முல்தான் பிரகலாதபுரி கோவில், பாகிஸ்தான்
முகவரி
முல்தான் பிரகலாதபுரி கோவில், சூரஜ் குந்த் ஷெர்ஷா நகரம், முல்தான், பஞ்சாப், பாகிஸ்தான்
இறைவன்
இறைவன்: பிரகலாதன்
அறிமுகம்
பிரகலாதபுரி கோவில் பாகிஸ்தானிய பஞ்சாபில், முல்தானிலுள்ள பழமையான கோவிலாகும். பிரகலாதன் பெயரிலமைந்துள்ள இக்கோவில் இறைவன் நரசிம்மருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில். இந்தியாவில் அயோத்தியிலுள்ள பாபர் மசூதி தாக்கப்பட்டதன் எதிரொலியாக 1992 இல் பிரகலாதபுரி கோவில் தாக்கப்பட்டது. அதிலிருந்து இக்கோவில் இடிந்தநிலையில் உள்ளது. 1992 ஆம் ஆண்டு நடந்த வன்முறைத் தாக்குதலிலிருந்து இக்கோயில் அழிவுற்ற நிலையில் உள்ளது. 2006 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் இக்கோவில் வளாகத்தில் இசுலாமிய சமயம் தொடர்பான வசதிகளுக்கான கட்டிடங்கள் அமைக்கவும், அன்னதானக் கூடம் அமைக்கவும் அரசால் முடிவு செய்யப்பட்டது. ஆனால் இம்முடிவை சில அரசு சார்பற்ற அமைப்புகளால் எதிர்த்தனர். பாகிஸ்தான் அரசியலமைப்பின்படி, இதர சமய வழிபாட்டிடங்களில் இசுலாமியக் கட்டமைப்புகளை அமைக்க முடியாது என்பதை ஆதாரமாகக் கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தடையுத்தரவு வாங்கப்பட்டது.
புராண முக்கியத்துவம்
முல்தான் அரசன் இரணியகசிபுவின் மகனான பிரகலாதனால் பிரகலாதபுரியின் மூலக்கோவில் கட்டப்பட்டதாகவும், பிரகலாதனை அவனது தந்தையிடமிருந்து காக்க நரசிம்மராக அவதாரம் கொண்ட திருமாலுக்காக எழுப்பப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. முல்தானை இசுலாமியர் வென்றபின் முல்தான் சூரியக் கோவிலைப் போலவே இக்கோவிலும் அழிவுக்குள்ளானது. முல்தான் கோட்டைக்குள் ஹசரத் பாஹுல் ஹாக் சகாரியாவின் சமாதித் தூணுக்கு அடுத்ததாக, ஒரு உயர்ந்த மேடையின்மீது கட்டப்பட்டுள்ளது.கோவிலையடுத்து பள்ளிவாசலொன்று அமைக்கப்பட்டுள்ளது. ஏ. என். கானின் பதிவுகளின்படி, இப்பகுதி சீக்கியரின் ஆட்சியிலிருந்தபோது 1810 களில் இக்கோயில் மறுபடியும் கட்டப்பட்டது. பயணியும் தேடலாய்வாளருமான அலெக்சாண்டர் பர்னசு 1831 இல் தான் சென்றபோது இக்கோயில் கவனிப்பாரற்று கூரையின்றி இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். 1849 இல் பிரித்தானிய இராணுவம் முல்தான் கோட்டையை முற்றுகையிட்டபோது வீசப்பட்ட குண்டு கோட்டையினுள் வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து இருப்பின் மேல் விழுந்து ஹசரத் பாஹுல் ஹாக் சகாரியா மற்றும் அவரது மகன்களின் சமாதிகளும், பிரகலாதபுரி கோவில் வளாகமும் தவிர கோட்டையின் பிற பகுதிகள் முழுவதும் அழிந்தது போயின. அலெக்சாண்டர் கன்னிங்காம், 1853 இல் தான் பார்த்தபோது இக்கோவில் ”வேலைப்பாடுகளமைந்த மரத்தூண்களால் தாங்கப்பட்ட கூரைகொண்ட சதுர செங்கற் கட்டிடமாக இருந்தது” என்று குறிப்பிடுகிறார் . தற்போதுள்ள கோவில் 1861 ஆம் ஆண்டு தலைமை குருக்கள் பால் ராம் தாசால் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட நன்கொடையால் 11,000 ரூபாய் செலவில் கட்டப்பட்டது. 1872 இல் முல்தானின் இந்து குடிமக்களிடமிருந்தும் தாக்கூர் ஃபடே சந்த் தன்க்சாலியாவிடமிருந்தும் பெறப்பட்ட நன்கொடையைக் கொண்டு மீண்டும் கட்டப்பட்டது. 1881 இல் கோவிலைப் புனரமைக்கும்போது கோவில் விமானத்தின் உயரம் மற்றும் அருகிலிருந்த இசுலாமிய சமாதித்தூண்களின் உயரம் குறித்து எழுந்த இந்து-இசுலாமிய சிக்கலால் கலவரம் ஏற்பட்டது. அக்கலவரத்தில் இரு பள்ளிவாசல்களும் 22 கோவில்களும் அழிக்கப்பட்டன. பஞ்சாபின் பிரித்தானிய அரசு இக்கலவரத்தை அடக்க எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை. இக்கலவரத்தில் பிரகலாதபுரி கோவிலும் அழிந்தது. எனினும் பிரகலாதபுரியின் முல்தானின் வசதிபடைத்த இந்து சமூகத்தினரால் இக்கோவில் மீண்டும் உடனடியாகக் கட்டப்பட்டது.
சிறப்பு அம்சங்கள்
பிரகலாதபுரி கோவில் மிகப் பழமையான கோவில். பிரகலாதனால் கட்டப்பட்ட மூலக்கோவில் அமைந்த இடத்தில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்துசமயப் புராணக்கதைகளின்படி, இங்கு பிரகலாதனை அவன் தந்தை இரணியகசிபுவிடம் இருந்து நரசிம்மர் காப்பாற்றி, இரணியகசிபுவை வதம் செய்தார் என்ற நம்பிக்கை இந்துக்களிடம் நிலவுகிறது. ஹோலிகா தகனப் பாரம்பரியமும் பண்டிகையும் இங்கு துவங்கியதாக இந்துக்கள் நம்புகின்றனர்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சூரஜ் குண்ட்
அருகிலுள்ள இரயில் நிலையம்
முல்தான் நிலையம்
அருகிலுள்ள விமான நிலையம்
முல்தான்