வடுகக்குடி காசிவிஸ்வநாதர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
வடுகக்குடி காசிவிஸ்வநாதர் சிவன்கோயில்,
வடுகக்குடி, திருத்துறைபூண்டி வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610207.
இறைவன்:
காசிவிஸ்வநாதர்
இறைவி:
விசாலாட்சி
அறிமுகம்:
திருவாரூரில் இருந்து 17கிமீ தூரத்தில் உள்ள பாங்கல் தாண்டியதும் இடதுபுறம் ஒரு சிறிய சாலை செல்கிறது அதில் ஒரு கிமீ தூரம் சென்றால் வடுகக்குடி அடையலாம். தமிழக வரலாற்றில் விஜயநகர நாயக்க மன்னர்கள் அனைவரும் வடுகர்கள் என்றே குறிப்பிடப்பட்டனர், அவர்கள் ஆண்ட ஊர்களின் பெயர்களிலும் ‘வடுகு’ என்றச் சொல்லைக் காணலாம். அதன்படி அம்மக்கள் குடியிருந்த இடமான இவ்வூர் வடுகக்குடி என்றானது.
ஒரு பெரிய குளத்தின் கரையில் மேற்கு நோக்கியபடி உள்ளார் இந்த வடுகபைரவர். கிழக்கு நோக்கிய இறைவனாக காசிவிஸ்வநாதர் உள்ளார். தெற்கு நோக்கியபடி அம்பிகை விசாலாட்சி உள்ளார். சிதைவுற்ற இக்கோயில் மீண்டும் எழும்பி உள்ளது. அதிலிருந்த நந்தி மற்றும் சில சிலைகள் ஆங்காங்கே கிடக்க காணலாம். இறைவன் கருவறை வாயிலில் வினாயகர்ர் மற்றும் பாலமுருகன் உள்ளார். கருவறை கோட்டங்கள் என ஏதும் இல்லை தென்புறம முகப்பு மண்டபம் அமைத்து வடபுறத்தில் மாடம் அமைத்து துர்க்கையை அமைத்துள்ளனர். சண்டேசர் தனி சிற்றாலயம் கொண்டுள்ளார். இரு கருவறைகளையும் ஒரு முகப்பு மண்டபம் இணைக்கிறது, அதற்க்கு வெளியில் நீண்ட இடைவெளி விட்டு ஒரு நந்தி மண்டபம் கட்டப்பட்டு உள்ளது. கடந்த 24.8.2020 ல் குடமுழுக்கு கண்டுள்ளது. மடைப்பள்ளி, சுற்று சுவர் பணிகள் இன்னும் நிறைவடையாமல் உள்ளது.
புராண முக்கியத்துவம் :
பிரம்மதேவன் செருக்கடைந்து திரிந்த ஒரு காலம் உண்டு, அப்போது பிரம்மனுக்கு ஐந்து தலைகள் திசைகளின் காவலனாக, படைப்புத் தொழிலின் முதல்வனாக விளங்கியதாலும், ஐந்து தலைகளுடன் அவதரித்ததாலும் சிவபெருமானையே மதிக்கத் தவறினார் பிரம்மன். அதோடு, அனைவரும் தன்னையே முதன்மை படுத்தி வணங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதுகுறித்து சினம் கொண்ட சிவபெருமான் பிரம்மனின் செருக்கை அடக்கத் தீர்மானித்தார். தனது சக்தியால் பைரவரை உருவாக்கி, பிரம்மனின் தலைகளில் ஒன்றைக் கிள்ளி வரும்படி ஆணையிட்டார். பொங்கிய பிரவாகம் போல புறப்பட்ட பைரவர், பிரம்மனின் ஐந்து தலைகளுள் நடுவில் இருந்த ஒரு தலையைத் தன் நகத்தால் கிள்ளி எடுத்தார்.. இந்த பைரவ அம்சமே வடுகதேவர். புராணத்தில் சொல்லப்பட்டத் தகவல் இது. இவர் அமர்ந்த இடங்கள் வடுகன் எனும் முன்னொட்டுடன் விளங்குகின்றன. அதில் ஒன்று தான் இந்த வடுககுடி என்கின்றனர்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வடுகக்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி