Saturday Jul 06, 2024

மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபாலசுவாமி கோவில், திருவாரூர்

முகவரி

மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபாலசுவாமி கோவில், மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு 614001 +91- 4367- 222 276, +91- 94433 43363.

இறைவன்

இறைவன்: ஸ்ரீ ராஜகோபாலசுவாமி இறைவி: செங்கமல தாயார்

அறிமுகம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் சிறப்பு வாய்ந்த தலமாக கருதப்படுகிறது. 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் உறையும் ராஜகோபால சுவாமி, கிருஷ்ணரின் வடிவமாக அறியப்படுகிறது. குருவாயூரைப் போலவே, மன்னார்குடி ராஜகோபால சுவாமி ஆலயத்தையும் ‘தட்சிண துவாரகை’ என்று அழைக்கிறார்கள். இங்கு அருள்பாலிக்கும் மூலவரின் திருநாமம் வாசுதேவப் பெருமாள் என்பதாகும். உற்சவரின் திருநாமம் ராஜகோபால சுவாமி. தாயாரின் பெயர், செங்கமலத் தாயார். இது தவிர செண்பக லட்சுமி, ஹேமாம்புஜ நாயகி, ரக்தாப்ஜ நாயகி, படிதாண் டாப் பத்தினி ஆகிய திருநாமங்களிலும் தாயார் அழைக்கப்படுகிறார். உற்சவரின் பெயரான ராஜகோபால சுவாமி என்ற பெயரிலேயே ஆலயம் விளங்குகிறது. இத்தல இறைவனின் திருவுருவம் 12 அடி உயரம் கொண்டது. ஆலயத்தின் வளாகமானது, 16 கோபுரங்களுடன் 7 தூண்கள், 24 சன்னிதிகள், ஏழு மண்டபங்கள் மற்றும் ஒன்பது புனித தீர்த்தங்கள் கொண்டு திகழ்கிறது. இத்தல உற்சவர் சிலை வெண்கலத்தால் ஆனது. இது சோழர் காலத்தைச் சேர்ந்த தாகும். இந்த ஆலயத்தில் காணப்படும் ஒரு குளம் 1,158 அடி நீளமும், 837 அடி அகலமும் கொண்டுள்ளது. இதனை ‘ஹரித் திராந்தி’ என்று அழைக்கிறார்கள். ஹரித்ராந்தி நதி தவிர துர்வாச தீர்த்தம், திருப்பாற்கடல், கோபிகா தீர்த்தம், சங்கு தீர்த்தம், சக்கர தீர்த்தம் ஆகிய தீர்த்தங்களும் உள்ளன.

புராண முக்கியத்துவம்

திருமால், கிருஷ்ணாவதாரம் எடுத்தபோது, தென்பகுதியில் கோபிலர், கோபிரளயர் என்னும் இரண்டு முனிவர்கள் இருந்தனர். இவ்விருவரும் கண்ணனின் லீலைகளைக் கேட்டு, அவரைப் பார்க்க துவாரகை நோக்கி புறப்பட்டனர். அப்போது வழியில் அவர்களை சந்தித்த நாரதர், கிருஷ்ணாவதாரம் முடிந்து விட்டதாக கூறினார். அதைக்கேட்ட முனிவர்கள் வருத்தம் அடைந்தனர். அவர்களை ஆறுதல்படுத்தி தேற்றிய நாரதர், இருவரையும் கண்ணனைக் காண தவம் இருக்கும்படி அறிவுறுத்தினார். அதன்படி முனிவர்கள் இருவரும் கடுமையான தவத்தில் ஆழ்ந்தனர். அவர்களுக்கு இறைவன், ‘கிருஷ்ணராக’ காட்சி தந்தார். அவரிடம் தங்களின் லீலைகளை காட்டி அருளும்படி முனிவர்கள் வேண்டினார்கள். அதன்படி கிருஷ்ணர் தன்னுடைய 32 லீலைகளைக் காட்டி அருளினார். பின்னர் முனிவர்களின் வேண்டுதலுக்காக, இந்தத் தலத்தில் கிருஷ்ணர் எழுந்தருளினார் என்று ஆலய வரலாறு சொல்லப்படுகிறது. உற்சவர் ராஜகோபால சுவாமி, இந்த ஆலயத்தில் இடையன் கோலத்தில் பாலகனாக காட்சி தருகிறார். ஒரு வேஷ்டி அணிந்து, அதையே தலைப்பாகையாக சுருட்டி வைத்துள்ளார். வலது கையில் வெண்ணெய் மற்றும் சாட்டை வைத்து காட்சி தருகிறார். இடுப்பில் சலங்கை, சாவிக்கொத்து, கையில் வளையல், காலில் தண்டை, கொலுசு ஆகிய குழந்தைகள் அணியும் அணிகலன்களை அணிந்திருக்கிறார். அவரோடு ஒரு பசுவும், இரண்டு கன்றுகளும் உள்ளன. தாயார் சன்னிதி அருகே, பெருமாள் சன்னிதி எதிரே, பெண் வடிவ கருடாழ்வார் இருக்கிறார். இந்தக் கோவில் குலோத்துங்கச் சோழனால், சுண்ணாம்புக் கலவை மற்றும் செங்கல் கொண்டு கி.பி. 1070-1125-ல் கட்டப்பட்டது என்று சொல்லப்படுகிறது. இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் பங்குத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டா டப்பட்டு வருகிறது. ஆலயத்தின் 18 நாள் உற்சவமாக பங்குனி உத்திர விழாவும், 12 நாள் உற்சவமான விடை யாற்றி விழாவும் சிறப்பு வாய்ந்தவை. இதில் விடையாற்றி உற்சவம், கிருஷ்ண தீர்த்த தெப்ப உற்சவத்துடன் நிறைவு பெறும். இந்த ஆலயத்தின் ஆண்டு தோறும் ஆடிப்பூரம் அன்று செங்கமலத் தாயார் தேரில் எழுந்தருள்வார்

நம்பிக்கைகள்

சுவாமியிடம் வேண்டிக்கொள்ள குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாகும், திருமண, புத்திர தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. கால்நடைகள் நோயின்றி வாழ இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். சுவாமி, தாயாருக்கு விசேஷ திருமஞ்சனம் செய்தும், பசுக்களை தானம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்தலாம்.

சிறப்பு அம்சங்கள்

இந்த கோயிலில் 16 கோபுரங்கள், 18 விமானங்கள், 7 பிரகாரங்கள், 7 மண்டபங்கள், 9 தீர்த்தங்கள் உள்ளன. பொதுவாக ராஜகோபுரத்தில், எல்லா நிலைகளிலும் சுதை சிற்பங்கள் இருக்கும். ஆனால், இங்குள்ள 11 நிலை ராஜகோபுரத்தில், கீழிருந்து மேலாக முதல் ஆறு நிலைகளில் சுதை, சிற்பங்கள் எதுவும் இல்லை. ஏழாவது நிலையில் இருந்தே சுவாமி சிலைகள் வடிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய வித்தியாசமான அமைப்பில் கோபுரத்தை காண்பது அரிது. திருவாரூர் தேரழகு என்பதுபோல, “மன்னார்குடி மதிலழகு’ என்பது சொல் வழக்காக உள்ளது. இங்கிருந்து சற்று தூரத்தில் தீர்த்தக்குளம் இருக்கிறது. கிருஷ்ணனின் தரிசனம் வேண்டிய முனிவர்கள் தவமிருந்த குளம் இது. இதனை யமுனை நதியாகவே கருதுவதால், “ஹரித்ரா நதி’ என்றே அழைக்கிறார்கள். குளமாக இருந்தாலும் நதியின் பெயரில் அழைக்கப்படும் தீர்த்தம் இது. ஆனி பவுர்ணமியில் இந்த தீர்த்தத்தில் தெப்பத்திருவிழா நடக்கிறது. தாயார் சன்னதி அருகே பெருமாள் சன்னதி எதிரே பெண் வடிவ கருடாழ்வார் இருக்கிறார்.

திருவிழாக்கள்

பங்குனியில் பிரம்மோற்ஸவம், சித்திரை, வைகாசியில் கோடை உற்சவம், ஆடிப்பூரம், நவராத்திரி, மாசியில் ராஜகோபாலருக்கு ஊஞ்சல் உற்சவம்.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மன்னார்குடி

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவாரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top