Monday Jan 20, 2025

வள்ளியூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில், திருநெல்வேலி

முகவரி :

சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்,

வள்ளியூர், ராதாபுரம்,

திருநெல்வேலி மாவட்டம் – 627 117

தொலைபேசி: +91 – 4637 – 222888

இறைவன்:

சுப்ரமணிய சுவாமி

இறைவி:

வள்ளி, தெய்வானை

அறிமுகம்:

        மலையைக் குடைந்து, குடைவரைக் கோயிலாகக் கட்டப்பட்ட தலம் இது. சுமார் 1500 வருடங்களுக்கு முந்தைய ஆலயம் என்பதை, கற்களும் கட்டுமானப் பணிகளும் தெரிவிக்கின்றன. திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் செல்லும் வழியில், சுமார் 42 கி.மீ. தொலைவில் உள்ளது வள்ளியூர். இங்கே, குன்றின் மேலே கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீசுப்ரமண்யர். வேலாண்டித் தம்பிரான் சுவாமிகள், அருணாசலம் பிள்ளை ஆகியோர் திருப்பணிகள் மேற்கொண்டதாகத் தெரிவிக்கும் கல்வெட்டுகள் உள்ளன. மிகப் புராதனமான, சாந்நித்தியம் நிறைந்த திருக்கோயில் என்று சிலாகிக்கிறார்கள் பக்தர்கள்.

நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் வள்ளியூர் அமைந்துள்ளது. வள்ளியூரில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் வள்ளியூர் முருகன் கோயில் அமைந்துள்ளது. வள்ளியூர் ரயில் நிலையத்தின் மிக அருகில் இந்த கோயில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

புராண முக்கியத்துவம் :

       இந்திரன், அகத்திய முனிவர், அருணகிரிநாதர், இடைக்காட்டு சித்தர் ஆகியோர் இங்கு வந்து நெடுங்காலம் தங்கி, ஸ்ரீசுப்ரமண்யரை வழிபட்டு, வரம் பெற்றுள்ளனர் என்கிறது ஸ்தல புராணம். வண்ணச்சரபம் தண்டபாணி தேசிகர் சுவாமிகள், இங்கே உள்ள ஸ்ரீசுப்ரமண்யரின் அழகில், சொக்கிப் போய் மனமுருகி பல பாடல்கள் பாடி அருளியுள்ளார். வள்ளியை மணம் முடித்த முருகப்பெருமான், மகேந்திரகிரி மலைக்கு கிழக்கு புறமுள்ள மலைக்குன்றில் தனிக்குடித்தனம் நடத்தியதால் அந்த தலம் வள்ளியூர் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

முன்னொரு காலத்தில் கிரவுஞ்ச அசுரன் மலை உருவில் இருந்தான். அகத்தியரின் சாபம் காரணமாக முருகப்பெருமானின் வேல் பட்டு அந்த மலை 3 துண்டுகளாக சிதறியது. அந்த அசுரனின் தலைப்பாகம் தான் வள்ளியூர் குன்று என்றும் புராணத்தகவலில் கூறப்பட்டுள்ளது. அந்த குன்றில் முருகப்பெருமான் வசித்ததால் அது பூரணகிரி என்று அழைக்கப்பட்டது. முருகப்பெருமான் வள்ளியுடன் பூரணகிரியில் இருப்பதை அறிந்த அகத்தியர் அங்கு வந்து முருகப்பெருமானை வணங்கினார். முருகனும் அகத்தியருக்கு குரு ஸ்தானத்தில் கிழக்கு முகமாக நின்று நான்மறை பொருளுரைத்தார். அகத்தியரும் மேற்கு முகமாக மாணவன் ஸ்தானத்தில் நின்று நான்மறை பொருளை உபதேசம் பெற்று பூரணகிரியை வலம் வந்தார். அப்போது குகையின் தெற்கு புறத்தில் தெய்வானை சோகத்துடன் நிற்பதை கண்டு அகத்தியர் திடுக்கிட்டார். முருகப்பெருமானை காணவந்த தன்னை வள்ளி அனுமதிக்காததால் வெளியே நிற்பதாக கூறி மனம் வருந்தினாள் தெய்வானை.

அகத்தியரும் தெய்வானையை வள்ளியிடம் அழைத்துச்சென்று வள்ளிதெய்வானை ஆகிய இருவரின் முந்தைய பிறவியை எடுத்துக்கூறினார். அதன்படி இருவரும் சகோதரிகள் என்பதை அறிந்ததும் அவர்கள் சண்டைபோடுவதை நிறுத்திக்கொண்டு முருகப்பெருமானின் இருபுறமும் நின்று அகத்தியருக்கு அருள்பாலித்தனர். இப்படிப்பட்ட சிறப்பு கொண்ட வள்ளியூர் தலம் நெல்லை மாவட்டத்தில் பெரிய குகைக்கோயிலாக கருதப்படுகிறது.

நம்பிக்கைகள்:

இங்குள்ள குமரனையும் வள்ளிதெய்வானை தேவியரையும் வணங்குவோர் நல்லறிவும் ஞானமும் பெற்று சர்வ நலமுடன் வாழ்வர் என்பது நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்:

பிற கோயில்களில் முருகன் குன்றின் மேல் நின்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆனால் இங்கு குன்றுக்குள் இருந்து அருள்பாலிக்கிறார் என்பது விசேஷம். கோயிலின் கருவறையில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் பக்தர்களுக்கு அருளாசி வழங்கிக்கொண்டிருக்கிறார். தேவரூபமாயிருந்து முருகனை பிம்பரூபமாக இருக்க தேவேந்திரன் வேண்டினார். முருகனும் பிம்பரூபமாக தன் இருதேவியருடன் காட்சி தந்தார். தேவேந்திரனும் பிம்ப பிரதிஷ்டையை ஆகம முறையில் செய்து முருகனை வணங்கினார். அப்போது முருகப்பெருமான் வள்ளியுடன் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று தெப்பத்தில் காட்சி கொடுத்தார். அதுவே இன்றும் தெப்பத்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அதேபோல வள்ளியின் வேண்டுகோளின்படி முருகப்பெருமான் தன் கைவேலை ஊன்றி புனித தீர்த்தத்தை உருவாக்கினார். அதுவே சரவணப்பொய்கை என்று அழைக்கப்பட்டு வருகிறது.

கனகவல்லி என்ற பெண்ணும், ஒரு வேடனும் தாங்கள் செய்த பாவத்தால் நாயாய் பிறந்தனர். அவர்கள் இருவரும் இந்த சரவணப்பொய்கையில் மூழ்கி முக்தி பெற்றார்கள் என்று கூறுகிறது தலப்புராணம். இங்குள்ள குமரனையும் வள்ளிதெய்வானை தேவியரையும் வணங்குவோர் நல்லறிவும் ஞானமும் பெற்று சர்வ நலமுடன் வாழ்வர் என்பது நம்பிக்கை.

வள்ளியூரை ஆண்டு வந்த அற்பகன் என்ற அரசன் தனது மனைவி மகாபாகையுடன் மகேந்திரகிரியில் குழந்தை வேண்டி தவம் செய்தான். அங்குவந்த பரசுராமர் வல்லிக்கொடி ஒன்றை அந்த அரசனிடம் கொடுத்தார். அந்த கொடி பெண் குழந்தையாக மாற அந்த குழந்தையை கொண்டு வந்து வல்லி என்ற பெயரிட்டு வளர்த்து வந்தனர். பெண் குழந்தை பருவமடைந்த பின்னர் அரச முறைப்படி முருகன் வள்ளியின் அம்சமாகிய வல்லியை மணம் செய்தார். இந்நகரை வல்லி ஆண்டதால் வல்லி மாநகரம் என்றும் அழைத்தார்கள்.

திருவிழாக்கள்:

வள்ளியூர் தலத்தில் சித்திரை மாதம் அசுவதி நட்சத்திரத்தில் கொடியேறி 10 நாட்கள் திருவிழா நடைபெறும். 9வது நாளில் தேரோட்டம் நடைபெறும். வைகாசி விசாகத்தின் வசந்தம் திருவிழா 10 நாட்களும், கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை தெப்பத்திருவிழாவும் நடைபெறும்.

காலம்

1500 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

வள்ளியூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

வள்ளியூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருவனந்தபுரம், மதுரை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top