மருதூர் நவநீதகிருஷ்ணன் திருக்கோயில், திருநெல்வேலி
முகவரி :
அருள்மிகு நவநீதகிருஷ்ணன் திருக்கோயில்,
மருதூர்,
திருநெல்வேலி மாவட்டம் – 627 351.
இறைவன்:
நவநீதகிருஷ்ணன்
அறிமுகம்:
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மருதூரில் அமைந்துள்ள நவநீதகிருஷ்ணன் கோயில் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நவ திருப்பதிகள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. இவ்விடங்களுக்குச் செல்பவர்கள் மருதூர் நவநீதகிருஷ்ணன் கோயிலுக்கும் சென்று வரலாம். இந்த இடங்கள் அனைத்தும் திருநெல்வேலிக்கு அருகில் உள்ளன. இத்தலத்தில் மருதமரம் (மரம்) அதிகமாக இருப்பதால் இத்தலம் மருதூர் என்று அழைக்கப்படுகிறது, அதுவே இங்குள்ள ஸ்தல விருட்சமாகும். மருதூரில் உள்ள அணைக்கட்டு அருகே நவநீதகிருஷ்ணன் கோயில் பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இக்கோயில் தவிர, இந்த ஆற்றங்கரையில் ஆதி மருதீஸ்வரர் கோவில், வடக்கு வாசல் செல்வி கோவில் மற்றும் சாஸ்தா கோவில் உள்ளது.
மருதூர் திருநெல்வேலியிலிருந்து 12 கிமீ தொலைவிலும், மதுரையிலிருந்து 156 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. திருநெல்வேலி பழைய பேருந்து நிலையத்தில் நகர பேருந்து வசதிகள் உள்ளன. அருகிலுள்ள ரயில் நிலையம் திருநெல்வேலியிலும், அருகிலுள்ள விமான நிலையம் மதுரையிலும் அமைந்துள்ளது.
புராண முக்கியத்துவம் :
கிருஷ்ணன் குழந்தையாக இருந்த போது, அவனது தாய் மருத மரத்தில்தான் உரலில் கட்டி போட்டார். கிருஷ்ணனோ அந்த உரலை இழுக்க மருத மரம் இரண்டு துண்டாகி, அதிலிருந்த தேவர்கள் முக்தியடைந்தார்கள். மருத மரங்கள் இப்பகுதியில் அதிகம் இருப்பதால் இந்த ஊர் மருதூர் ஆனது. மருதமரம் நிற்கும் இடங்களில் கிருஷ்ணன் கோயில் அமைக்க வேண்டும் என்ற ஐதீகத்தின் அடிப்படையில் இந்த கோயிலும் அமைக்கப்பட்டது.
நம்பிக்கைகள்:
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் கிருஷ்ணருக்குரிய விசேஷ நாட்களில் இத்தலத்திற்கு வந்து தாமிரபரணி ஆற்றில் நீராடி விட்டு கிருஷ்ணரை தரிசித்து, பால்பாயாசம், வெண்ணெய் நைவேத்தியம் செய்து வழிபட்டால், கிருஷ்ணர் தன்னைப்போலவே ஒரு அழகான குழந்தை பிறக்க வரமளித்திடுவார் என்பது ஐதீகம்.
சிறப்பு அம்சங்கள்:
கோவிந்தா என சொன்னால் குழந்தை வரம் தரும் கிருஷ்ண சுவாமி திருநெல்வேலி மாவட்டம் மருதூரில் அருள்பாலிக்கிறார். தாமிரபரணி நதி புனிதமான கங்கைக்கு நிகரானது. இந்நதியின் கரையிலுள்ளது மருதூர் கிராமம். இவ்வூர் அணைக்கட்டின் அருகில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் நிர்மாணிக்கப்பட்டது நவநீத கிருஷ்ணன் கோயில்.
இங்கு மூலவர் நவநீதகிருஷ்ணன் 4 அடி உயரத்தில் சிரித்த முகத்துடன் கேட்டவருக்கு கேட்டவரம் தருபவராக நின்று அருள்பாலிக்கிறார். அருகே இரண்டடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன கிருஷ்ணர் இரண்டு வயது பாலகனாக அரை சலங்கையுடன், இருகைகளிலும் வெண்ணெய் ஏந்தி சிறு தொந்தி வயிற்றுடன் அருள் பாலிக்கிறார். எதிரில் நாலடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன கருடாழ்வார், பக்தர்களின் குறைதீர்க்கும் கிருஷ்ணன் அழைக்கும் குரலுக்கு ஓடி வர தயாராக நிற்கிறார்.
திருவிழாக்கள்:
கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகள், வைகுண்ட ஏகாதசி மற்றும் கிருஷ்ணருக்குரிய அனைத்து விழாக்களும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மருதூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருநெல்வேலி
அருகிலுள்ள விமான நிலையம்
தூத்துக்குடி