Tuesday Jan 28, 2025

வில்லியனூர் கங்கை வராக நதீஸ்வரர் கோயில், பாண்டிச்சேரி

முகவரி :

வில்லியனூர் கங்கை வராக நதீஸ்வரர் கோயில்,

வில்லியனூர்,

பாண்டிச்சேரி – 605110.

இறைவன்:

கங்கை வராக நதீஸ்வரர்

இறைவி:

ஸ்ரீகாமாட்சி, ஸ்ரீமீனாட்சி

அறிமுகம்:

சங்கரனுக்கு ஆபரணம் போன்றவள்’ என்ற பொருளில் ‘சங்கராபரணி’ என்ற பெயர்கொண்டு, செஞ்சி என்னும் இடத்தில் தோன்றி, விழுப்புரம் மாவட்டம் வழியாகத் தவழ்ந்தோடி, புதுச்சேரிக்கு அருகில் கடலில் சங்கமிக்கும் ஆறுதான் சங்கராபரணி. ஆற்றின் கரையில் எண்ணற்ற புராதனமான திருத்தலங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் திருக்காஞ்சி அருள்மிகு கங்கை வராக நதீஸ்வரர் திருக்கோவில்.   மனிதர்களின் பிறவிப் பிணியைப் போக்கிப் பேரின்பப் பெருவாழ்வை அருளவுமே, ‘திருக்காஞ்சி’ என்னும் தலத்தில் அருள்மிகு கங்கைவராக நதீஸ்வரர் என்னும் திருப்பெயருடன் சோடஷ லிங்க வடிவத்தில் அருள்புரிகிறார் சிவனார். பாண்டிச்சேரி – விழுப்புரம் சாலையில் வில்லியனூர் என்ற இடத்தில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருக்காஞ்சி திருத்தலம். வில்லியனூரில் இருந்து ஷேர் ஆட்டோ வசதி உண்டு. 

புராண முக்கியத்துவம் :

 ஆலயத்தில் இறைவன் மேற்கு நோக்கிக் காட்சி தருகிறார். சகல வியாதிகளையும் போக்கும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது இந்தத் தலம். மேலும், இத்தலம் காசிக்கு நிகராகப் போற்றப்படுவதன் பின்னணியில் வேறொரு சம்பவமும் சொல்லப்படுகிறது. வேத விற்பன்னர் ஒருவர், தன் தந்தைக்கு நீத்தார் கடன் செய்ய அஸ்தியைக் காசிக்குக்கொண்டு சென்றதாகவும், அவர் திருக்காஞ்சியை அடைந்த போது, மண் பானையில் இருந்த அஸ்தி பூக்களாக மாறியதாகவும் சொல்லப்படுகிறது. முற்காலத்தில் காசி, ராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் திருக்காஞ்சி தலத்துக்கும் வந்து வழிபாடுகள் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததார்களாம்.

காசியில் ஸ்ரீவிசாலாட்சி, ஸ்ரீஅன்னபூரணி ஆகியோர் அருள்வது போலவே, காசிக்கு நிகரான திருக்காஞ்சி தலத்திலும் ஸ்ரீகாமாட்சி, ஸ்ரீமீனாட்சி ஆகியோர் அருட்காட்சி தருகின்றனர். சுவாமி சந்நிதியின் வலப்புறம் அன்னை காமாட்சி, தெற்கு நோக்கி திருக்காட்சி தர, அன்னை மீனாட்சி தனியாகக் கிழக்கு நோக்கி திருக்காட்சி தருகிறாள்.

மேலும், கோயிலில் பரிவார மூர்த்தங்களாக ஸ்ரீவிநாயகர், வள்ளி தேவசேனா சமேத முருகப் பெருமான், ஸ்ரீவிஷ்ணு துர்கை,  ஸ்ரீதட்சிணா மூர்த்தி, ஸ்ரீபைரவர், ஸ்ரீலட்சுமிவராகப் பெருமாள், ஸ்ரீஅகத்தியர், நவகிரகங்கள் ஆகியோரும் அமைந்திருக்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்:

வடக்கு நோக்கி உத்தரவாகினியாக சங்கராபரணி பாய்வதால், இந்த ஆறு கங்கைக்கு நிகராகவும், இந்தத் தலம் காசிக்கு நிகரான தலமாகவும் போற்றப் படுகிறது. அதன் காரணமாகவும் சங்கராபரணி என்னும் வராக நதியின் கரையில் கோயில் கொண்டிருப்பதாலும் இந்தத் திருத்தலத்து இறைவன் அருள்மிகு கங்கை வராக நதீஸ்வரர் என்று அழைக்கப் படுகிறார். மேலும் இந்த இறைவன் அகத்திய மகரிஷியால் பிரதிஷ்டை செய்து வழிபடப்பெற்றவர் என்பதால், இந்தக் கோயில் அகத்தீஸ்வரம் என்னும் பெயரிலும் போற்றப்படுகிறது.

இந்த ஆற்றின் கரையில் குபேரவர்மன், கேசவ வர்மன், நாகேந்திரன், கமலன், வியூக முனி, மங்கலன் முதலான நவசித்தர்களின் ஜீவசமாதிகள் இருந்ததா கவும், தலத்தின் ஈசான்ய மூலையில் சித்த புருஷர்களான ஸ்ரீகங்காதர சுவாமிகளுக்கும் ஸ்ரீசதாசிவ சுவாமிகளுக்கும் அதிஷ்டானங்கள் இருந்துள்ள தாகவும் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

வில்லியனூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

வில்லியனூர்

அருகிலுள்ள விமான நிலையம்

பாண்டிச்சேரி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top