Tuesday Jul 02, 2024

பரக்கலக்கோட்டை பொது ஆவுடையார் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி :

பரக்கலக்கோட்டை பொது ஆவுடையார் திருக்கோயில்,

பரக்கலக்கோட்டை,

தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு 614613

தொலைபேசி: +91- 4373 – 283 295, 248 781.

இறைவன்:

பொதுஆவுடையார் (மத்தியபுரீஸ்வரர்)  

இறைவி:

கஜலட்சுமி

அறிமுகம்:

பொது ஆவுடையார் கோயில் அல்லது மத்தியபுரீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள பரக்கலக்கோட்டையில் அமைந்துள்ளது. இக்கோயில் சிவன் மத்தியபுரீஸ்வரராகவும், பொது ஆவுடையார் எனவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தாயார் கஜலட்சுமி என்று அழைக்கப்படுகிறார். இக்கோயில் 1000 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது.

புராண முக்கியத்துவம் :

வான் கோபர், மகா கோபர் என்ற இரு முனிவர்களுக்கு “”இல்லறம் சிறந்ததா? துறவறம் சிறந்ததா?” என சந்தேகம் வந்தது. தங்களுக்கு தீர்ப்பு சொல்லும்படி இருவரும் சிதம்பரம் சென்று நடராஜரிடம் வேண்டினர். அவர் இத்தலத்தில் காத்திருக்கும்படி சொல்லி, தான் அவர்களுக்கு தீர்ப்பு வழங்குவதாக கூறினார். அதன்படி இத்தலம் வந்த இரு முனிவர்களும் புளிய மரத்தின் கீழ் அமர்ந்தனர். சுவாமி ஒரு கார்த்திகை மாத, திங்கட்கிழமையன்று சிதம்பரத்தில் பூஜைகள் முடிந்த பிறகு இங்கு வந்து ஒரு வெள்ளால மரத்தின் கீழ் நின்று இருவருக்கும் பொதுவாக, “”இல்லறமாயினும், துறவறமாயினும் நல்லறமாக இருந்தால் இரண்டுமே சிறப்பு,” என்று பொதுவாக தீர்ப்பு கூறிவிட்டு, பின்பு வெள்ளால மரத்திலேயே ஐக்கியமானார். தீர்ப்பு சொல்வதற்காக வந்த சிவன் என்பதால் இவர் “பொது ஆவுடையார்’ என்றும், “மத்தியபுரீஸ்வரர்’ என்றும் பெயர் பெற்றார்.

நம்பிக்கைகள்:

இங்கு அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற வேண்டிக்கொள்ளலாம்.

சிறப்பு அம்சங்கள்:

ஆலமர சிவன்: ரூபமாகவும் (வடிவம்), அரூபமாகவும் (வடிவம் இல்லாமல்), அருவுருவமாகவும் (லிங்கம்) வழிபடப்பெறும் சிவபெருமான், இத்தலத்தில் வெள்ளால மரத்தின் வடிவில் அருள் செய்கிறார். எனவே, இங்கு லிங்க வடிவம் கிடையாது. கோயில் திறக்கப்படும்போது, வெள்ளால மரத்தின் முன்பக்கத்தில் ஒரு பகுதியில் மட்டும் சந்தன காப்பு சாத்தி, வஸ்திரங்கள் அணிவித்து சிவலிங்கமாக அலங்காரம் செய்கின்றனர். அப்போது சன்னதிக்குள் மரத்தை காண முடியாதபடி சுற்றிலும் வெண்ணிற துணியால் மறைத்து விடுகிறார்கள். நமக்கு லிங்க சொரூபம் மட்டுமே தெரிகிறது. மூலஸ்தானத்திற்குள் ஆல மரத்திற்கு முன்பாக சிவனின் பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. சிவபெருமான், முனிவர்களுக்கும் காட்சி தந்ததன் அடையாளமாக பாதம் வைக்கப்பட்டிருக்கிறது.

நள்ளிரவு மட்டும் தரிசனம்: இக்கோயிலில் பகலில் நடை திறப்பது கிடையாது. ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று மட்டும் இரவில் நடைதிறக்கப்படுகிறது. அப்போதுதான் சுவாமியை தரிசிக்க முடியும். அன்றிரவில் 10 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 11 மணிக்கு சுவாமிக்கு அலங்காரமும், பூஜைகளும் நடக்கிறது. அப்போது சுவாமியை தரிசிக்க முடியாதபடி திரையிடப்படுகிறது. அதன்பின் 11.30க்கு மீண்டும் நடை அடைக்கப்பட்டு நந்தி, விநாயகர், பெத்த பெருமாள், மகாகோபர், வான்கோபர் சன்னதிகளில் பூஜை நடத்திவிட்டு, பின்பு நள்ளிரவு 12 மணிக்கு மீண்டும் சுவாமி சன்னதி திறக்கப்படுகிறது. அப்போதுதான் சுவாமியை தரிசிக்க முடியும். பக்தர்களின் தரிசனம் முடிந்தபின்பு, சூரிய உதயத்திற்கு முன்பாகவே நடை சாத்திவிடுகின்றனர்.

தைப்பொங்கலன்று ஒருநாள் மட்டும் அதிகாலையில் இருந்து, மாலை 7 மணி வரையில் நாள் முழுதும் நடை திறக்கப்படுகிறது. அன்று சுவாமியின் மேனியில் சூரிய ஒளி விழுவது சிறப்பம்சம். இதுதவிர, சிவனுக்குரிய சிவராத்திரி, திருக்கார்த்திகை, அன்னாபிஷேகம் என எந்த பண்டிகையும் இங்கு கொண்டாடப்படுவதில்லை.

குரு தலம்: சிவனின் குரு அம்சமான தெட்சிணாமூர்த்தி, சிவன் கோயில்களில் கோஷ்ட சுவரில் கல்லால மரத்தின் கீழ் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். இத்தலத்தில் சுவாமியே ஆலமரத்தின் வடிவில் அருளுகிறார். எனவே, இத்தலத்தை குரு தலமாகவும் கருதலாம். இங்கு சிவனாக கருதப்படும் ஆலமரத்தின் இலையே பிரதான பிரசாதமாக தரப்படுகிறது. பக்தர்கள் இந்த இலையைக் கொண்டு சென்று வீட்வீ டில் வைத்தால் ஐஸ்வர்யம் பெருகும் என்பதும், விவசாய நிலங்களில் இட்டால் விவசாயம் செழிக்கும் என்பதும் நம்பிக்கை.

இக்கோயில் நடை அடைக்கப்பட்டிருக்கும் நேரத்தில், சுவாமி சன்னதி கதவிற்கே பூஜைகள் நடத்தப்படுகிறது. பக்தர்கள் அப்போது சன்னதி கதவையே சுவாமியாக பாவித்து மாலைகள் சாத்தி வழிபட்டு, பிரகாரத்தில் இருந்து ஆலமரத்தை தரிசித்துவிட்டு செல்கிறார்கள். திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் இம்மரத்தில் தாலி, தொட்டில் கட்டி வேண்டிக்கொள்கிறார்கள்.

விளக்குமாறு காணிக்கை: இக்கோயிலில் பெண்கள் முடி வளருவதற்காக விளக்குமாறை காணிக்கையாக செலுத்துகின்றனர். தென்னங்கீற்றில் உள்ள குச்சிகளை, தங்களது கையால் விளக்குமாறாக செய்து இவ்வாறு காணிக்கை செலுத்துகின்றனர். இவ்வாறு செய்வதால் தென்னங்கீற்று போலவே முடி வளரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு கிடைக்கும் விளக்குமாறுகளே ஆயிரக்கணக்கில் குவிந்துவிடும் என்கிறார்கள். இத்தலத்தில் சிவபெருமானிடம் வேண்டிக்கொள்ளும் அனைத்து நியாயமான கோரிக்கைகளும் நிறைவேறுவதாக நம்பிக்கை. இவ்வாறு வேண்டுதல் நிறைவேறப்பெற்றவர்கள் இக்கோயிலுக்கு அதிகளவில் காணிக்கை செலுத்துகின்றனர்.

கார்த்திகை சோமவாரத்தின்போது பக்தர்கள் தங்களது நிலத்தில் விளைந்த நெல், உளுந்து, பயிறு, எள் முதலிய அனைத்து தானியங்களையும், வீட்டு உபயோகப்பொருட்கள், வஸ்திரங்கள், அலங்கார பொருட்கள் என எளிய தவிட்டில் (நெல் உமி) இருந்து தங்கக்காசு வரையிலும் அனைத்து பொருட்களையும் காணிக்கையாக செலுத்துகின்றனர். இவ்வாறு கோயிலுக்கு செலுத்தப்படும் காணிக்கைகள் பெறுவதற்காகவே, பிரம்மாண்டமான பந்தல்கள் போடப்படுகிறது. 

கார்த்திகை மாத நான்கு சோமவார நிகழ்ச்சியின் போதும் நள்ளிரவு இரண்டாம் ஜாமத்தில் பொது ஆவுடையாருக்கு சிறப்பு பூஜை நடத்தப்படும். மற்ற கோயில்களில் நடைசாற்றப்படும் நேரத்தில் இக்கோயிலில் நடை திறக்கப்பட்டு அதிகாலை நடைசாற்றப்படும். சோமாவார நாள் தவிர மற்ற நாட்களில் கதவு மூடப்பட்டு, கதவுகளுக்கு பூக்கள் சூடி பூஜைகள் நடத்தப்படும். வெண் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து மத்தியஸ்தம் செய்ததால் வெண் ஆலமரமே ஸ்தல விருச்சமாக வணங்கப்படுகிறது. மர த்தின் வேரில் சந்தனம் பூசி, அதன் மேல் நெற்றிப்பட்டம், நாசி, திருவாய், முன்புறம் திருவாய்ச்சி அமைத்து சிவலிங்க வடிவில் இருப்பதை பக்தர்கள் வழிபடுவர். ஒவ்வொரு வருடமும் கடைசி சோமவார தினத்தில் நள்ளிரவு சரியாக 12 மணியளவில் விசேஷ பூஜைகள் செய்து நடை திறக்கப்பட்டு. தொடர்ந்து பொதுஆவுடையாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்படும். இவ்விழாவில் தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த பல லட்சம் பக்தர்கள் கலந்துக்கொண்டு, தங்கள் கொண்டு வரும் ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவைகளை காணிக்கைகளாக செலுத்தி வழிபடுவர்கள். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் , பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் பரக்கலக்கோட்டை கிராமவாசிகள் செய்வார்கள்.

திருவிழாக்கள்:

கார்த்திகை சோமவாரம், தைப்பொங்கல்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பரக்கலக்கோட்டை

அருகிலுள்ள இரயில் நிலையம்

பட்டுக்கோட்டை

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top