வைப்பூர் ஜம்புநாதர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி :
வைப்பூர் ஜம்புநாதர் சிவன்கோயில்,
வைப்பூர், திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610101.
இறைவன்:
ஜம்புநாதர்
இறைவி:
அகிலாண்டேஸ்வரி
அறிமுகம்:
திருவாரூர்- நாகூர் சாலையில் 14 கிமீ தூரத்தில் உள்ளது வைப்பூர் கிராமம். வைப்பூர் சிவாலயம் கிழக்கு நோக்கி இருப்பினும் பிரதான வாயில் தென்புறமே உள்ளது, அழகிய சுதைவேலைகள் கொண்டவாயில் உள்ளது. கிழக்கு நோக்கிய இறைவன் கருவறை மட்டும் கருங்கல்லால் கட்டப்பட்ட சோழர்கால கட்டுமானமாக உள்ளது. இறைவன் ஜம்புநாதர், இறைவி அகிலாண்டேஸ்வரி தெற்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார். கருவறை கோட்டத்தில் தென்முகன், லிங்கோத்பவர், பிரம்மன், துர்கை உள்ளனர்.
பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகன் இருவருக்கும் சிற்றாலயங்கள் உள்ளன. விநாயகருக்கு பின்புறம் ஐயப்பனுக்கு தனி ஆலயம் ஒன்று புதிதாக கட்டப்பட்டுள்ளது. சிவனின் பரிவார தெய்வங்களில் ஐயப்பன் கிடையாது என்பதால் இது போன்ற இடைசெருகல்கள் சிவாலயத்தில் கூடாது. வடகிழக்கில் தீர்த்த கிணறு ஒன்றும், தனி மண்டபத்தில் நவகிரகம், நீண்ட மண்டபத்தில் பைரவர் சனி ஆகியோர் உள்ளனர். தனியாக ஒரு லிங்கமும் அதற்கு எதிரில் ஒரு நந்தியும் உள்ளது. கிழக்கில் ஒரு வாயில் உள்ளது கிழக்கில் பெரிய குளம் ஒன்று உள்ளது. மதில் சுவரெங்கும் செட்டிப்பெண்ணின் கதையை ஓவியமாக்கி வைத்துள்ளனர்.
புராண முக்கியத்துவம் :
முன்னொரு காலத்தில் இந்த வைப்பூர் கிராமத்தில் ஒரு வணிகனுக்கு ஏழு பெண்கள் இருந்தனர். முறைப் பையனுக்கு மணம் முடித்துத் தருவதாக கூறிவிட்டு பின் ஆறு பெண்களையும் மாற்றாருக்கு மணம் செய்து கொடுத்தான். சிவபக்தியுடன் வளந்த அவரது ஏழாவது பெண், தந்தையின் போக்கையும் முறைப்பையனின் மன வருத்தத்தையும் கண்டு முறைமாப்பிள்ளையை மணந்து கொள்ள முடிவு செய்து அவனுடன் வீட்டை விட்டு சென்று விடுகிறாள். இருவரும் திருமருகலில் மாணிக்க வண்ணரை வழிபட்டு மடத்தில் தங்கி இருந்தபோது முறைமாப்பிள்ளை பாம்பு தீண்டி இறந்துவிடுகிறான். “வாள் அரவு தீண்டவும் தான் தீண்டகில்லாள்” என நாகம் தீண்டினாலும் அவனைத் தான் தீண்டாமல் ஒழுக்கம் காத்த மங்கை ஆதரவு அற்ற நிலையில் அழுது புலம்பித் துயரம் தீர்த்தருளுமாறு மருகல் ஆண்டவனைத் தொழுதாள்.
அழுகுரல் கேட்டு அங்கு வந்த சம்மந்தரின் திருவடியில் விழுந்து வணங்கிய அப்பெண் நடந்ததை உரைத்தாள். மங்கையின் பக்தியையும் இருவரின் உயர்ந்த ஒழுக்கத்தையும் கண்ட சம்பந்தர் மாணிக்க வண்ணரைத் துதித்துப் போற்றி பதிகம் பாடித் தொழுத போது வணிக மகன் மீண்டும் உயிர் பெற்றான். மங்கையும் வணிகமகனும் பெரிதும் மகிழ்ந்து மருகல் நாதரின் பெருங்கருணையை போற்றி திருஞான சம்பந்தர் திருவடிகளில் விழுந்து வணங்கினர். அடுத்தநாள் தொண்டர்கள் குழாம் வாழ்த்த சம்மந்தர் இருவருக்கும் திருமணம் முடித்து அனுப்பினார். இறந்தவர்க்கு உயிர் கொடுக்க பாடியருளிய சம்மந்தருக்கும் ஏனையோருக்கும் திருநடனக் காட்சி தந்தருளினார் இறைவன்.























காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வைப்பூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி