அருள்மிகு கங்காஜடேஸ்வர சுவாமி திருக்கோயில், கோவந்த புத்தூர் (கோவிந்தபுத்தூர்)
முகவரி
அருள்மிகு கங்காஜடேஸ்வர சுவாமி திருக்கோயில், கோவிந்தபுத்தூர் – அஞ்சல் – 621 701, அம்பாப்பூர் (வழி), உடையார்பாளையம் வட்டம், (அரியலூர்) பெரம்பலூர் மாவட்டம்.
இறைவன்
இறைவன் : கங்கா ஜடேஸ்வரர் இறைவி: மங்கள நாயகி
அறிமுகம்
இன்று கோவிந்த புத்தூர் என்று வழங்குகிறது. கோவிந்தபுத்தூர். கொள்ளிடத்தின் வடகரையில் உள்ள தலம். தென்கரையில் விசயமங்கை என்னும் சிவாலயம் உள்ளது. ஜயங்கொண்டத்திலிருந்து ‘மதனத்தூர்’ சாலையில் வந்து – தா.பழூர், கரக்குறிச்சி, ஸ்ரீ புரந்தரன் (திருபுரந்தன்) வழியாகக் கோவிந்தபுத்தூரை அடையலாம். ஜயன்கொண்டம் – தா.பழூர் 14 கி.மீ. சென்னையிலிருந்து வருவோர்; கங்கை கொண்ட சோழபுரம் கூட்ரோடு – அங்கிருந்து ஜயன்கொண்டம் வந்து மேலே சொல்லியவாறு கோவிந்தபுத்தூரை அடையலாம். இவையிரண்டு சுருக்கமான – நல்ல பாதைகள். கும்பகோணத்திலிருந்து வருவோர் ‘அணைக்கரை’ வந்து – 2ஆவது பாலங்கடந்து, அப்பாலத்தையொட்டி இடப்புறமாகப் பிரிந்து செல்லும் சாலையில் செல்லலாம். சென்னையிலிருந்து வருவோர் அணைக்கரை வந்து முதலில் உள்ள பாலத்தைத் தாண்டாமல், அப்பாலத்தையொட்டி வலப்புறமாகப் பிரிந்து செல்லும் சாலையில் சென்றும்; எங்கும் வளைவுகளில் திரும்பாமல் நேரே தார்ச்சாலையில் செல்லும் போது (வளைவுகளில் கேட்டுச் செல்க) கோடாலி கருப்பூர், சோழமாதேவி, அணைக்குடம் முதலிய ஊர்களைத் தாண்டி ஜயங்கொண்டம் செல்லும் சாலை வலப்புறமாகச் செல்ல நாம் இடப்புறச் சாலையில் திரும்பி நேரே சென்றால் “தா.பழூர்” வரும் பின்பு அங்கிருந்து (3 கி.மீ.) காரைக்குறிச்சி வந்து வலப்புறமாகப் பிரியும் “ஸ்ரீ புரந்தரன்” அடைந்து – ஊரைத்தாண்டியதும் சாலை இரண்டாகப் பிரியுமிடத்தில் “முட்டுவாஞ்சேரி 4 கி.மீ.” என்று கைகாட்டி காட்டும் திசையில் சென்று – சிறிது தொலைவில் மீண்டும் சாலை பிரியுமிடத்தில் நாம் வலப்புறச் சாலையில் 3 கி.மீ. சென்றால் கோவிந்தபுத்தூரை அடையலாம். (இவ்வழியில் வளைவுகள் / பிரிவுகள் அதிகம். எனவே அங்கங்கு நின்று கேட்டுச் செல்ல வேண்டும்). சிறிய கிராமம். ஊர்க்கோடியில் ஊராட்சி ஒன்றிய நாடு நிலைப்பள்ளி உள்ளது. அதன் பக்கத்தில் கோயில். (எதிரில் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடமும் நியாய விலைக்கடையும் உள்ளன.)
புராண முக்கியத்துவம்
பழமையான சிவாலயம். நிரம்ப செடிகள் முளைத்துள்ளன. முகப்பு வாயில் – மேற்புறம் சுதையில் ரிஷிபாரூடர் தரிசனம். சந்நதிகள் அனைத்தும் சிதைந்திருப்பதால் தட்சிணாமூர்த்தி, அம்பாள், ராஜராஜன், மனைவி, ராஜேந்திரன், சம்பந்தர், சப்த மாதாக்கள், விநாயகர் மூலத்திரு மேனிகள் உள் மண்டபத்தில் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. அம்பாள் சந்நிதி தனி கோயில். கோயில் விமானம் உத்தமச் சோழப் பல்லவனின் காலத்திய வேலைப்பாடமைந்தது. கோயில் பராமரிப்பின்றி முழுவதுமாகச் செடிகள் முளைத்துள்ளது. எவ்வித வருவாயுமில்லை. பசு பால் சொரிந்து வழிபடும் சிற்பம், இந்திரன், காமதேனு, அருச்சுனன் ஆகியோர் வழிபடும் சுதை சிற்பங்கள் உள்ளன. ஊரின் பெயர் கோவந்தபுத்தூர் – கோயிலின் பெயர் விசயமங்கை. இது பாடல் பெற்ற தலம்; வைப்புத் தலமன்று என்பதொரு கருத்துள்ளது. வழக்கில் கொள்ளிடத் தென்கரைத் தலமான விசயமங்கையே தொன்று தொட்டு பாடல் பெற்ற தலமாகக் கொள்ளப்படுகிறது. இத்தலம் அப்பர், சம்பந்தர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள சோழ நாட்டு வைப்புத் தலமாகும்.
காலம்
1000 -2000ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கோவிந்தபுத்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
அரியலூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி