Tuesday Jan 28, 2025

பெல்தங்கடி மஞ்சுநாதர் திருக்கோயில் தர்மஸ்தலா, கர்நாடகா

முகவரி

பெல்தங்கடி மஞ்சுநாதர் திருக்கோயில் தர்மஸ்தலா, பெல்தங்கடி தாலுக்கா, தெட்சிண கன்னடா மாவட்டம் மங்களூர் அருகில், கர்நாடகா – 574-216.

இறைவன்

இறைவன்: மஞ்சுநாதர் இறைவி: பகவதி அம்மன்

அறிமுகம்

தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடியில் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலுக்கு நாட்டின் பல பகுதிகளிலிருந்து தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். தர்மஸ்தல கோயில் அல்லது தர்மசாலா கோயில் 1000 ஆண்டு பழமையான மஞ்சுநாதருக்கு அர்பணிக்கப்பட்ட சிவன் கோயிலாகும். இந்தக் கோவிலில் உள்ள மூலவர் தங்கத்தாலான சிவலிங்கமாக, காட்சியளிக்கின்றார். ஈசன் இத்திருத்தலத்தில் மஞ்சுநாத சுவாமிகள் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றார். தர்ம தேவதைகளின் உதவியாளரான, அன்னப்ப சுவாமிகள் இந்த தர்மஸ்தலா தலத்தின் மகிமைக்கு ஒரு முக்கியம் காரணமாக திகழ்கின்றார். மஞ்சுநாதரின் சன்னிதியின் வலப்பக்கத்தில் தர்மதேவதைகளுக்கென தனியாக ஒரு சந்நிதியும், கன்னியாகுமரி அம்மனுக்கு என்று தனியாக ஒரு சந்நிதியும் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வெளியே உள்ள அன்னபூர்ணா சத்திரத்தில் தினம்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அன்னதானத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர். இக்கோயில் மூலவர்களாக மஞ்சுநாதரும், சமண சமயத்தின் எட்டாவது தீர்த்தங்கரான சந்திரபிரபாவும், கோயில் காவல் தெய்வங்களாக குமாரசுவாமியும் ற்றும் கன்னியாகுமரி எனும் யட்சினியும் உள்ளனர். தர்மஸ்தலா கோயிலின் நிர்வாகத்தை சமண சமய வீரமன்னா பெர்கடே என்பவரின் வழிவந்த குடும்பத்தினர் மேற்பார்வையிடுகின்றனர். ஆனால் கோயில் பூஜைகளை மத்வரின் துவைத மரபை பின்பற்றும் வைண அந்தணர்கள் கோயில் பூஜைகள் செய்கின்றனர்.

புராண முக்கியத்துவம்

பல வருடங்களுக்கு முன்பு இந்த இடம் குடுமபுரம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. இந்த ஊரின் தலைவராக பரமண்ணா ஹெக்டே இருந்தார். ஒரு நாள் இவரின் வீட்டிற்கு குதிரையின் மேலும், யானையின் மேலும் அமர்ந்தபடி சிலர் வந்தார்கள். எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உடைய ஹெக்டே, வந்தவர்களை வீட்டிற்குள் அழைத்து உபச்சாரம் செய்தார். வந்தவர்களின் தாகத்தைத் தீர்க்க தண்ணீரையும் அளித்தார். யார் என்று தெரியாமல் அப்பண்ணாவின் வீட்டிற்குள் வந்து அமர்ந்தவர்கள், ‘நாங்கள் இந்த வீட்டிலேயே தங்கி கொள்கின்றோம். நீங்கள் வேறு இடத்திற்கு சென்று விடுங்கள் என்று ஹெக்டேவிடம் கூறினார்கள்’. எந்தவித மறுப்பும் தெரிவிக்காத ஹெக்டே தனது பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு வெளியேற தயாராகி விட்டார். ஹெக்டேவின் இந்த செயலை பார்த்தவர்கள் தாங்கள் யார் என்று கூறினார்கள். ‘நாங்கள் ஈசனின் ஆணைப்படி உங்களின் வீட்டிற்கு அனுப்பப்பட்ட தர்மதேவதைகள். இந்த குடுமபுரம் பிற்காலத்தில் ஒரு புண்ணியக் கோவிலாக மாறப்போகிறது. அந்தக் கோவிலை நீங்கள் தான் கட்டி பராமரித்து, வழிநடத்தி செல்லப்போகிறீர்கள். அதற்கான பரீட்சைதான் உங்களுக்கு நடத்தப்பட்டது. எந்தவித தன்னலமில்லாத உங்களின் குணத்தை பரிசோதிக்கத்தான் இந்த நாடகம். நீங்கள் கட்டப்போகும் இந்த கோவிலில் கன்னியாகுமரி அம்மனையும், மஞ்சு நாதரையும், தர்மதேவதை சிலையையும் பிரதிஷ்டை செய்ய வேண்டும். இந்தக் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு எல்லாவிதமான கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். மகிழ்ச்சியில் பக்தர்கள் அதிகமான காணிக்கையை செலுத்துவார்கள். அந்தத் தொகையை வைத்துக்கொண்டு நீங்கள் தர்ம காரியங்களுக்காக செலவு செய்ய வேண்டும். உங்களுக்கு ஒரு குறையும் வராமல் அந்த ஈசன் பார்த்துக்கொள்வான் என்று கூறி தேவதைகள் மறைந்து விட்டனர்.’ தர்ம தேவதைகளின் வாக்குப்படி ஹெக்டேவும் நடந்து கொண்டார். கோவிலில் இருந்து பெறப்பட்ட காணிக்கைகளை வைத்து பல தர்ம காரியங்களை செய்து வந்தார். இதனால் இந்த இடம் ‘தர்மஸ்தலம்’ என்ற பெயரை பெற்றது. ஹெக்டேவுக்கு அடுத்த தலைமுறையில் வந்த சந்ததியினர் இந்த தர்ம காரியத்தை தொடர்ந்து செய்து வருகின்றனர். இந்த ஊரில் உள்ளவர்களும் ஹெக்டேவின் குடும்பத்திற்கு தொடர்ந்து மரியாதை அளித்து வருகின்றனர்.

நம்பிக்கைகள்

மனநிலை சரியில்லாதவர்கள், பில்லி, சூனியம் போன்றவற்றில் சிக்கி தவிப்பவர்கள். பேய், பிசாசு பிடித்தவர்கள் இந்த கோவிலில் ஒரு வாரம் தங்கியிருந்து வழிபட்டு சென்றால் அவர்களின் பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை. நீண்ட நாட்களாக முடியாமல் இருக்கும் வழக்கு பிரச்சனைகள் இந்த மஞ்சுநாத சுவாமி கோவிலுக்கு வந்து சென்ற பின் ஒரு முடிவுக்கு வரும்.

சிறப்பு அம்சங்கள்

இங்குள்ள அன்னப்ப சுவாமி தர்மதேவதைகளின் பிரதிநிதியாகவும், இந்த தர்மஸ்தலா தலத்தின் மகிமைக்குப் பெரிதும் காரணமாகவும் இருக்கிறார். தினமும் இங்கு வழங்கப்படும் அன்னதானத்திற்கு அதிபதியாகவும் இருக்கிறார். கருவறையில் மஞ்சுநாத சுவாமி பெரிய லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். இவருக்கு இருபுறமும் உற்சவர்கள் காணப்படுகின்றனர். சுவாமி சன்னதியின் வடபுறத்தில் தர்மதேவதைகளின் சன்னதி தனியாக உள்ளது கன்னியாகுமரி அம்மன் சன்னதியில் குமாரசுவாமி, கால ராகு முதலிய தேவதைகள் எழுந்தருளியுள்ளனர், மையப் பகுதியில் கன்னியாகுமரி அன்னையின் உற்சவ விக்ரகம் உள்ளது. மஞ்சுநாதரின் கருவறைக்குப் பின் உள்ள சுவரில் லிங்கோத்பவர், கணபதி காட்சி அளிக்கின்றனர் பிராகாரத்தின் வடக்கு மூலையில் இஷ்ட தேவதைகளின் சந்நிதி இருக்கிறது. இக்கோயிலுக்கு வெளியே உள்ள அன்னபூர்ணா சத்திரத்தில் தினமும் சுமார் 10,000 பேருக்கு குறையாமல் அன்னதானம் நடக்கிறது. மஞ்சுநாத சுவாமியின் பிரதிநிதியாக அவரது சன்னதிக்கு எதிரே உள்ள பீடத்தில் அமர்ந்திருக்கும் தற்போதைய ஹெக்டே வழக்குகளை விசாரிக்கிறார். இருதரப்பினரையும் அழைத்துப் பேசுகிறார். அவர்களை சமரசப்படுத்தி அனுப்புகிறார். அவசியமானால் தன் தீர்ப்பையும் வழங்குகிறார். வழக்காடுபவர்கள் அவரது தீர்ப்பை அப்படியே ஏற்றுக் கொள்கின்றனர். இக்கோயிலுக்கு எதிரிலேயே அழகிய நந்தவனம், அபிஷேக தீர்த்தகுளம், அன்னப்பசுவாமி ஆலயமும் உள்ளது. இத்தலத்தின் வருமானத்திலேயே கல்விக்கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனை, முதியோர் இல்லம் போன்றவை இயங்குகின்றன. திருமணங்களும் இலவசமாகவே நடத்தப்படுகிறது. யாத்ரீகர்கள் தங்க இலவச விடுதியும் உள்ளது. இக்கோவிலின் உண்டியலில் காணிக்கை செலுத்துவது தவிர வேறு பணத் தேவையே இங்கு இல்லை. கோவிலுக்கு உள்ளேயும் வெளியேயும் வழிகாட்ட ஊழியர்கள் உள்ளனர்.

திருவிழாக்கள்

மகா சிவராத்திரி, நவராத்திரி

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

தர்மஸ்தலா

அருகிலுள்ள இரயில் நிலையம்

மங்களூர்

அருகிலுள்ள விமான நிலையம்

மங்களூர்

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top