Thursday Jul 04, 2024

புதுப்பாக்கம் வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

புதுப்பாக்கம் வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், புதுப்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் – 603103.

இறைவன்

இறைவன்: வீர ஆஞ்சநேயர்

அறிமுகம்

சென்னை அடுத்த வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் வழியில் 12 கிலோ மீட்டர் தூரத்திலும், கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் மிருககாட்சி செல்லும் சாலையில் 5 கிலோமீட்டர் தூரத்திலும் புதுப்பாக்கம் ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இக்கோயில் கஜகிரி எனும் குன்றில் அமைந்துள்ளது. இந்த தலத்தில் உள்ள மலையை சுற்றி ஆஞ்சநேயர் கிரிவலம் வருவதாக ஐதீகம் கூறப்படுகிறது.

புராண முக்கியத்துவம்

இலங்கைக்கு மும்முறை சென்று வந்தவர் அனுமன் மட்டுமே, முதல் முறை ராமதூதனாக கணையாழியுடன் சென்று கண்டேன் சீதையை என்று அறிவித்தது. தீ வைத்து ராவணன் நகரை அழித்தது. மறுமுறை போருக்காக சேதுபந்தனம் அமைத்து, ராமபிரானுடன் சென்றது. மூன்றாவது முறை சஞ்சீவி மலைக்காக இமயம் சென்று வந்தது முதலும் கடைசியும் வான மார்க்கம். ராம-ராவண யுத்தம் அதி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. வானர சேனைகள் ராம மந்திரத்தை தாரகமாகக் கொண்டு வெற்றி மேல் வெற்றியைக் குவித்தபடி இருக்கிறார்கள். ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்! கோஷம் இலங்கையை மூழ்கடிக்கிறது. ராவண சேனைகள் நாளும் தேய்ந்தன. முக்கியத் தளபதிகள், ராவணனின் தம்பிகள் போன்றோர் வீரமரணம் எய்தினர். இதே நிலை நீடித்தால் தோற்பது உறுதி என்பதை உணர்ந்த ராவணன், கலங்கினான். அவனுக்கு ஆறுதல் சொன்னான். அவனது மகன் இந்திரஜித். மறுநாள் போருக்கு அவனே சென்றான். மாயங்கள் பல கற்ற அவன், லட்சுமணனுடன் போரிடும்போது நாகாஸ்திரம் ஏவி, ராமசேனையை முறியடிக்கத் திட்டம் தீட்டுகிறான். ஆதிசேஷனின் அவதாரமான லட்சுமணன் மீது அஸ்திரம் பாய்ந்தது. அவதார நியதிப்படி, சாதாரண மனிதன் போல் அதனை ஏற்று மூர்ச்சையடைத்தான் இளையாழ்வார். வானரசேனைகளும் நாகாஸ்திரத்தின் வீர்யத்தால் தாக்குண்டு மூர்ச்சையடைந்தனர். பாணத்தால் பாதிக்கப்படாதவர்கள் இருவர் மட்டுமே! ஒருவர் ராமபிரான். அடுத்தவர் ஸ்ரீராம நாம மயமாக இருக்கும் வீரஆஞ்சநேயர்! இளையவனும் இதர வானரவீரர்களும் இறுதி மூச்சை விடப்போகிறவர்கள் போல் மூர்ச்சித்துக் கிடப்பதைக் கண்ட ராமர், ஜாம்பவான் மெதுவாக சுதாரித்து எழுந்து, சஞ்சீவி மலையில் உள்ள அமிர்த் சஞ்சீவினி மூலிகையைக் கொண்டு வந்தால் அனைவரும் பிழைப்பர் என்று உபாயம் சொல்ல, உடனே அனுமன் ராமனைப் பணிந்து புறப்பட்டார். மூலிகையை அடையாளம் காண அவகாசம் இல்லாததால், சஞ்சீவி மலையை அப்படியே பெயர்த்தெடுத்துத் தூக்கி வந்தார். அப்படி வருகையில், வங்காளக் கடலின் ஓரத்தில், மாலை மயங்கும் நேரத்தில் சந்தியா வந்தனம் எனப்படும் நித்ய கர்மாவைச் செய்வதற்காக அனுமன் இறங்கிய இடம்தான் புதுப்பாக்கம்.

நம்பிக்கைகள்

பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேற இங்குள்ள அனுமனை வேண்டிச் செல்கின்றனர். அனுமனுக்கு வெண்ணெய் காப்பு, வெற்றிலை மாலை சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

இங்கு ஆறடி உயரத்தில் ஓர் அழகுச் சிலையாய் ஆஞ்சநேயர் வீற்றிருக்கிறார். மலை அடிவாரத்தில் ஆனைமுகன் கோயில் கொண்டுள்ளார். அவரை வணங்கி, அருகில் நவகிரக சன்னதியையும் தரிசித்து, பின் 108 படிகள் ஏறிச் சென்றால் கஜகிரி எனப்படும் குன்றின் உச்சியில் வீரஆஞ்சநேயர் காட்சி தருகிறார். எதிரில் சீதா லஷ்மண சமேதராக இராமபிரான் அருள்பாலிக்கிறார்! ஆஞ்சநேயர் திவ்ய உருவத்தில், முகம் வடக்கு நோக்கிப் பார்த்தபடி இருக்க(சஞ்சீவி மலை வடக்கில் இருப்பதால்) உடல் கிழக்கு நோக்கி இருக்க(நித்ய கர்மா நீர் நிலையை நோக்கிச் செய்யப்படுதல்), வலது பாதம் தரையில் ஊன்றி, இடது பாதம் பறப்பதற்குத் தயாராக உயர்த்தி தரையில் படாமலும், ஒரு கை பக்தருக்கு அபயம் காட்ட மறுகை இடையிலிருக்க, தலைக்கு மேல் தூக்கிய வாலின் மணியும், நாபிக் கமலத்தில் தாமரைப் பூவுமாக பொலிவுடன் காட்சி தருகிறார் வீரஆஞ்சநேயர்! இராமர் இருக்குமிடமே சீதைக்கு அயோத்தி என்பர். அதே போல அனுமன் எங்கிருந்தாலும் அங்கெல்லாம் இராமர் எழுந்தருளி விடுவார். இங்கேயும் அனுமனுக்கு எதிரிலேயே சீதா இராம, லக்ஷ்மணரும்; ராமர் பாதம் பணியும் ஆஞ்சநேயரும் உள்ளனர். இங்கு நித்யர்மாவை முடித்து, பின் அனுமன் சஞ்சீவி பர்வதம் கொண்டு சென்றது, அதனால் விஷம் நீங்கி லக்ஷ்மணர் முதலானோர் எழுந்தது! ராமபிரான் மனமகிழ்ந்து அனுமனை வாழ்த்தியது எல்லாம் நாம் அறிந்ததே! ராமாயண காலத்தில் அனுமன் இங்கு வந்ததால், வியாஸ மகரிஷி அனுமனுக்கு இங்கு கோயில் எழுப்பினார், மொத்தம் 108 அனுமன் கோயில்களை அவர் ஏற்படுத்தியதாக ஐதிகம். அதில் இக்கோயில் 108 திருப்படிகளைக் கொண்டது அபூர்வம். 108 திவ்யத் தலங்களுள் ஒன்றான திருவிடந்தை நித்யகல்யாணப் பெருமாள் கோயிலுக்கு இந்தப் புதுப்பாக்கம் பரிவேட்டைத் தலமாகவும் விளங்குகிறது.

திருவிழாக்கள்

அனுமன் ஜெயந்தி, இராமநவமி

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

புதுப்பாக்கம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

சென்னை

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top