Wednesday Dec 18, 2024

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி திருக்கோயில், விழுப்புரம்

முகவரி

அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில், மேல்மலையனூர் – 604 204, விழுப்புரம் மாவட்டம். போன்: +91 – 4145 – 234 291

இறைவன்

இறைவி: அங்காளபரமேஸ்வரி (பார்வதி)

அறிமுகம்

தமிழ்நாட்டில் பல சிறப்புகளைக் கொண்ட ஆலயங்கள் இருக்கின்றன. அந்த வகையில் முக்கியமான திருத்தலமாக விளங்குவது, மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில். அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில், மேல்மலையனூர் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி வட்டத்தில அமைந்துள்ள அம்மன் கோயிலாகும். இக்கோயிலில் அம்பாள் புற்று வடிவில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.இங்குள்ள அங்காள பரமேஸ்வரியை புற்று தேவி என்றே அழைக்கின்றனர்.

புராண முக்கியத்துவம்

ஒரு முறை தட்சன் தன் மகளான தாட்சாயினியை சிவனுக்கு திருமணம் செய்து வைத்தார். உலகநாயகனான சிவனுக்கு மாமனாராகி விட்டதால் தட்சனுக்கு கர்வம் ஏற்பட்டது. சிவனை பார்க்க கைலாயத்திற்கு சென்ற தட்சனை நந்தி தடுத்தார். இதனால் கோபமடைந்த தட்சன், சிவபெருமானை அழைக்காமலேயே யாகம் ஒன்றை நடத்தினார். தன் தந்தைக்கு ஏற்பட்ட கர்வத்தை போக்க, தாட்சாயினி அகோர உருவம் கொண்டு யாகத்தையும், அதை நடத்திய தந்தையையும் அழித்தாள். அத்துடன் அந்த யாகத்திலேயே விழுந்து தன் உடலை அழித்துக் கொண்டாள். அப்படி உருவ மற்ற அவதாரமாக நின்ற அம்சமே அங்காளி சக்தி ஆகும். இதை அறிந்த சிவன் மிகுந்த கோபத்துடன் உருவமற்ற அங்காளியை தனது தோளில் சுமத்தி ஆங்காரமாக நடனம் ஆடினார். அப்போது அங்காளியின் கை துண்டாகி கீழே விழுந்தது. அப்படி விழுந்த இடம் தான் தண்டகாருண்யம் என்ற சக்தி பீடபீ மானது. அந்த தண்டகாருண்யத்தின் ஒரு பகுதியே மேல்மலையனூர் ஆகும். தாட்சாயினி யாகத்தில் விழந்து சாம்பலான இடம் என்பதால் இக்கோயில் பிரசாதமாக சாம்பலைத்தான் தருகிறார்கள்.

நம்பிக்கைகள்

கணவனை பிரிந்திருப்பவர்கள் மற்றும் கணவனின் தொந்தரவுக்கு ஆளாகி இருப்பவர்கள் இங்கு வந்து அங்காளபரமேஸ்வரியை வழிபட்டால் பிரச்னை தீரும் என்பது நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்

அங்காள பரமேஸ்வரி ஆதிபராசக்தியின் அம்சமாக இணைவதற்காக பார்வதி என்ற பெயரில் பர்வதராஜனின் மகளாக பிறந்தார். பின் பரமேஸ்வரனை திருமணம் செய்து கயிலையை அடைந்தாள். முன்பெல்லாம் சிவன், பிரம்மா இருவருக்குமே ஐந்து தலைதான் இருந்தது. திருமணத்தை நடத்திவைத்த பிரம்மா சிவனைப் பார்ப்பதற்காக கயிலை வந்தார். அப்போது ஏதோ குழப்பத்திலிருந்த பார்வதி ஐந்து தலையுடன் வந்தது சிவன் என கருதி, பிரம்மாவின் காலில் விழுந்து ஆசி வாங்கினார். நிமிர்ந்து பார்த்த போது தான் வந்தது பிரம்மா என்பதை உணர்ந்து வருந்தினார். இருவருக்குமே ஐந்து தலை இருப்பதால் தானே இந்த குழப்பம். எனவே பிரம்மனின் ஒரு தலையை எடுத்துவிடும்படி சிவனிடம் பார்வதி வேண்டினாள். பார்வதியின் வேண்டுகோளின்படி சிவனும் பிரம்மனின் ஒரு தலையை கிள்ளி எறிந்தார். இதனால் சிவனுக்கு பிரம்மஹத்திதோஷம் ஏற்பட்டது. சிவனின் பிரம்மஹத்தி தோஷம் போக்குவதற்காகவும், இந்த கலியுகத்தில் மக்களுக்கு அருள் பாலிப்பதற்காகவும் அன்னை பராசக்தி சிவசுயம்பு புற்று வடிவில் அங்காளபரமேஸ்வரியாக மேல்மலையனூரில் அவதாரம் செய்துள்ளார். இவர் வடக்கு நோக்கி அமர்ந்து நம்மை காத்து வருவது ஒர் சிறப்பம்சமாகும். வில்வமே இங்கு தல விருட்சமாகும். சரஸ்வதி சாபம் : தன் கணவனின் ஒரு தலை கிள்ளி எறியப்பட்டதை சரஸ்வதி அறிந்தார். உடனே கோபத்துடன் பார்வதியை பார்த்து சரஸ்வதி, “”எனது கணவர் பிரம்மனின் அகோர உருவத்திற்கு காரணமான நீயும் அகோரமாக போவாய்” என்று சாபமிட்டார். இந்த சாபத்தின் பலனாகத்தான் மேல்மலையனூரில் அகோர உருவத்தில் அங்காளபரமேஸ்வரி என்ற நாமத்தடன் அமர்ந்தாள். சிலகாலம் கழித்து திருவண்ணாமலைக்கு சென்று அங்கு பிரம்மதீர்த்தத்தில் நீராடி சாபம் நீங்கி ஒரு மூதாட்டியின் வடிவம் பெற்று மீண்டும் மலையனூர் வந்து தங்கினார். அதன்பிறகு மலையனூரில் உள்ள மீனவர்கள் அங்காளம்மனுக்கு கோயில் கட்டினார்கள்.

திருவிழாக்கள்

ஆடி வெள்ளிக்கிழமைகளும், நவராத்திரியும், கார்த்திகை தீபமும், தைப் பொங்கலும், மாசி மாத தேர்த்திருவிழாவும் இங்கு முக்கிய திருவிழாக்களாகும்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மேல்மலையனூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

காஞ்சிபுரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top