வீரமாங்குடி வஜ்ரகண்டேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
முகவரி :
அருள்மிகு வஜ்ரகண்டேஸ்வரர் திருக்கோயில்,
வீரமாங்குடி, திருவையாறு,
தஞ்சாவூர் மாவட்டம் – 613204.
+91 94435 86453
காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
இறைவன்:
வஜ்ரகண்டேஸ்வரர்
இறைவி:
மங்களாம்பிகை
அறிமுகம்:
தஞ்சாவூரில் இருந்து 12 கி.மீ., தூரத்திலுள்ள திருவையாறு சென்று, அங்கிருந்து கும்பகோணம் செல்லும் வழியிலுள்ள (7 கி.மீ.,) சோமேஸ்வரபுரம் ஆர்ச் ஸ்டாப்பில் இருந்து 3 கி.மீ., சென்றால் இத்தலத்தை அடையலாம்.
புராண முக்கியத்துவம் :
சாதாரண மனிதனால் மட்டுமே அழிவு உண்டாகும்” என்று வரம் பெற்றிருந்த வஜ்ரன் என்ற அசுரன், தேவர்களைத் துன்புறுத்தினான். தேவர்கள் அவனுடன் சண்டையிட்டும் வெற்றி பெற முடியவில்லை. தேவர்கள், அவனிடமிருந்து தங்களைக் காக்கும்படி, சிவனிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், சிவனடியார் ஒருவரை அசுரனிடம் அனுப்பினார். அவர் அசுரனுடன் போர் வீரன் போல சண்டையிட்டு அழித்தார். இறக்கும் நேரத்தில் தன் தவறை உணர்ந்த அசுரன், சிவனிடம் மன்னிப்பு வேண்டினான். அவனுக்கு அருள்புரிந்த சிவன், அவனது வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார். அசுரனின் பெயரால் “வஜ்ரகண்டேஸ்வரர்” என்றும் பெயர் பெற்றார். வீரனாக வந்த அடியாரால் அசுரன் அழிந்ததால் தலத்திற்கு “வீரமாங்குடி” என்ற பெயர் ஏற்பட்டது.
நம்பிக்கைகள்:
இங்குள்ள நவக்கிரக சன்னதி விசேஷமானது. எண்கோண வடிவ பீடத்தின் மீது, அனைத்து கிரகங்களும் தங்களின் வாகனத்தில், மனைவியுடன் தம்பதியராக அமர்ந்துள்ளனர். இதை, கிரகங்களின் அனுக்கிரக கோலம் என்கின்றனர். நடுவிலுள்ள சூரியன் ஏழு குதிரை பூட்டிய தேரில் காட்சியளிக்கிறார். குரு, சனி, இராகு கேது பெயர்ச்சியால் பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் தோஷ நிவர்த்திக்காக இந்த சன்னதியில் வேண்டிக்கொள்கிறார்கள். ஜாதகத்தில் கிரக தோஷம் உள்ளவர்கள், அந்தந்த கிரகத்திற்குரிய நாள் அல்லது கிரகத்திற்குரிய ஓரை நேரத்தில், புத்தாடை அணிவித்து, தானியம் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள். இதனால், தோஷ நிவர்த்தியாவதாக நம்பிக்கை.
சிறப்பு அம்சங்கள்:
இக்கோயிலுக்கென கோபுரம் கிடையாது. இங்குள்ள அம்பிகை, கன்னிப் பெண்களுக்கு நல்ல வாழ்க்கையையும், திருமணமான பெண்களுக்கு சுமங்கலி பாக்கியத்தையும் தருபவளாக இருக்கிறாள். எனவே, இவளுக்கு “மங்களாம்பிகை” என்று பெயர் சூட்டியுள்ளனர். புதுமணத் தம்பதியர் தங்கள் வாழ்க்கை குறையின்றி இருக்க, இந்த அம்பிகைக்கு புடவை, மஞ்சள் கயிறு அணிவித்தும், மஞ்சள் கிழங்கு, மஞ்சள் பொடிகளை சன்னதியில் வைத்தும் வழிபடுகின்றனர். இதனால், அவர்களது வாழ்வு மங்களகரமாக இருக்கும் என்பது நம்பிக்கை.
கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தி, வலக்கையில் அபய முத்திரை காட்டி, இடது கையை தொடையில் வைத்தபடி பிரகாரத்தில் வரதராஜர் இருக்கிறார். இவருக்கு எதிரே நிற்கும் கருடாழ்வார், இடது புறமாக சாய்ந்து வணங்கியபடி இருக்கிறார். இதை, பெருமாளின் வாகனமாக இருக்கும் நிலையை எண்ணி, கருடாழ்வார் ஆனந்தமாக இருக்கும் நிலை என்கிறார்கள். வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சி குடி கொண்டிருக்க விரும்புவோர், பெருமாளையும், இந்த கருடாழ்வாரையும் வணங்குகின்றனர்.
அம்பாள் சன்னதி முகப்பில், கைலாயத்தில் சிவன் விநாயகருக்கு மாங்கனி தந்த வரலாற்றைச் சிற்பமாக வடித்துள்ளனர். இதில், மாங்கனி தராததால் கோபம் கொண்ட முருகன், மயில் மீது பறந்து செல்லும்படியாக அவரது சிலை தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. அம்பிகை அவரை சமாதானப்படுத்தும் விதமாக, கைகளை உயர்த்தி அழைக்கும் நிலையில் இருக்கிறாள். அருகில் நாரதர் இருக்கிறார்.
திருவிழாக்கள்:
சிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை.
காலம்
500 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வீரமாங்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
தஞ்சாவூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி