Wednesday Nov 20, 2024

பன்னம்பாறை மாடத்தி அம்மன் திருக்கோயில், தூத்துக்குடி

முகவரி :

பன்னம்பாறை மாடத்தி அம்மன் திருக்கோயில்,

பன்னம்பாறை,

தூத்துக்குடி மாவட்டம் – 628701.

இறைவி:

மாடத்தி அம்மன்

அறிமுகம்:

மாடத்தியம்மன் என்பவர் நாட்டார் பெண் தெய்வங்களில் ஒருவராவார். இவருக்கு  தூத்துக்குடி மாவட்டத்தில் பன்னம்பாறை எனுமிடத்தில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.  400 ஆண்டுகளுக்கும் முன்பு மாடத்தி எனும் பெண்ணை அவளின் ஏழு அண்ணமார்கள் கௌரவ கொலை செய்தனர். அந்தக் கொலை தவறான சந்தேகத்தால் நடத்தப்பட்டது என்பதால், அந்த அண்ணன்மார்களின் வாரிசுகள் மாடத்திக்கு கோயில் கட்டி வழிபட்டு வருகின்றனர். திருச்செந்தூரிலிருந்து சாத்தான்குளத்திற்கு போகும் வழியில் இருக்கிறது பன்னம்பாறை.

புராண முக்கியத்துவம் :

முருகேச பாண்டியன்- முத்துப்பேச்சியம்மாள் தம்பதியினருக்கு ஏழு ஆண் குழந்தைகள் பிறந்திருந்தன. தங்களுக்கு ஒரு பெண் குழந்தை வேண்டுமென குலதெய்வமான சுடலைமாடனிடம் நேர்ந்துகொண்டனர். அவர்களுக்கு அடுத்தாண்டு பெண்பிள்ளை பிறந்தது. அதற்கு மாடத்தி என்று பெயரிட்டு வளர்த்தனர்.

மாடத்தியின் பத்து வயதில் பெற்றோர் இறந்தனர். அதன்பின்பு ஏழு அண்ணன்மார்களும் அவளை வளர்த்து வந்தனர். இவர்கள் பன்னம்பாறை கிராமத்தில் நாட்டாமை செய்துவந்தனர். பன்னம்பாறைக்கும் அருகிலுள்ள பூச்சிக்காடு கிராமத்திற்கும் பிரட்சனை உண்டானது. அதனை மாடத்தியின் அண்ணன் கந்தையாபாண்டியன் தீர்த்து வைத்தார். ஆனால் பூச்சிக்காட்டினை சேர்ந்தவர்கள் தங்களுக்கு அநிதி இழைக்கப்பட்டதாக கருதினார்கள். பூச்சிக்காடு கிராமத்திலிருந்து அருணாசலத்தேவர் தன் மகனுக்கு பெண்கேட்டு வந்தபோது, தற்போது மாடத்திக்கு திருமணம் செய்யும் உத்தேசமில்லை என திருப்பி அனுப்பி விட்டனர். அதனை பூச்சிக்காடு கிராமத்தினர் அவமானமாக நினைத்தனர்.

மாடத்தியை ஒட்டன்புதூர் குளம் கிராமத்தினைச் சேர்ந்த செல்லப்பாண்டியனுக்கு திருமணம் செய்து வைத்தனர். இத்தம்பதிகளுக்கு சுடலைமுத்து, இசக்கி என இரு குழந்தைகள் பிறந்தன. செல்லப்பாண்டி பிழைப்புக்காக கொழும்புக்கு சென்றார். அவர் சென்றபின்பு மாமியாருடன் சண்டை ஏற்பட்டு அண்ணமார்களிடமே வந்துசேர்ந்தாள் மாடத்தி. இரண்டே வருடங்களில் திரும்பிவந்துவிட்ட அவளையும் குழந்தைகளையும் அண்ணன்களும், அண்ணிமார்களும் அன்போடுதான் நடத்தினார்கள்.

ஒருமுறை திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசிமாத திருவிழா நடந்துகொண்டிருந்தது. தனது இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு, அண்ணிமார்கள் துணையோடு மாடத்தி திருவிழாவிற்கு சென்றாள். மிட்டாய்க் கடைகளில் அண்ணிமார்களிடம், ‘மதனி, உங்க மருமக பிள்ள, ராட்டு ஆடனும்கிறான். கூட்டிப்போயிட்டு வாரேன்,’ என்று கூறிச்சென்றாள் மாடத்தி. குழந்தைகளை ராட்டில் ஏற்றிவிட்டாள். ராட்டினம் சுற்றத் தொடங்கியதும் மகள் அழ, உடனே ராட்டை நிறுத்தச் சொல்லி மகளை எடுக்கச் சென்றாள்.

பக்கத்தில் நின்ற ஒருவன் ராட்டையில் உயரே நின்ற தட்டிலிருந்து மகளை எடுத்து மாடத்தியிடம் கொடுக்க, அவள் வாங்கிக்கொண்டாள். மாடத்தியை முதலில் பெண் கேட்டுச் சென்ற பூச்சிக்காடு குடும்பத்தைச் சேர்ந்த சிலர் இதைப் பார்த்தார்கள். இரண்டு வாரத்துக்குப் பிறகு சாத்தான்குளத்தில் ஒரு பஞ்சாயத்துக்கு கந்தையா பாண்டியன் மற்றும் அவரது சகோதரர்கள் தீர்ப்பு கூற சென்றனர். தீர்ப்பு பன்னம்பாறைக்கு சாதகமாக இருந்ததால் ஆத்திரப்பட்ட பூச்சிக்காட்டார்கள் கந்தையா பாண்டியனை பார்த்து, ‘‘ஊருக்கெல்லாம் நியாயஞ்சொல்லும் உன் குடும்ப கௌரவத்தை, உன் உடம்பிறந்தா குழி தோண்டி புதைச்சிட்டா, தெரியுமா உனக்கு?’’ என்று கேட்டார்கள்.

‘‘என்னலே செல்லுதே?’’ என்று கோபமாகக் கேட்டான் அண்ணன். ‘‘மாசித் திருவிழாவில, உன் தங்கச்சி மாடத்தி, எவனோ ஒருத்தன்கூட சோடிபோட்டு ராட்டு ஆடினாளே, அவளுக்கு என்ன தீர்ப்ப சொல்லப்போற?’’ உடனே அந்த இடத்திலிருந்து கடும் சினத்துடன் புறப்பட்டனர், கந்தையா பாண்டினும் அவரது தம்பிகளும். வீட்டுக்கு வந்த அவர்கள் சாப்பிடக்கூட இல்லாமல் களத்து மேட்டிற்குப்போய் ஆலோசித்துக்கொண்டிருந்தார்கள். ‘நாலு பேரு சபையில நம்மள கேவலப்படுத்தின தங்கச்சிய கொல்லுவதுதான் சரி’ என முடிவு செய்தனர்.

மறுநாள் காலை, சந்தண பாண்டியன், தங்கையை அழைத்தான், ‘‘தாயி, விறகு வெட்டப்போணும்… ஓலைப்பெட்டியை எடுத்துக்கிட்டு கல்லாட்டாங்குடி தோட்டகாட்டுக்கு விரைசல வந்து சேரு,’’ என்று கூறிவிட்டு வேகமாகச் சென்றான். அண்ணன் தம்பிகள் ஏழு பேரும் கல்லாட்டாங்குடி ஆலமரத்து கிளைகளில் ஏறி அமர்ந்து கொண்டனர். குலசாமியை வேண்டிக்கொண்டனர். ‘ஐயா, நம்ம குடும்ப கௌரவத்துக்கு பங்கத்தை ஏற்படுத்திட்டா உடம்புறந்தா. அதனால இந்த முடிவு எடுத்திருக்கோம். எங்களை மன்னிச்சிரு அப்பனே’ என்று வேண்டிக்கொண்டனர்.

தங்கச்சி வந்து விறகு எடுப்பதற்கு ஏதுவாக காய்ந்த மரக்கிளைகளை கொஞ்சம் வெட்டிப்போட்டிருந்தனர். மாடத்தி வந்ததும், அண்ணன் சுடலை முத்து பாண்டியன், ‘விறக விருசுல எடு, தாயி’ என்று சொன்னான். மாடத்தியும் குனிந்து இரண்டு சுள்ளி விறகு எடுக்கையில் மரக்கிளையிலிருந்து கீழே குதித்த மூத்த அண்ணன் கந்தையா பாண்டியன், வீச்சருவாளால் தங்கையின் கழுத்தை வெட்ட, மாடத்தியின் தலை தனியேபோய் விழுந்தது. கோபம் தனியும் வரை சுழன்றுகொண்டேயிருந்தது.

பிறகு அந்தத் தலை பேசியது: ‘அண்ணே, எவன் பேச்சேயோ கேட்டு, என்னை இப்படி, பண்ணிட்டியே, என் புள்ளங்களும், புருஷனும் வந்து கேட்டா என்ன பதில் சொல்லுவீக? ஏழு அண்ணன்மார்களிலே ஒருத்தனக்குக்கூடவா தங்கச்சிங்குற இரக்கம் இல்லாம போச்சு?, நான் எந்த தப்பும் பண்ணலையே! என்னைப் பெத்தவளே, இந்த கொடுமையை பார்க்க, நீ உசுரோட இல்லாம போயிட்டியே! ஏ, சுடலமாடசாமி, நீ இருக்குறது உண்மைன்னா இவனுங்களே நீரே கேளும்..’

கண்களை மூட, தனியே கிடந்த அவள் உடல் துடிதுடித்து, கைகள் மண்ணை அள்ளி வீசிவிட்டு அடங்கின. உடனே சகோதரர்கள் மாடத்தியின் உடலை எரித்து, அவளது தலையை மண்ணில் புதைத்து விட்டு வீட்டுக்கு சென்றனர். இப்போது மாடத்தியின் வாரிசுகள், மாடத்தியை சாந்தம் அடையச்செய்து அவள் இறந்த இடத்தில் கோயில் எழுப்பி பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர். இந்த கோயிலில் தீபாவளி அன்று சிலைக்கு எண்ணெய், மற்றும் இளநீரால் அபிஷேகம் செய்து, புதிய பட்டு அணிவித்து, இனிப்பு, காரம் கொண்ட பலகாரங்கள் படையலிட்டு பூஜை செய்கின்றனர்.

நம்பிக்கைகள்:

தன் பிள்ளைகளை விட்டு சென்றதால் அதிக அளவு பாசம் கொண்ட மாடத்தி அம்மன், பிள்ளை வரம் கேட்பவர்களுக்கு உடனே கொடுத்து அவர்களை மகிழ்ச்சி கடலிலி ஆழ்த்துகிறாள்.          

காலம்

400 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பன்னம்பாறை

அருகிலுள்ள இரயில் நிலையம்

தூத்துக்குடி

அருகிலுள்ள விமான நிலையம்

தூத்துக்குடி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top