Wednesday Jun 26, 2024

முப்பந்தல் இசக்கியம்மன் திருக்கோயில், கன்னியாகுமரி

முகவரி :

அருள்மிகு இசக்கியம்மன் திருக்கோயில்,

முப்பந்தல்,

கன்னியாகுமரி மாவட்டம் – 627105.

போன்: +91 4652 – 262 533.

இறைவி:

இசக்கியம்மன்

அறிமுகம்:

 கன்னியாகுமரி– நெல்லை தேசிய நெடுஞ்சாலையில், நாகர்கோவிலில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ளது ஆரல்வாய்மொழி. இந்த ஊருக்குக் கிழக்கு எல்லையில் அமைந்திருக்கிறது முப்பந்தல். தமிழகத்தை மூவேந்தர்கள் ஆட்சி செய்த காலத்தில், அவர்கள் தங்களுக்கு இடையேயான பிரச்னைகளை, ஒளவைப் பிராட்டியின் தலைமையில் பேசித் தீர்த்த இடம் இது. மூவேந்தர்களும் கூடிக் கலையும் இடம் என்பதால், ‘முப்பந்தல்‘ என்ற பெயர் வந்ததாம்.

புராண முக்கியத்துவம் :

முப்பந்தல் அருகில் உள்ளது பழவூர். இந்த ஊரில் நாட்டிய பெண்மணி ஒருத்தி தனது மகள் இசக்கியுடன் செல்வச் செழிப்பில் வசித்து வந்தாள். அவளது சொத்தின் மீது ஆசை கொண்ட ஒருவன், இசக்கியை காதல் மொழி பேசி வஞ்சனையால் வீழ்த்தினான். பின்னர் இசக்கியை வீட்டில் உள்ள நகை பணத்துடன் அருகில் இருந்த காட்டுக்கு வரவழைத்தவன், இசக்கி அவன்பால் கட்டுண்டு இருந்த போது தலையில் பாறாங்கல்லை தூக்கிப்போட்டான். இதில் இசக்கி துடிதுடித்து இறந்துபோனாள்.

பின்னர் அந்தக் கயவன், நகை, பணத்துடன் காட்டு வழியாக சென்று கொண்டிருந்தபோது பாம்பு ஒன்று தீண்டியதில் அவனும் இறந்துபோனான். இந்த நிலையில் தெய்வ பிறவியான இசக்கி, சிவபெருமானிடம் தன்னை வஞ்சனையால் கொன்றவனைத் தானே அழிக்க வேண்டும் என்று வரம் பெற்று மீண்டும் தன்னையும், தன்னை ஏமாற்றியவனையும் உயிர்த்தெழச் செய்யுமாறு வேண்டினாள். சிவனும் வரம் கொடுத்தார்.

அதன்படி பாம்பு தீண்டி இறந்து கிடந்த இசக்கியை கொன்றவன் வீடு திரும்பினான். இசக்கியோ காட்டில் அலைந்து திரிந்தாள். ஒருநாள், காட்டில் இருந்த கள்ளிச் செடியை ஒடித்து அதனை அழகிய குழந்தையாக மாற்றினாள் இசக்கி. பின்னர் அந்த குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு, தன்னை ஏமாற்றிய கயவனின் ஊருக்கு சென்று பஞ்சாயத்தை கூட்டி, தன்னையும், தனது குழந்தையையும் அவன் ஏற்க மறுப்பதாக புகார் கூறினாள்.

விசாரணைக்கு வந்த இசக்கியை ஏமாற்றியவன், அவள் தனது மனைவியல்ல, அது என் குழந்தை அல்ல என்று மன்றாடினான். ஒரு கட்டத்தில் இசக்கி தனது இடுப்பில் இருந்த குழந்தையை கீழே இறக்கி விட்டாள். அந்த குழந்தை நேராக, குற்றம் சாட்டப்பட்டவனிடம் சென்று அப்பா என்றது. இதனை பார்த்த பஞ்சாயத்து தலைவர், “குழந்தை பொய் சொல்லாது, எனவே நீ உன் மனைவியுடன் பேசி ஒரு முடிவுக்கு வா” என்று கூறி ஒரு வீட்டில் இருவரையும் உள்ளே வைத்து பூட்டி சென்று விட்டனர்.

முப்பந்தலில் அமர்ந்தாள்: இந்த நேரத்திற்காக காத்திருந்த இசக்கி, நள்ளிரவு ஆனதும் விஸ்வரூபம் எடுத்தாள். பின்னர் தன்னை ஏமாற்றி கொன்றவனை, தனது கையால் கொன்று பழிதீர்த்தாள். அதன்பிறகு பழவூரை விட்டு, மேற்கு நோக்கி நடந்தாள். அப்போது அவ்வையார் முப்பந்தல் பகுதியில் மூவேந்தர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவ்வழியாக சென்ற இசக்கியை அழைத்து, சாந்தப்படுத்தி, “இனி நீ இருக்க வேண்டிய இடம் இதுதான்” என்றார். இசக்கியும் அங்கேயே தங்கினாள். இதனை கயிலையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த சிவபெருமான் பார்வதியை நோக்க, உடனே பார்வதிதேவி தன் வீரசக்தியை இசக்கிக்கு அளித்தாள். அன்று முதல் ஊரை காக்கும் தெய்வமானாள் இசக்கி. முப்பந்தலில் அமர்ந்ததால் முப்பந்தல் இசக்கி அம்மன் என்று பெயர் பெற்றாள்.

அவ்வைக்கு தனி சன்னிதி: இசக்கியை, அவ்வையார் சாந்தப்படுத்தியதால் முப்பந்தலில் அவ்வையாரம்மன் என்ற பெயரில் அவ்வைக்கு தனி சன்னிதி உள்ளது. மேலும் இசக்கியின் சகோதரனான நீலனுக்கும் தனி சன்னிதி அமைந்துள்ளது. திருமாலே இசக்கியின் தமையனாக வந்ததாக கூறப்படுகிறது. “இசக்கி” என்ற சொல்லுக்கு “மனதை மயக்குபவள்” என்று பொருள். முப்பந்தலில் கருவறையில் அம்மன் வடக்கு பார்த்த வண்ணம் காட்சி தருகிறாள். வலதுபுறம் பிராமணத்தி அம்மன் உள்ளார். கருவறை சுற்றுச்சுவரில் வைஷ்ணவி, துர்க்கை, பிரத்தியங்கரா தேவி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

கோவில் சுற்றுப்பிரகாரத்தில் வலம்புரி விநாயகரும், பாலமுருகனும், அவ்வையாரம்மனும் தனி சன்னிதியில் பாங்குடன் அருள்புரிகின்றனர். முகப்பில் காவல் தெய்வங்களான சுடலைமாடனும், அவருக்கு எதிரில் பட்டவராயரும் தனி சன்னிதிகளில் உள்ளனர்.

இந்த கோவிலின் அருகில் மற்றுமொரு இசக்கி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கும் சுடலை மாட சுவாமி காவல் தெய்வமாக கம்பீரமாக அமர்ந்துள்ளார். இந்தக் கோவில் கருவறை முன் மண்டபம் கேரள பாணியில் ஓடு வேயப்பட்டுள்ளது. இங்குள்ள இசக்கி அம்மன்,  ஆதி இசக்கி அம்மன்  என்று அழைக்கப்படுகிறாள். ஆலயத்தின் வெளியே மிகப் பெரிய அளவில் இசக்கி அம்மன் இடது காலை மடித்து, வலது காலை தொங்க விட்ட நிலையில் அமர்ந்துள்ளார்.

நம்பிக்கைகள்:

குழந்தைப்பேறு, நீண்ட நாள் நோய்க்கான சிகிச்சை பெறுபவர்கள், விபத்து, உடல் பலவீனவீ ம் போன்றவற்றால் நடக்க முடியாமல் சிரமப்படுபவர்கள் இங்கு பிரார்த்திக்கின்றனர். நீண்ட நாள் நோய்க்கான சிகிச்சை பெறுபவர்கள், விபத்து, உடல் பலவீனம் போன்றவற்றால் நடக்க முடியாமல் சிரமப்படுபவர்கள் முப்பந்தல் இசக்கியம்மனுக்கு பித்தளை, வெண்கலம், வெள்ளி, தங்கம் போன்ற உலோகங்களால் உடல் உருவம் செய்து செலுத்துவதாக பிரார்த்திக்கின்றனர். குழந்தைப்பேறு இல்லாதவர்கள் மரத்தொட்டிலில் குழந்தை இருப்பது போல உருவம் செய்து காணிக்கையாகச் செலுத்தி நற்பலன் அடைகின்றனர்.

திருவிழாக்கள்:

தமிழ் மாதத்தின் கடைசி செவ்வாயன்று திருவிளக்கு பூஜை, தை மாத கடைசி செவ்வாயில் புஷ்பாபிஷேகம், ஆனி உத்திரத்தில் வருஷாபிஷேகம் நடக்கிறது. செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு உச்சிக்கால பூஜை, ஆடி வெள்ளி, தை வெள்ளியில் சிறப்பு வழிபாடு நடத்தப்படும்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

முப்பந்தல்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கன்னியாகுமாரி

அருகிலுள்ள விமான நிலையம்

திருவனந்தபுரம்

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top