அன்னவாசல் அன்னபூர்ணேஸ்வரர் கோயில்
முகவரி
அன்னவாசல் சிவன்கோயில், திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம்
இறைவன்
இறைவன்: அன்னபூர்ணேஸ்வரர், இறைவி: அன்னபூர்ணேஸ்வரி
அறிமுகம்
திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம்,அன்னவாசல் சிவன்கோயில். சோறு கண்ட இடம் சொர்க்கம் இதற்க்கு அர்த்தம் உங்களுக்கு தெரியுமா? உலகில் வாழும் உயிரினங்களுக்கு எல்லாம் உணவளிக்கும் இறைவனுக்கு நன்றி கூறும் விதமாகவே ஐப்பசி பவுர்ணமி நாளில் அன்னாபிஷேகம் செய்கின்றனர். இந்த அன்னாபிஷேகத்தை பார்ப்பவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம். இதைத்தான் சோறு கண்டால் இடம் சொர்க்கம் என்று கூறியுள்ளனர். அனைத்து உயிர்களுக்கும் உணவு அளிப்பவன் ஈசன். அதனால் தான் அன்னத்தைப் பற்றி அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ’ என்று சாமவேதத்தில் குறிப்பிடப்படுகிறது. எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருக்கிறான்’ என்பதே இதன் பொருள். இதைத்தான் “அரிசியும் சிவனும் ஒன்னு” என சொலவடையாக கூறுவார் ‘அன்னம் பரபிரம்மம்’ என்பர். இதற்கு ‘உணவே தெய்வம்’ என்று பொருள். அந்த அன்னமே லிங்க வடிவெடுத்தால்… அவர்தான் அன்னபூர்ணேஸ்வரர். அவர் குடிகொண்டிருக்கும் இடமும் அன்னத்தின் பெயர்தான் ஆம்.. அன்னவாசல், ஆங்கே காணும் தேவியின் பெயரும் அன்னபூர்ணேஸ்வரி தான். திருவாரூர் மாவட்டம், குடவாசலில் இருந்து குடமுருட்டி ஆற்றின் கரையோரமாக சேங்காலிபுரம் செல்லும் வழியில் இருக்கிறது அன்னவாசல் கிராமம்.. நெருங்கிய உறவினர்களை பல காலம் சந்திக்க இயலாமல் தடை ஏற்ப்பட்டுக்கொண்டே இருக்கிறதென்றால் அவர்குக்கு அன்னதோஷம், பித்ரு தோஷம் உள்ளது என அர்த்தம். மகாபாரதத்தோடு நெருங்கிய பிணைப்பை உடைய சிவத்தலமிது. பீமன் தன் பேரனான பர்பரீகனை பல ஆண்டுகாலமாக சந்திக்க இயலாமல் தடை ஏற்ப்பட்டுக்கொண்டே இருந்தது அதனால் கிருஷ்ணரின் ஆலோசனைப்படி இத்தலம் வந்து 48நாட்கள் அன்னபூர்ணேஸ்வரரை அன்னம் கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்ட பின்னர் அவன் தன் பேரனை இத்தலத்தில் தான் சந்தித்தான் என புராண வரலாறு கூறுகிறது. அன்னம் வடிப்பதென்பது சாதாரணமானது அல்ல , அன்னம் வடிக்க வாங்கிய பொருள் வந்த விதம், சமைப்பவரின் எண்ணங்கள், பாத்திரத்தின் தன்மை, தூய்மை, மற்றும் சமைக்கும் இடம் இவற்றினை பொறுத்தே அன்னத்தின் ஆன்ம சக்தி இருக்கும். தவறான வழியின் மூலம் வந்த பணத்தால் வாங்கிய பொருள் வல்வினைகள் கொண்டதாகவே இருக்கும். பித்ருக்களுக்கு வருடாந்திர, மாதாந்திர தர்ப்பணம் செய்வதை காட்டிலும் நித்திய தர்ப்பணம் செய்வதே நலம் பயக்கும். சமைத்த உணவினை பித்ருக்களுக்கு நித்தம் அர்க்கியம் செய்தல் சால சிறந்தது. அகல்யா, சீதா, தாரா, மண்டோதரி ஆகியோரோடு பிரசித்தி பெற்ற பஞ்சகன்யா மாதாக்களில் ஒருவராய் திரௌபதியும் சேர்ந்து உத்தம நிலையை அடைந்ததும் இத்தலமே ஆகும். தன் நாட்டில் பஞ்சம் வராமல் இருக்க தசரத மகாராஜா இந்த அன்னவாசல் ஈசனை வழிபட்டிருக்கிறார் என்பது இத்தலத்தின் கூடுதல் சிறப்பு. அர்க்ய பூஜைக்கு மிகவும் உன்னதமான தலம் என்று கிருஷ்ணர் பாண்டவர்களுக்கு எடுத்துரைத்துப் பூஜையாற்றிய தலம் இது. பாண்டவர்களுடைய அர்க்ய பூஜைகளை ஏற்ற ஈஸ்வரன் இத்தீர்த்தத்தில் சிவபூஜைகளை ஆற்றுவோருக்கு இது ‘சிவபுண்ணியத் தீர்த்தம்’ ஆகும் என கூறியுள்ளார். முற்காலத்தில் மகத்தான நித்தியத் தர்ப்பணத் தலமாக அன்னவாசல் பிரசித்தி பெற்றிருந்தது. இத்தலத்தில் நித்திய அன்னாபிஷேகம், நித்தியத் தர்ப்பணத்திற்கென ஆயிரக்கணக்கானோர் தினமும் வருவர் ஆனால் இன்றைய நிலை? அன்னவாசல் அன்ன பூர்ணேஸ்வரர் கோயிலில் தற்போது நித்திய பூஜையும் அன்னப் படையலும் இல்லை. ஆலயமும் பெரிதும் பழுதடைந்து உள்ளது. படியளந்த பரமனை மறவாத சிலர் அவ்வப்போது விளக்கேற்றி வருகின்றனர். தேவர்க்களும், முனிவர்களும், அரசர்களும், பல லட்சம் மக்களும் தொழுத சிவத்தலத்திற்கு இந்த நிலையா? என எண்ணும்போதே உள்ளம் குமைகிறது. கிழக்கு நோக்கிய கோயில் பொலிவிழந்து பழுதடைந்து நிற்கிறது. பிற சன்னதிகள் விரிசல் விழுந்து இன்றோ நாளையோ எனும் நிலைகண்டு மனம் பதறுகிறது. இறைவன் கிழக்கு நோக்கிய கருவறையில் உள்ளார். இறைவிக்கு தெற்கு நோக்கிய கோயில் இருந்தது, அதனை ஒட்டி நடராஜனுக்கும் ஒரு கருவறை இருக்கிறது. இறைவன் கருவறையிலேயே பிற தெய்வங்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இடம் பொருள் காலமும் அவனே.. பெரும் பிரசித்தி பெற்ற கோயில் இன்று ஆங்காங்கே கற்குவியலாய் இன்று குவிந்து கிடப்பது ஏன்? நம்மை சோதிக்கவே இறைவன் இவ்வாறு ஏதிலியாய் நிற்கிறான். சிவாலயத் திருப்பணிகளுக்கும் தூய சிவாச்சாரியார்களுக்கும் பொருள் கொடுப்பதால் சிவஞானம் உண்டாகும், எந்நாளும் நரகத்தில் வீழ் மாட்டார்கள் என திருமந்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. நான், எனது என்பதே நிலையாமையின் இரு கூறுகள். கோடிக்கணக்கில் பொருள் கொடுத்தான் அவன் கோயிலுக்கென்றே செலவழிப்போம், வாடிய பயிரும் தழைகுமம்மா உங்கள் வம்சத்தை அவன் வாழ வைப்பான். ஊர்கூடி தேரிழுப்போம் வாருங்கள். கும்பகோணம்- திருவாரூர் நெடுஞ்சாலையில் உள்ள குடவாசலில் இருந்து வெறும் இரண்டே கிமி தூரம் தான். # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 -2000ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
–
அருகிலுள்ள பேருந்து நிலையம்
குடவாசல்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி