பனங்காடி பீமநாதர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
பனங்காடி பீமநாதர் சிவன்கோயில்,
பனங்காடி, திருக்குவளை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 610207
இறைவன்:
பீமநாதர்
இறைவி:
அகிலாண்டேஸ்வரி
அறிமுகம்:
பனை மரங்கள் அடர்ந்த பகுதி என்பதால் பனங்காடி எனும் பெயர் பெற்றுள்ளது சிற்றூர். இந்த ஊராட்சியில் வடுவக்குடி, பனங்காடி சூரமங்கலம் மூன்று ஊர்களை உள்ளடக்கியது, மூன்று ஊர்களிலுமே சிவன் கோயில்கள் உள்ளன. திருவாரூரில் இருந்து 18 கிமீ கடந்து கச்சனம் வந்து கீவளூர் சாலையில் ஒருகிமி தூரம் வந்து இடதுபுற சாலையில் திரும்பினால் இந்த பனங்காடி அடையலாம். சிறிய விவசாய கிராமம், வில் போல் வளைந்து செல்லும் சாலையின் இருபுறமும் பனை மரங்கள் அணிவகுத்து நிற்கின்றன. தெருவின் இருபுறமும் வீடுகள், இங்கு ஒரு சிவன் கோயிலும், வைணவ கோயிலும் உள்ளன. ஈசான்ய பகுதியில் உள்ள பெரிய குளத்தின் கரையில் கிழக்கு நோக்கி கோயில் கொண்டுள்ளார் சிவன்.
பதினெண் சித்தர்களில் ஒருவரான பீமநாதர் வழிபட்ட இறைவன் என்றும், பஞ்சபாண்டவர்களில் ஒருவனானான் பீமன் வழிபட்டதால் பீமநாதர் எனவும் இறைவன் அழைக்கப்படுகிறார் என இருவேறு தகவல்கள் உள்ளன. இறைவன் கிழக்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார்; பெரிய ஆவுடையாரில் சிறிய லிங்க பாணனை கொண்டு வித்தியாசமான உருவில் உள்ளார் இறைவன். அம்பிகை அகிலாண்டேஸ்வரி தெற்கு நோக்கிய கோயில் கொண்டுள்ளார்.
முகப்பில் ஒரு மண்டபம் உள்ளது இதில் சிறிய கணபதி ஒருவரும் அவரின் முன்னர் ஒரு சிறிய மூஞ்செலியும் உள்ளது. கருவறை அதிக வேலைப்பாடுகள் ஏதுமின்றி கருங்கல் கொண்டு கட்டப்பட்டு உள்ளது விமானம் அழகிய வட்ட வடிவத்தில் உள்ளது கோட்டத்தில் தென்முகன் உள்ளார், பின்புற கோட்டத்தில் எதுவுமில்லை. இந்த கோட்டத்தில் ஒரு பழைய விநாயகர் சிலை இருத்தப்பட்டு உள்ளது. துர்க்கை வழமையான இடத்திலும் சண்டேசர் தனி சிற்றாலயத்திலும் உள்ளனர். விநாயகர் முருகன் மகாலட்சுமிக்கு தனி சிற்றாலயங்கள் உள்ளன. வடகிழக்கில் நவக்கிரக மண்டபம், பைரவர் சூரியன் ஆகியோருக்கும் மாடங்கள் உள்ளன. இறைவனின் நேர் எதிரில் ஒரு சிறிய மண்டபத்தில் நந்தியும், அதன் பின்புறம் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட மேடையில் பலிபீடம் உள்ளது. திருப்பணிக்காக பாலாலயம் செய்யப்பட்டு உள்ளது திருக்கோயில், விரைவில் குடமுழுக்கு நடைபெறவும் நம்மாலான அனைத்து உதவிகளையும் செய்வோம்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பனங்காடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி