வேலுக்கு அர்ச்சனை!
ஈரோடு மாவட்டம், வெள்ளக்கோவில் என்ற ஊரில் வீரகுமாரசுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு முருகப் பெருமான் வீரத் தோற்றத்தில் கன்னி குமரனாகக் காட்சி தருகிறார்.
ஆகவே, பெண்கள் கோயிலுக்குள் செல்லும் வழக்கம் இல்லை. மாறாக, ‘குறட்டு வாசல்’ எனப்படும் முன்புற வாசலில் நின்று சப்த கன்னியரையும், வீர குமாரரையும் வணங்கிச் செல்லும் வழக்கம் நீடிக்கிறது.
சூரபதுமன் மனம் திருந்தி மயில் வடிவ மலையாக அமர்ந்து தவம் செய்து அருள்பெற்ற தலம் மயிலம்; திண்டிவனம் அருகிலுள்ளது. இங்கு கருவறை மண்டபத்துக்கு வெளியில் பிரமாண்ட வேலும் மயிலும் இருக்கின்றன.
இங்கு செவ்வாய்க்கிழமை தோறும் காலசந்தி பூஜையின்போது வேலாயுதத்துக்கு அர்ச்சனை செய்கிறார்கள். இப்படி அர்ச்சனை செய்து வழிபடும் பக்தர்களுக்குக் கடன் தொல்லை, பணப் பிரச்னைகள் அகலும் என்பது நம்பிக்கை.
முருகப் பெருமான் கோயில் கொண்டுள்ள எல்லாத் தலங்களிலும் ஆண்டுக்கு ஒரு முறை ஐப்பசி மாதம் சூரசம்ஹார விழா நடைபெறும். ஆனால், திருப்பரங்குன்றத்தில் மட்டும்… ஐப்பசி கந்த சஷ்டி விழா, தை மாதம் தெப்பத் திருவிழா மற்றும் பங்குனி மாதப் பெருவிழாவின் போது… என ஆண்டுக்கு மூன்று முறை சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
தென்காசி அருகே ஆய்க்குடி பாலசுப்பிர மணிய சுவாமி கோயிலில் படி பாயசம் நிவேதனம் செய்வார்கள். 1 படி முதல் 12 படி வரை அரிசி பாயசம் செய்து குழந்தைகளுக்கு வழங்குவர்.
சோலைமலை முருகன் கோயிலில் ஸ்தல விருட்சமாக விளங்கும் நாவல் மரம், புராணச் சிறப்பு மிக்கது. ஒளவையிடம் முருகன், ‘‘சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா’’ என்று கேட்ட நாவல் மரம் இந்தக் கோயிலுக்கு அருகிலேயே உள்ளது. பொதுவாக நாவல் மரம் ஆடி மாதம் பழுக்கும். ஆனால், இங்குள்ள நாவல் மரம் ஐப்பசி மாதம் பழுக்கும் தன்மை உடையது.
திருச்செந்தூரில் மூலவர் முருகன், துறவுக் கோலத்தில் இருப்ப தால் அவருக்குப் படைக்கப்படும் உணவில் உப்பு, புளி, காரம் சேர்க்கப் படுவதில்லை. பெரும்பாலும் சர்க்கரைப் பொங்கலே படைக்கப்படுகிறது. இங்கு ஆறுமுகப் பெருமான் இல்லறக் கோலத்தில் இருப்பதால், அவருக்கு ஆறுமுக அர்ச்சனை முடிந்தபின் பால் பாயசம், தேங்காய் சாதம், புளியோதரை, வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம் ஆகிய ஆறு வகை நிவேதனங்கள் படைக்கப்படுகின்றன.