பதான் இராணி படிக்கிணறு (இராணி கி வாவ்), குஜராத்
முகவரி
பதான் இராணி படிக்கிணறு (இராணி கி வாவ்), மோகன் நகர் சொசைட்டி, பதான், குஜராத் 384265
இறைவன்
இறைவன்: சிவன், விஷ்ணு, பிரம்மன்
அறிமுகம்
இராணியின் படிக்கிணறு (இராணி கி வாவ்) இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பதான் மாவட்டத் தலைமையகமான பதான் நகரத்தில் அமைந்துள்ள ஒரு படிக்கிணறு ஆகும். நூற்றுக்கணக்கான படிகளுடன் கூடிய அழகிய இக்கிணற்றை இந்தியாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்களின் ஒன்றாக 22 ஜூன் 2014 அன்று யுனெஸ்கோ அறிவித்துள்ளது. இராணி உதயமதி நிறுவியதால் இக்கிணற்றுக்கு இராணியின் கிணறு பெயராயிற்று.
புராண முக்கியத்துவம்
1050-இல் சோலாங்கி குல அரசை நிறுவியவரும், மன்னன் மூலராஜனின் மகனுமான முதலாம் பீமதேவனின் (1022–1063) நினைவாக, அவரின் மனைவியும் பட்டத்து ராணியுமான உதயமதியும், மகன் முதலாம் கர்ணதேவனும் இணைந்து இக்கிணற்றை நிர்மாணித்தனர். இந்தக் கிணறு 64 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும் 27 மீட்டர் ஆழமும் கொண்டது. இது ஏழு அடுக்குகளாகக் கட்டப்பட்டுள்ளது. கடைசிப் படிக்கட்டுக்குக் கீழே பல கி.மீ நீளமுள்ள சுரங்கப் பாதை சித்பூருக்குச் செல்கிறது. போர்க் காலங்களில் அரச குடும்பத்தினர் தப்பிச் செல்வதற்காக இச்சுரங்கப்பாதைக் கட்டப்பட்டிருக்கிறது. 1304இல் வாழ்ந்த சமண சமயத் துறவி மெருங்க சூரி என்பவர் எழுதிய பிரபந்த சிந்தாமணி என்ற நூலில் ராணி உதயமதி நிறுவிய இந்த படிக் கிணற்றைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது. காலப் போக்கில் இந்த அழகிய கிணறு கற்களாலும் மணலாலும் மூடப்பட்டுவிட்டது. இதனால் காலப்போக்கில் இந்தக் கிணற்றை பற்றித் தெரியாமலே போய்விட்டது. 1960 ஆம் ஆண்டு தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்டது.[4] 1980 இல் இப்படிக் கிணற்றை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் அகழ்வாய்வு செய்த போது நல்ல நிலையில் இருந்தது.
சிறப்பு அம்சங்கள்
இக்கிணற்றின் பக்கவாட்டுச் சுவர்களில் விஷ்ணுவின் பத்து அவதாரங்கள், காளி, ராமர், கிருஷ்ணர், நரசிம்மர், கல்கி, மகிசாசூரன் வென்ற மகிசாசூரமர்தினி, வாமனர், வராகி, நாககன்னிகள், யோகினி, 16 வகையான கலைநயத்துடன் கூடிய அழகிய தேவலோக அப்சரசுகளின் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. மேலும் கௌதம புத்தர், சாதுக்கள், திருபாற்கடலில் ஆதிசேசன் மீது பள்ளி கொண்டுள்ள விஷ்ணுவின் சிற்பங்கள் கொண்டுள்ளன. மேலும் இந்த இராணியின் கிணறு மழை நீர் சேமிக்கும் இடமாக இருந்தது. இக்கிணற்றைச் சுற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு விஷக்காய்ச்சல் நீக்கும் ஆயுர்வேத மருத்துவக் குணம் கொண்ட செடி, கொடிகள் வளர்க்கப்பட்டு இருந்தது. இந்த இராணியின் கிணறு நீர் சேமிக்கும் இடமாக மட்டும் இல்லாது குஜராத் மக்களின் ஆன்மிகத் தலமாக விளங்கியது. இக்குளத்தின் பக்கவாட்டுச் சுவர்களில் 800 இக்கும் மேற்பட்ட அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
காலம்
11 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம்
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பதான்
அருகிலுள்ள இரயில் நிலையம்
பாட்னா
அருகிலுள்ள விமான நிலையம்
அகமதாபாத்