதனி கோயில் கொண்டு அருளுகின்றனர். 417 படிகளுடன், 273 அடி உயரத்தில் அமைந்த குன்று இது. இக்குன்றை வெவ்வேறு திசைகளில் இருந்து பார்க்கும்போது, சிவனின் வாகனமான ரிஷபம், அம்பிகையின் வாகனமான சிம்மம், மற்றும் தும்பிக்கையை நீட்டி அமர்ந்த கோலத்தில் விநாயகர் என மூன்று வடிவங்களில் காட்சியளிப்பது கலியுகத்திலும் நாம் காணும் அதிசயம். தாயுமானவர் சன்னதியைச் சுற்றி பாதாளத்தில் ஒரு பிரகாரம் அமைத்து, இரண்டு அடுக்குகளுடன் கூடியதாக சிவன் சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது. இப்பிரகாரத்தில் பிரம்மா, அகத்தியர், இந்திரன், ஜடாயு, அத்திரி மகரிஷி, தூமகேது, திரிசிரன், அர்ஜுனன், ராமர், ஆஞ்சநேயர், விபீஷணர், நாக கன்னி, சாரமா முனிவர், ரத்னாவதி, மௌனகுரு சுவாமிகள், தாயுமானவ அடிகள், சேக்கிழார் ஆகிய அனைவரும் ஒரே இடத்தில் வரிசையாக காட்சி தருகின்றனர். கோயில்களில் சிவலிங்கத்தின் வடிவத்திற்கேற்ப, எதிரில் நந்தி சிலையை பெரிதாகவோ, சிறிதாகவோ அமைப்பர். இத்தலத்தில் மலையே சிவனாகக் கருதி வழிபடப்படுவதால், மலைக்கு நேரே அடிவாரத்தில் பிரம்ம தீர்த்தக் கரையில் பெரிய நந்தி சிலை அமைத்து, தனிக்கோயில் எழுப்பியுள்ளனர். நந்திக்கோயில் என்றழைக்கப்படும் இங்கு, பிரதோஷத்தன்று சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. நந்திக்கு பின்புறத்தில், மலையின் அளவிற்கேற்ப சுமார் 35 அடி உயரத்தில் கல் தீபஸ்தம்பம் ஒன்று இருக்கிறது. சிறப்புக்கள் சிலவரிகளில்…! காவிரியின் தென்கரையில் அமைந்த இக்கோயிலில் சிவன், “ராட்சஷ லிங்க’ வடிவில் (பெரிய லிங்கமாக) காட்சி தருகிறார். பங்குனி மாதம் 3 நாட்கள் மாலையில் சிவலிங்கம் மீது, சூரிய ஒளி விழுகிறது. இக்கோயிலில் காரணம், காமீகம் என இரண்டு ஆகமப்படி பூஜை நடக்கிறது. சித்திரையில் பிரம்மோற்ஸவம், பங்குனியில் தெப்பத்திருவிழா, ஆடிப்பூரம், நவராத்திரி என இங்கு நான்கு விழாக்கள் கொடியேற்றத்துடன் துவங்கி நடக்கிறது. தை மாத, விசாகம் நட்சத்திரத்தன்று தாயுமானவர் குருபூஜை நடக்கிறது. சித்திரை பிரம்மோற்ஸவத்தின் போது நாகர், அறுபத்துமூவருக்கு சிவன் காட்சி தரும் வைபவம் விமரிசையாக நடக்கிறது. தமிழ் மாத பிறப்பு, அமாவாசை ஆகிய நாட்களில் சுவாமி புறப்பாடாகிறார்.

திருவிழாக்கள்

சித்திரையில் பிரம்மோற்ஸவம், பங்குனியில் தெப்ப உற்சவம், ஆடிப்பூரம், ஐப்பசியில் அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, மகரசங்கராந்தியன்று பஞ்சமூர்த்தி புறப்பாடு வைபவம், சிவராத்திரி.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

.திருச்சி

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருச்சி

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top