ஸ்ரீநகர் சங்கராச்சாரியார் கோயில், ஜம்மு காஷ்மீர்
முகவரி
ஸ்ரீநகர் சங்கராச்சாரியார் கோயில், ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீர் – 190001
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
சங்கராச்சாரியார் கோயில் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரிக் கரையில் உள்ள சங்கராச்சாரியார் மலையில் 1000 அடி உயரத்தில் அமைந்த, சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். இந்துக்கள் இக்கோயிலை ஜோதிஷ்வரர் கோயில் என்றும், பௌத்தர்கள் பாஸ்-பாஹர் என்றும் அழைப்பர்.
புராண முக்கியத்துவம்
சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயில் கி.மு 200 ஆண்டுகளுக்கு முந்தையது என கணித்திருந்தாலும், இக் கோயிலின் தற்கால அமைப்பு கி.பி 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது எனக் கருதப்படுகிறது. இமயமலையில் உள்ள புனித தலங்களுக்கு ஆதிசங்கரர் சுற்றுப்பயணம் சென்ற போது, ஸ்ரீநகரில் உள்ள இக்கோயிலுக்கும் சென்று சிவலிங்கத்தை தரிசித்துள்ளார். எனவே இக்கோயில் சங்கராச்சாரியார் கோயில் என அழைக்கப்படுகிறது. மேலும் இத்தலத்தை பௌத்தர்களும் புனித தலமாக கருதுகிறார்கள். 19ஆம் நூற்றாண்டில் சீக்கியப் பேரரசு காலத்தில் இத்தலத்து சிவலிங்கத்தைப் புதுப்பித்துள்ளனர். பண்டிதர் ஆனந்த கௌலின் (1924) கூற்றுப் படி, இக்கோயில் காஷ்மீரை ஆண்ட இந்து மன்னர் சண்டிமன் என்பவரால், கிமு 2629 – 2564க்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டதாக அறியப்படுகிறது. காஷ்மீர் மன்னர்கள் கோபாதித்தியன் (கிமு 426 – 365) மற்றும் லலிதாத்தியன் (கி மு 697 – 734) காலத்தில் இக்கோயிலைத் திருப்பணி செய்துள்ளனர். சிக்கந்தர் பட்ஷிகான் எனும் இசுலாமிய மன்னர் இக்கோயிலை இடித்ததாகவும், நிலநடுக்கத்தில் சிதைந்த இக்கோயிலின் கூரைகளை ஜெனுலாபீத்தீன் என்பவர் சீரமைத்தாகவும், சீக்கியப் பேரரசின் காஷ்மீர் ஆளுநர் குலாம் மொய்னூதீன் உத்தீன் (1841–46), இக்கோயில் கோபுரத்தை செப்பனிட்டுள்ளனர். டோக்ரா வம்ச மன்னர் குலாப் சிங் (1846–1857) காலத்தில், ஆயிரம் அடி உயரமுள்ள இம்மலைக்கோயிலுக்குச் செல்ல படிக்கட்டுகள் கட்டிக் கொடுத்துள்ளார். 1961இல் துவாரகை மடாதிபதி இக்கோயிலிலின் கருவறையின் முன் ஆதிசங்கரரின் பளிங்குக்கல் சிலையை நிறுவியுள்ளார். ஆதிசங்கரர் பிரம்ம சூத்திரத்திற்கு விளக்க உரை எழுத வேண்டி, அதற்கான மூலச் சுவடிகளை தேடி காஷ்மீரின் சாரதா பீடத்திற்குச் சென்றார். பின்னர் கோபாத்திரி மலையில் உள்ள சிவபெருமானை தரிசித்து, சௌந்தர்ய லகரி எனும் அம்பாள் தோத்திரப் பாடலை இக்கோயிலில் பாடினார்.
காலம்
9 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஸ்ரீநகர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஸ்ரீநகர்
அருகிலுள்ள விமான நிலையம்
ஸ்ரீநகர்