அகரவல்லம் அகத்தீஸ்வரர் சிவன்கோயில், மயிலாடுதுறை
முகவரி
அகரவல்லம் அகத்தீஸ்வரர் சிவன்கோயில், அகரவல்லம், தரங்கம்பாடி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609 404.
இறைவன்
இறைவன்: அகத்தீஸ்வரர்
அறிமுகம்
மயிலாடுதுறையின் தெற்கில் 8 கிமி தூரத்தில் மங்கைநல்லூர் குறுக்குரோடு உள்ளது. இந்த குறுக்கின் முன்னர் இடது புறம் திரும்பும் சாலை கிளியனூர் செல்கிறது. அந்த சாலையில் இரண்டு கிமீ சென்றால் உள்ளது அகரவல்லம் மற்றும் வடகரை. தற்போது இரு ஊர்களும் ஒன்றாக இணைந்துவிட்டது என்றே சொல்லலாம். வடகரை பெரும்பான்மை முஸ்லிம் மக்கள் பகுதியாகிவிட்டது. அகரவல்லம் அதன் தாக்கத்தினை எதிர்கொண்டு உள்ளது. இந்த அகரவல்லம் அருகில் பெரம்பூர் எனும் ஒரு முருகர் தலம் உள்ளது. பல நூற்றாண்டுகள் பழமையானது, அக்கோயிலின் கல்வெட்டுக்களில் இந்த அகரவல்லம் பற்றி குறிப்பிடப்படுகிறது. அக்கோயிலின் பூசகர்களாக இருந்த அந்தணர்களுக்கு இந்த அகரவல்லம் ஊர் தானமாக வழங்கப்பட்டிருக்கலாம். அதனால் தான் அகர – வல்லம் எனப்படுகிறது என்பது ஒரு யூகம். தற்போதுள்ள கோயில் நாயக்க மன்னர்கள் காலத்தினை சேர்ந்ததாக இருக்கலாம். அதனால் முந்நூறு முதல் நானூறு ஆண்டுகள் பழமையானது என கூறலாம். பல பெருமைகளும் கொண்ட இத்தலத்தின் இன்றைய நிலை மனதை கலங்க வைப்பதாக உள்ளது. கருவறை மேல் மரங்கள் முளைத்துள்ளன. முகப்பு மண்டபம் இடிந்து அதன் சுவர்கள் விரிசல் கண்டு எப்பக்கம் சாயலாம் என இடம் தேடிக்கொண்டுள்ளது. இறைவன் அகத்தீஸ்வரர் கிழக்கு நோக்கிய கருவறையும், இறைவி தெற்கு நோக்கிய கருவறையும் கொண்டுள்ளனர். இறைவனின் முன்னர் ஒரு கூம்புவடிவ மண்டபம் இருந்து முற்றிலும் இடிந்து வீழ்ந்து அதிலிருந்த நந்தி வானம் பார்க்கிறது. இறைவன் கருவறை வாயிலில் விநாயகர் மற்றும் முருகன் உள்ளனர். உருவாக்கிய முன்னோர்கள் நேரில் கண்டால் மனதில் ரத்தம் வடியக்கூடும். ஒன்றல்ல நூறல்ல ஆயிரக்கணக்கான செங்கல் சுண்ணம், உடலுழைப்பு இத்தனையும் கண்முன்னே மண்ணாகிக்கொண்டுள்ளது.
புராண முக்கியத்துவம்
இந்த பிரபஞ்சத்திற்கு நல்வாழ்வு நெறிகளை போதித்ததால் அகஸ்தியர் என்றும் அழைக்கப்படுகிறார். கஸ்தம் என்றால் பாவம். அகஸ்தம் என்றால் பாவத்தை நீக்குதல். கர்ம வினையினால் நாம் செய்த பாவங்களை நீக்குவதால் அகஸ்தியர் என்றும், எந்தவிதமான நஞ்சானாலும், அதை நீக்கி வெளியேற்றும் தன்மையுடைய அகத்தி மரத்துக்கு ஒப்பான வைத்தியர் என்தால் அகத்தியர் என்றும் அழைக்கப்படுகிறார். ரிக் வேத காலத்திலேயே அகத்தியர் இருந்ததால் அவர் வழிபட்ட இந்த தலம் எவ்வளவு தொன்மை உடையது என கூற இயலாது. கோயிலின் எதிரில் எட்டு ஏக்கருக்கும் அதிகமான பெரிய குளம் ஒன்று உள்ளது. குளம் என்பது கோயிலின் பிரபஞ்ச சக்தியை ஈர்க்கும் கண்ணாடி எனலாம், அதனால் கோயில் சிறிதாய் இருந்தாலும் பெருமளவில் சக்தியை ஈர்த்து வைத்திருக்கும் மின்கலனுக்கு ஒப்பானது. தென்னகம் வந்த அகத்தியர் 108 தலங்களை வழிபட்டதாக கூறுவர், அதில் இந்த அகரவல்லம் திருத்தலமும் ஒன்று. 1970க்கு பின் உள்ள ஐம்பது ஆண்டுகளில் இந்த சிதைவு ஏற்பட்டுள்ளது என்பது இக்கால கட்டத்தில் வாழும் நம் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும் அவ பெயர் என்றால் மிகையல்ல. இறைவன் இத்தைகைய தருணங்களில் ஒருசிலருக்கு புனர்நிர்மாணம் செய்யும் பேற்றை கொடுப்பான். அப்படி ஒரு பேறு பெற்றவர்தான் இவ்வூரின் பஞ்சாயத்து துணை தலைவர் மணிவண்ணன் அவர்கள், நான் சென்றிருந்த அன்று ஒரு மண்வாரி இயந்திரம் மூலம் கோயில் வளாகம் சுத்தப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்தனர்.. விரைவில் திருப்பணியையும் ஆரம்பிக்க எண்ணியுள்ளோம் என கூறினார். அந்த வரலாற்று நிகழ்வில் பங்கு பெற அவரை கைபேசியில் அழையுங்கள். . பொருள் கொடுக்க இயன்றோர் பொருளும், சிக்கனமாக பொருள் எங்கே எவரிடம் வாங்கலாம் என நல்வழியும் இவருக்கு காட்டலாம். மயிலாடுதுறை சாலையில் செல்வோர் நேரிலும் ஊக்கப்படுத்தி மகிழலாம் . மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்ததாக கருதப்படும் அகத்தியரின் பிறந்த தினத்தில் இத்தலம் வந்து வழிபடுவது சிறப்பு. # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அகரவல்லம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி