Monday Nov 25, 2024

அம்பாசமுத்திரம் லட்சுமிநாராயணப்பெருமாள் திருக்கோயில் திருநெல்வேலி

முகவரி

அருள்மிகு லட்சுமிநாராயணப்பெருமாள் திருக்கோயில், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம் – 627 401. போன்: +91- 94420 64803.

இறைவன்

இறைவன்: லட்சுமிநாராயணப்பெருமாள்

அறிமுகம்

திருநெல்வேலி அருகே அருகன்குளம் கிராமத்தில், தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது லட்சுமி நாராயணர் கோவில். இந்த ஆலயம் ஜடாயு தீர்த்த கிணற்றின் மேல் அமைக்கப்பட்டிருப்பது விசேஷமானதாகும். ஜடாயு தீர்த்த கிணற்றில், லட்சுமி நாராயணர் சிலை உள்ளது. அதேபோல் கோவிலின் கர்ப்பக்கிரகத்திலும் லட்சுமி நாராயணர் சிலையும், ஜடாயு சிலையும் இருக்கிறது. நம்மாழ்வார், ராமானுஜர், வேதாந்ததேசிகர் ஆகியோருக்கு சன்னதிகள் இருக்கிறது.

புராண முக்கியத்துவம்

முற்காலத்தில் இக்கோயிலில் சிவன், லிங்கரூபமாக எழுந்தருளியிருந்தார். ஒரு சமயம் பொதிகை மலைக்கு அகத்தியரை சந்திக்கச் சென்ற சனகாதி முனிவர்கள், இங்கு வந்தனர். அப்போது அவர்களுக்குள் சிவன், திருமால் இருவரும் ஒன்றா? என்ற சந்தேகம் வந்தது. தங்கள் குழப்பத்தை தீர்க்கும்படி சிவனிடம் முறையிட்டனர். உடன் இங்கிருந்த லிங்கத்தில் பெருமாள், மகாலட்சுமியிடம் காட்சி கொடுத்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்கு, லட்சுமி நாராயணர் சிலை பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பப்பட்டது.

நம்பிக்கைகள்

தம்பதியர் இங்கு வேண்டிக்கொள்ள குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும் என்பது நம்பிக்கை. மனக்குழப்பம், பயப்படும் குணம் உள்ளவர்கள் வியாழக்கிழமைகளில் சக்கரத்தாழ்வாருக்கு செவ்வரளி மாலை சாத்தி வழிபடுகிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்

மூலஸ்தானத்தில் பெருமாள், மடியில் மகாலட்சுமியை வைத்தபடி அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். பெருமாள், புதன் கிரகத்திற்கும், தாயார் சுக்ரனுக்கும் அதிபதி ஆவர். எனவே இத்தலம், “புதசுக்ர பரிகார க்ஷேத்ரம்’ என்றும் அழைக்கப்படுகிறது.புதன் கிரக தோஷம் உள்ளவர்கள் பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்தும், சுக்ரதோஷம் உள்ளவர்கள் மகாலட்சுமிக்கு குங்கும அர்ச்சனை செய்தும் வழிபடுகிறார்கள்.குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பு புதன்கிழமைகளில், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுகிறார்கள். இதனால் கல்வி சிறக்கும் என்பது நம்பிக்கை. திருமணத்தடை உள்ள பெண்கள் சுவாமி முன்பு பச்சரியின் மீது தேங்காயில் நெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபடுகிறார்கள். நரசிம்மர் சிறப்பு: முற்காலத்தில் இக்கோயில் சிவனுக்குரியதாக இருந்ததால், அவருக்குரிய வில்வம் இங்கு தலவிருட்சமாக இருக்கிறது. முன்மண்டபத்தில் பதினாறு கைகளுடன் சக்கரத்தாழ்வார் காட்சி தருகிறார். இவருக்கு பின்புறம் நான்கு கரங்களிலும் சக்கராயுதத்துடன் யோக நரசிம்மர் இருக்கிறார். இவருக்கு இருபுறமும் சிவன், பிரம்மா ஆகியோரும் இருக்கின்றனர். இவரது பீடத்தில் ஐந்து தலைகளுடன் ஆதிசேஷன் இருக்கிறார். இத்தகைய அமைப்பில் நரசிம்மரை காண்பது அபூர்வம். நரசிம்மர், ஒரு மாலை வேளையில் (பிரதோஷ காலம்) உக்கிரத்துடன் இரணியனை சம்ஹாரம் செய்தார். எனவே, இவரை சாந்தப்படுத்தும் விதமாக தினமும் மாலையில் சுக்கு, வெல்லம், ஏலம், நீர், எலுமிச்சை சாறு சேர்ந்த கலவையை நைவேத்யமாக படைத்து, பிரசாதமாக தருகின்றனர். பக்தர்கள், சுவாதி நட்சத்திர நாட்களில் நரசிம்மருக்கு பானகம் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள். இத்தலத்திலுள்ள அஞ்சலி ஆஞ்சநேயர், தனது தலைக்கு மேலே மிகச்சிறிய லிங்கத்தை வைத்தபடி காட்சி தருகிறார். ஆஞ்சநேயரின் இந்த தரிசனம் மிகவும் விசேஷமானது.

திருவிழாக்கள்

வைகாசியில் வருஷாபிஷேகம், புரட்டாசி சனிக்கிழமைகள், வேதாந்த தேசிகர் உற்சவம்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

அம்பாசமுத்திரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருநெல்வேலி

அருகிலுள்ள விமான நிலையம்

திருநெல்வேலி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top