Thursday Nov 21, 2024

ஹரிகேசவநல்லூர் அரியநாதர் கோயில், திருநெல்வேலி

முகவரி :

ஹரிகேசவநல்லூர் அரியநாதர் கோயில்,

ஹரிகேசவநல்லூர், அம்பாசமுத்திரம் வட்டம்,

திருநெல்வேலி மாவட்டம் – 627426.  

இறைவன்:

அரியநாதர்

இறைவி:

பெரியநாயகி

அறிமுகம்:

காவிரி ஆற்றின் இரு கரைகளிலும் எண்ணற்ற ஆலயங்கள் இருப்பதைப் போன்று, தாமிரபரணி இருகரைகளிலும் அருமையான ஆலயங்கள் பல அமைந்துள்ளன. இவற்றில் ஒன்றுதான் அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள அரிகேசவநல்லூர், தற்போது ஹரிகேசவநல்லூர் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள பெரியநாயகி சமேத அரியநாதர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும்.இந்த அரியநாதர் திருக்கோயில், சுமார் 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாகும். குபேரன், இத்தலம் வந்து சிவனை வழிபாடு செய்திருக்கிறார். இங்கே சனீஸ்வரனின் மனைவி ஜோஷ்டா தேவிக்கும் தனி சந்நதி அமைந்துள்ளது.

இந்த நாட்களில் வெளியூரிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து இங்கு வழிபாடு செய்கின்றனர். திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி அம்பாசமுத்திரம் சாலையில் வீரவநல்லூருக்கும் முக்கூடலுக்கும் இடையே ஹரிகேசவநல்லூர் அமைந்துள்ளது. மிகத் தொன்மையான இந்த கோயிலின் புனருத்தாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஜூலை 5-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

சிறப்பு அம்சங்கள்:

அரிகேசரி என்ற பாண்டிய மன்னன் இந்த ஆலயத்தைக் கட்டியதால், மன்னன் பெயரால் இவ்வூர் ஹரிகேசவநல்லூர் என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆலயத்தின் முகப்பில் கோபுரம் எதுவும் இல்லை. உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவைகளை அடுத்து மண்டபத்திற்குள் உள்ளே நுழைந்தால், ஆகம கோயிலுக்குரிய சூரியன், சந்திரன், ஜூரதேவர், தட்சிணாமூர்த்தி, பைரவர் போன்ற அனைத்துப் பரிவார தேவதைகளுக்கும் சந்நதிகள் உள்ளன. அரியநாதர் ஆலயத்தில் இறைவனுக்குத் தனிக் கோயிலும், அந்த ஆலயத்தின் வடகிழக்கில் இறைவி பெரியநாயகி அம்மனுக்கு விமானத்துடன் கூடிய தனிக் கோயிலும் அமைந்துள்ளன.

தேவியின் ஆலயம் பிற்காலத்தில் தனியே கட்டப்பட்டதாக தெரிகிறது. பெரிய என்ற அடைமொழிக்கேற்ப, பெரிய திருமேனியோடு இறைவி பெரியநாயகி காட்சி தருகிறாள். சுமார் ஏழு அடி உயரமான இறைவியின் சிலை கலை நுணுக்கமும், வனப்பும் மிக்கது.இங்குள்ள தட்சிணாமூர்த்தி, மிகச் சிறப்பு வாய்ந்தவர். இடக்காலை வலது காலின் மீது மடித்து வைத்தபடி தோற்றமளிக்கிறார். பின்னிரு கரங்களில் மானும் மழுவும் ஏந்தி இருக்கிறார். இந்த ஆலயத்தில் குருப் பெயர்ச்சி விழா மிக சிறப்பாக நடைபெறுகிறது.

இவை அனைத்தையும்விட முக்கியமானது, ராவணன் தனது சகோதரன் குபேரனிடமிருந்த செல்வங்களை எல்லாம் பிடுங்கிக்கொண்டு அவனது புஷ்பக விமானத்தையும் அபகரித்துக்கொண்டு துரத்தி அடித்தபோது, அவர் ஹரிகேசவநல்லூரில் வந்து விழுந்தாராம். அவர் ஸ்தாபித்த லிங்கம்தான் ஹரிகேசவநல்லூர் சிவனாவார். குபேரன், இந்த சிவனை போஜித்துதான், தான் இழந்த செல்வத்தை எல்லாம் திரும்ப பெற்ற தலம் என்பதால், இந்த ஹரிகேசவநல்லூர் சிவன்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகத் திகழ்கிறது.

கடன் தொல்லை இருப்பவர்கள், செல்வ வளம் வேண்டுபவர்கள், இங்கு வந்து குபேரன் பூஜை செய்வதால், வாழ்வில் எல்லா வளங்களும் உண்டாகும் என்று நம்பப்படுகிறது. வெளிச் சுற்று பிராகாரத்தில் சனீஸ்வரனின் மனைவி ஜோஷ்டா தேவி தனது மைந்தன் மாந்தியை மடியில் வைத்துக்கொண்டு சந்நதி கொண்டிருக்கிறாள். சாதாரணமாக ஜேஷ்டா தேவியின் சந்நதியை, சிவாலயங் களில் காண முடியாது.

ஆனால், இக்கோயிலில் பெரிய திருவுருவத்துடன் சந்நதி கொண்டிருக்கிறாள் ஜேஷ்டாதேவி. இங்கு சந்நதி கொண்டு அருள் பாலிப்பதால், இது சனீஸ்வரர் பரிகாரத்தலமாகவும் வழிபடப் படுகிறது. அதே போல, வடக்குச் சுற்றில் இறைவன் சந்நதிக்கு வடகிழக்கு செல்வத்தின் அதிபதியான குபேரனின் மிகப் பெரிய கற்சிலை காணப்படுகிறது.

வலக்கையில் கதையை ஏந்தி இடக்கையை மடித்த காலின் மீது வைத்துக் கொண்டு சுமார் 4 அடி உயரத்தில் மிகப் பெரிய உருவமாக குபேரன் காட்சியளிக்கிறார். இங்கே குபேரன் எழுந்தருளியிருக்கும் காரணத்தால், ஒரு காலத்தில் இந்த ஊர் அழகாபுரி என்னும் பெயரால்கூட அழைக்கப்பட்டதாம். இந்த குபேரனுக்கு தீபாவளி மற்றும் அட்சய திருதியை நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

காலம்

1600 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஹரிகேசவநல்லூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

அம்பாசமுத்திரம், திருநெல்வேலி

அருகிலுள்ள விமான நிலையம்

தூத்துக்குடி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top