நாதன்கோயில் நந்தீஸ்வரர் சிவன்கோயில், தஞ்சாவூர்
முகவரி :
நாதன்கோயில் நந்தீஸ்வரர் சிவன்கோயில்,
நாதன்கோயில், கும்பகோணம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 612703.
இறைவன்:
நந்தீஸ்வரர்
இறைவி:
நந்தினி அம்பாள்
அறிமுகம்:
கும்பகோணம் மகாமககுளத்தின் தென்கரையில் இருந்து தெற்கு நோக்கி செல்லும் நாதன்கோயில் சாலையில் ஏழு கிமீ தூரம் சென்றால் ஊரை அடையலாம். திருமலைராஜன் ஆற்றின் தென் கரையில் தான் இவ்வூர் அமைந்துள்ளது. பிரதான சாலையை ஒட்டியே இக்கோயில் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய கோயில், இறைவன் நந்தீஸ்வரர் மிகப்பெரிய லிங்கமூர்த்தியாக உள்ளார். எதிரில் நந்தியும், பலிபீடமும் உள்ளது. இறைவி நந்தினி அம்பாள் தெற்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார். பிரகாரத்தில் தென்மேற்கில் விநாயகரும், வடமேற்கில் முருகன் வள்ளி தெய்வானையுடன் உள்ளார். சண்டேசர் உள்ளார். வேறு பரிவார தெய்வங்கள் ஏதுமில்லை. நாயக்கர் கால கோயில் இப்போது இல்லை, தற்போது நாம் காணும் கோயில் சில ஆண்டுகளின் முன்னம் எடுக்கப்பட்டிருக்கவேண்டும்.
புராண முக்கியத்துவம் :
சிவபெருமானின் வாகனமாகவும், கயிலை மலையின் வாயிற்காவலனாகவும் பூதகணங்களின் தலைவராகவும் உள்ளவர் நந்திதேவர். இவருடைய அனுமதி பெற்றுவிட்டுத் தான் சிவாலயங்களில் நாம் தரிசனம் செய்ய வேண்டும். ஒருமுறை நந்தி தேவர் வைகுண்டம் வந்த பொழுது, அங்கு காவலாக இருந்த துவாரபாலகர்களின் அனுமதி பெறாமல் உள்ளே சென்றார். அவர்கள் தடுத்தபோது அதை பொருட்படுத்தாமல் உள்ளே செல்வதில் குறியாக இருந்தார், இதனால் கோபமடைந்த துவாரபாலகர்கள், வெப்பசூட்டினால் துன்பமுறுவாய் என்று சாபமிட்டனர். இதனால் நந்தியின் உடலெங்கும் வெப்பம் பரவி சொல்லொணா துன்பம் அடைந்தார். . இறுதியில் சிவனிடம் இதைச் சொல்லி தீர்வு கேட்டார். அதற்கு இறைவன், ‘சகல விதமான பாவங்களையும் போக்கும் செண்பகாரண்யம் எனும் தலம் கும்பகோணத்திற்குத் தெற்கே அமைந்துள்ளது. அங்கு போய் லிங்கம் அமைத்து தவம் செய்து விமோசனம் பெற்றுக்கொள்’ என்றார். அதன்படி நந்தி தேவர் இங்கு வந்து தவம் செய்து, சாப நிவர்த்தி பெற்றார். அத்துடன், தான் இங்கு வந்து தவம் செய்து பேறு பெற்றமையால், தன் பெயராலேயே இத்தலம் விளங்க வேண்டும் என்று அருள் பெற்றார்.அதன் பிறகு இத்தலம் நந்திபுரம் என்று வழங்கப்பட்டது.
இவ்வூரில் ஆழ்வார்களால் பாடப்பெற்ற ஜெகந்நாத பெருமாள் கோயில் உள்ளது, இங்குள்ள மகாவிஷ்ணு நாதநாதன் என்றும், விண்ணகரப் பெருமாள் என்றும் அழைக்கப்படுவதால் இவ்வூருக்கு நாதன்கோயில் என்றும் நந்திபுரத்துவிண்ணகரம் என்றும் பெயர் வந்தது. எனினும் மக்கள் நாதன்கோயில் என்றே அழைக்கின்றனர். விஜயரங்க சொக்கப்ப நாயக்கர் என்னும் நாயக்க மன்னர் தன் அன்னைக்குத் தோன்றிய குன்மநோயை நீக்கியதால் ஜகன்னாத பெருமாள் கோயிலையும், இந்த சிவன்கோயிலையும் திருப்பணி செய்தார். நாதன்கோயில் காளமேகப் புலவரின் பிறப்பிடம் ஆகும்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நாதன்கோயில்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி