Tuesday Jun 25, 2024

நேமம் ஐராவதேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி

நேமம் ஐராவதேஸ்வரர் திருக்கோயில், நேமம், திருக்காட்டுப்பள்ளி வழி, திருவையாறு வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 613104.

இறைவன்

இறைவன்: ஐராவதேஸ்வரர் இறைவி: அலங்காரவல்லி

அறிமுகம்

நேமம் ஐராவதேஸ்வரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு வட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். கும்பகோணம்-தஞ்சாவூர் சாலையில் அய்யம்பேட்டை, கண்டியூரை அடுத்து திருக்காட்டுப்பள்ளி வந்து அங்கிருந்து தோகூர் சாலையில் நேமம் உள்ளது. அங்கு இக்கோயில் உள்ளது. நியமம் மக்கள் வழக்கில் ‘நேமம்’ என்று வழங்குகிறது. இவ்வாலயம் கிழக்கு தோக்கிய ஒரு மூன்று நிலை இராஜ கோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் நந்தியெம்பெருமான் சுமார் 3 அடி பள்ளத்தில் காட்சி தருகிறார். உள்ளே கருவறையில் ஐராவதேஸ்வரர் கிழக்கு தோக்கி அருட்காட்சி தருகிறார். கருவறை கோஷ்டங்களில் பிரம்மா, தட்சிணாமூர்த்தி, துர்க்கை ஆகியோரைக் காணலாம். கருவறை மேற்குச் சுற்றில் விநாயகர் மற்றும் வள்ளி தெய்வானையுடன் முருகர் காட்சி தருகின்றனர். நவக்கிரக சந்நிதியும் இங்குள்ளது. சனி பகவான் தனது காக வாகனத்துடன் காட்சி தருகிறார்ஃ இத்தலத்தில் இரண்டு அம்மன்கள் உள்ளனர் இருவருமே அலங்காரவல்லி என்ற பெயருடன் விளங்குகின்றனர். இத்தலம் அப்பர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள சோழ நாட்டு வைப்புத்தலமாகும்.

புராண முக்கியத்துவம்

காவிரி நதியின் தென்கரையில் அமைந்துள்ள நியமம் என்றும் இக்காலத்தில் நேமம் என்றும் அழைக்கப்படும் இத்தலம் ஒரு புராண தலமாகும். கிருதா யுகத்தில் பாரிஜாதவனம் என்றும், திரேதா யுகத்தில் பீமேஸ்வரம் என்றும், துவாகர யுகத்தில் இந்திரவனம் என்றும்ர இக்கலி யுகத்தில் ஐராவதேஸ்வரம் என்றும் நியமம் போற்றப்பட்டு உள்ளது. பிரம்மா, இந்திரன், ரம்பை, இந்திரன் வாகனமான ஐராவதம் ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர். பிரம்மாண்ட புராணத்தில் இத்தல இறைவன் பாரிஜாதவனேஸ்வரர், பிரம்மபுரீஸ்வரர், இந்திரபுரீஸ்வரர், புஷ்பவனேஸ்வரர், ஐராவதேஸ்வரர் என்று 5 பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளார். ஒரு சமயம் தேவலோகத்தில் நடனம் புரிந்த ரம்பை அதன் பின் களைப்பு மிகுதியால் படுத்து உறங்கி விட்டாள். தூக்கத்தில் அவள் மேலாடை விலகியது. அதை உணராமல் அவள் தூங்கிக் கொண்டு இருக்க அவ்வழியே வந்த நாரதர் அதை கவனித்து கோபம் கொண்டு அவளை பூலோகம் சென்று வாழும் படி சபித்தார். ரம்பையும் பூலோகம் வந்து இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டு வந்தாள். இந்திர லோகத்தில் ரம்பை இல்லாமல் நடனம் சோபையின்றி உள்ளதை கவனித்த இந்திரன் அவளை அழைத்து வர ஐராவதத்தை அனுப்பினான். ஐராவதமும் இத்தலம் வந்து ரம்பையைக் கண்டு தேவலோகம் திரும்பி வரும்படி கூற, ரம்பை சிவபெருமான் அனுமதியின்றி திரும்பி வர மாட்டேன் என்று கூறினாள். ரம்பையை பலவந்தமாக தேவலோகம் கூட்டிச் செல்ல தன் துதிக்கையால் தூக்கிச் செல்ல முயன்று அதன் முயற்சியில் தோல்வியுற்று ஐராவதமும் தளர்ந்து கீழே விழுந்தது. ரம்பையும், ஐராவதத்தையும் காணாமல் இந்திரன் இத்தலம் வந்தான். சிவபெருமானை போற்றித் துதித்து ரம்பை மற்றும் ஐராவதத்தையும் இந்திரலோகம் கூட்டிச்செல்ல அனுமதி கேட்டான். இறைவனும் அவர்களை ஆசீர்வதித்து அனுப்பினார்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

இளங்காடு

அருகிலுள்ள இரயில் நிலையம்

புடலூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top