Friday Nov 22, 2024

பாலக்கொல்லை அழகேஸ்வரர் சிவன்கோயில், கடலூர்

முகவரி

பாலக்கொல்லை அழகேஸ்வரர் சிவன்கோயில் பாலக்கொல்லை, விருத்தாசலம் வட்டம், கடலூர் மாவட்டம் – 606115.

இறைவன்

இறைவன்: அழகேஸ்வரர் இறைவி: அழகம்மை

அறிமுகம்

விருத்தாசலம் வட்டத்தின் வடக்கு எல்லையோர கிராமம் தான் இந்த பாலக்கொல்லை. விருத்தாசலத்தின் வடக்கில் ஆலடி வழி செல்லும் சாலையில்19 கிமீ தூரத்தில் உள்ளது. செம்மண், பொட்டல்மண், மணல் கலந்த மண், கூழாங்கல் இவை கலந்த பகுதிதான் இந்த பாலக்கொல்லை. மேற்கில் பெரிய ஏரி ஒன்றுள்ளது. ஊருக்குள் பெருமாள், வீரன், மாரி துர்க்கை என பல கோயில்கள் உள்ளன. ஊர் மையத்தில் பெரிய அழகிய சிவாலயம் இருக்கிறது பிரஸ்தரம் வரை கருங்கல்லாலும், அதற்க்கு மேல் விமானம் செங்கல் கொண்டும் கட்டப்பட்டுள்ளது. காலம் என பார்த்தோமானால் 500 ஆண்டுகளுக்கு முன் நாயக்கர்களால் கட்டப்பட்டிருக்கலாம். விதானத்தில் மீன் சின்னம் உள்ளதை வைத்து பாண்டியர்கள் காலம் என சொல்வோரும் உண்டு. ஆனால் ஒற்றை மீன் வளமையின் அடையாளமாக இருக்கலாம். ஊரின் மேற்கில் உள்ள ஏரிக்கரையில் ஜேஷ்டாதேவி வீற்றிருக்கிறார். இதனை வைத்து இவ்வூர் ஆறாம் நூற்றாண்டில் இருந்து உள்ளது என கொள்ளலாம். இரு இடங்களில் குப்பமுத்து ஆச்சாரி எனும் கல்வெட்டு காணப்படுகிறது. இவர் ஒருவேளை மருதுபாண்டியர்க்கு தேர் செய்துகொடுத்த குப்பமுத்து ஆச்சாரியாக இருக்குமா? ஆய்வர்கள் கருத்துக்கு விடுகிறேன்.

புராண முக்கியத்துவம்

கிழக்கு நோக்கிய இறைவன் அழகேஸ்வரர் அவரது இடப்புறம் கிழக்கு நோக்கிய அம்பிகை அழகம்மை கோயில் கொண்டுள்ளார். இருவருக்கும் இடையில் கிழக்கு நோக்கிய முருகன் சிற்றாலயம்.தென்மேற்கில் விநாயகர் சிற்றாலயம் இல்லாத நிலையில் இதனை சோமாஸ்கந்த அமைப்பு என கொள்ளலாம். பெருங்கோயில், பெரிய வளாகம், நான்கு கால பூஜைகள், கொடிமரம் திருவிழா என கண்ட இந்த ஆலயம் ஏதோ காரணத்தினால் பராமரிக்க மறந்தன கடந்த சில தலைமுறைகள்.வழிபடுவோரின் எண்ணிக்கை குறைய குறைய ஆலயத்தை மெல்ல முட்காடுகள் பரவி ஆக்கிரமிக்க கோயில் அதில் மறைந்துபோனது. எல்லைதெய்வங்கள், மாரியம்மன் கோயில்கள் எங்கும் புது பொலிவுடன் இருக்க சிவாலயம் மட்டும் ஏன் இப்படி பாழடைந்து கிடக்கிறது நம் ஊர், நம் கோயில்; இதனை தூக்கி நிறுத்துவது நம் கடன் என்று மக்கள் ஒன்று சேர, உண்மையிலேயே தூக்கி நிறுத்தியுள்ளனர். ஆம், பழைய தரை மட்டத்தில் இருந்து கருவறைகள் முற்றிலும் பிரித்து எடுக்கப்பட்டு எட்டு அடிகள் வரை உயர்த்தி கட்டி சுற்றிலும் மண் கொண்டு நிரப்பி பெரும்பகுதி பணியினை இந்த சிற்றூர் மக்கள் முடித்துள்ளனர். என்பது பெருமை கொள்ளத்தக்கது. பல நூறாண்டுகள் கழித்து கருவறையில் விளக்கெரியத் தொடங்கியது. பிரதோஷம், அன்னாபிஷேகம், சிவராத்திரி என பூஜைகள் செய்யத் தொடங்கினார்கள். இறைவனும் இறைவியும் மனம் குளிர்ந்து அருளை வாரி வழங்கினர்.. கேட்டவர்க்கு கேட்டவரம் கிடைத்தது அனைவரும் அழகேஸ்வரருக்கு அடியார்கள் ஆனார்கள். தற்போது ஆலயம் எப்படி இருக்கிறது? 1.இறைவன் அழகேஸ்வரர் கிழக்கு நோக்கிய கருவறை கட்டுமானம் சுதைகள் பணி முடிந்து விட்டன. /வண்ணம் தீட்டவேண்டும். 2.இறைவி அழகம்மை , முருகன் கருவறை பணிகள் நிறைவு; விமானம் கட்டும் பணிகளுக்கு செங்கல், சிமென்ட் உபயதாரர் தேவை. 3.சண்டேசர் சிற்றாலய பணிகள் முடிந்துவிட்டன, /வண்ணமடிக்க வேண்டும். 4.நவகிரக மண்டபம் கட்டவேண்டும். 5.சுற்றுமதில் 600 அடிக்கு 10அடி உயரம் எழுப்ப வேண்டும். / 65,000 செங்கல் தேவை 6.மடப்பள்ளி புதிதாய் கட்டவேண்டும். 7.விநாயகர் சிற்றாலயம் முற்றிலும் அழிந்து போயிருக்கின்றது அதனையும் முழுமையாக கட்ட வேண்டும். 8.அனைத்தையும் வண்ணம் தீட்டி குடமுழுக்கும் செய்ய வேண்டும் அனைத்துக்கும் பொருள் வேண்டுமல்லவா? நாம் ஒற்றை ரூபாய் கூட கொடுக்கலாம். காரணம் எல்லா அழகிய ஓவியங்களும் சிறு புள்ளியில் இருந்தே தொடங்குகின்றன. திரு. வேலு / திருப்பணி ஒருங்கிணைப்பாளர் -7373909874, # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

500 – 1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பாலக்கொல்லை

அருகிலுள்ள இரயில் நிலையம்

உளூந்தூர்ப்பேட்டை

அருகிலுள்ள விமான நிலையம்

பாண்டிச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top