தொண்டனூர் ஸ்ரீ நம்பிநாராயணன் பெருமாள் கோயில், கர்நாடகா
முகவரி
தொண்டனூர் ஸ்ரீ நம்பிநாராயணன் பெருமாள் கோயில், தொண்டனூர், பாண்டவபுரம், மாண்டியா, கர்நாடகா – 571434
இறைவன்
இறைவன்: நம்பிநாராயணன் இறைவி: அரவிந்த நாயகி
அறிமுகம்
பிரசித்தி பெற்ற மேலுக்கோட்டை அருகே உள்ள தொன்னூர் அல்லது தொண்டனூரில் உள்ள நம்பி நாராயணன் கோயில் பஞ்ச நாராயண க்ஷேத்திரங்களில் முதன்மையானதும் பழமையானதும் ஆகும். தொன்னூர் ஹொய்சலாக்களின் மாகாணத் தலைநகரமாக இருந்தது மற்றும் யதுகிரி என்று அழைக்கப்படும் ஒரு சிறிய குன்றின் தெற்கு சரிவுகளில் உள்ளது. பஞ்ச நாராயணன் கோவில்களில் ஒன்றான இது தற்போது தொன்னூர் என்று அழைக்கப்படுகிறது. ராமானுஜர் கருவறைக்கு வெளியே புதிய மண்டபங்களைக் கட்டி, கோயிலைப் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்தார். கட்டிடக்கலை வடிவமைப்பு சோழர்களிடமிருந்து வந்தது. இக்கோயில் ஹொய்சாள மன்னர்களால் (11ஆம் நூற்றாண்டு) கட்டப்பட்டது. நுழைவாயிலில் ஹொய்சாளர்களின் பாணியில் ராஜ கோபுரம் இல்லை. ஆனால் முழு உள் பிரகாரமும் வெளிப்புற சுவர்களும் வலுவான கிரானைட் அடித்தள அமைப்பைக் கொண்டுள்ளன மற்றும் இன்றுவரை திடமான தோற்றத்தைக் கொண்டுள்ளன. தொன்னூரில் உள்ள மூன்று கோவில்களில் இதுவும் ஒன்று, மற்ற இரண்டு கோபாலகிருஷ்ணன் கோவில் (நம்பி நாராயணன் கோவில் எதிரில்) மற்றும் யோக நரசிம்மர் கோவில்.
புராண முக்கியத்துவம்
ஸ்ரீரங்கத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற ராமானுஜர் அடைக்கலமானது, இங்கு தான். ராமானுஜரின் சீடர்களில் ஒருவரான தொண்டனூர் நம்பி, அவரை வரவேற்று உபசரித்தார். அப்போது, பிட்டிதேவன் என்பவன் அந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்தான். சமணத்தின்மீது பற்றுக் கொண்டிருந்தவன் அவன். ஒருமுறை, தொண்டனூர் நம்பி, பிட்டிதேவனின் சபைக்குச் சென்றபோது, இருளில் மூழ்கிக் கிடந்தது அரண்மனை. எங்கும் இருள்; எங்கும் சோகம்! அதிர்ச்சியும் குழப்பமுமாக உள்ளே நுழைந்த தொண்டனூர் நம்பியிடம், என் மகனை பிரம்மராட்சஸ் பிடித்து அலைக்கழிக்கிறது. இதிலிருந்து என் மகள் மீள்வதற்கு எங்களின் சமண மத குருவும் எவ்வளவோ முயற்சி செய்துவிட்டார். ஆனால், பலன் ஏதுமில்லை எனச் சொல்லி வருந்தினான் மன்னன். இதைக்கேட்ட தொண்டனூர் நம்பி, மன்னா, கவலை வேண்டாம் ! உன் அதிர்ஷ்டம், எங்களின் குருநாதர், ராமானுஜர், இங்கே வருகை தந்துள்ளார். அவரை அழைத்து வருகிறேன். பிரம்மராட்சஸை அவர் விரட்டிவிடுவார், பாருங்கள் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். உடனே மன்னன், நீங்கள் சொல்வது போல உங்களின் குருநாதர், பிரம்மராட்சஸப் பேயை விரட்டிவிட்டால், சமண மதத்தில் இருந்து விலகி, ராமானுஜரை குருவாக ஏற்று, வைணவத்தைப் போற்றத் துவங்கிவிடுவேன் என நெகிழ்ந்தான். அதன்படி, அரண்மனைக்கு வந்தார் ராமானுஜர், அனைவரும் அவரை வரவேற்றனர். பித்துப் பிடித்தவள் போல் இருந்த மன்னனின் மகளைப் பார்த்தார். தன் கமண்டலத்தில் இருந்து கொஞ்சம் தண்ணீரை ணீ எடுத்து, அவள் மீது தெளித்தார். அவள் உடனே மயங்கி விழுந்தாள். பிறகு எழுந்தபோது, அவள் தெளிந்திருந்தாள். இதைக் கண்டு சிலிர்த்த மன்னனும் மகாராணியும் ராமானுஜரை விழுந்து நமஸ்கரித்தனர். அவருக்குச் சீடர்களானார்கள். பிட்டிதேவன் எனும் மன்னனின் பெயரை, விஷ்ணுவர்தன் என மாற்றியருளினார் ராமானுஜர். மன்னனைத் தொடர்ந்து, எண்ணற்ற மக்களும் வைணவத்துக்கு மாறினர். இதையடுத்து அங்கிருந்தபடியே விசிஷ்டாத்வைத தத்துவத்தைப் பரப்பும் முயற்சியில் ஈடுபட்டார். ராமானுஜர். பிறகு அவரது உத்தரவுப்படி, வைணவக் கோயில்கள் பலவற்றை உருவாக்கினான் விஷ்ணுவர்தன். பேளூர் தலைக்காட் கீர்த்தி நாராயணர் கோயில், கொடகு வீரவீ நாராயணர் கோயில், மேலுகோட் செலுவ நாராயணர் கோயில் எனப் பல கோயில்களை கலைநயத்துடன் உருவாக்கினான். இந்த நிலையில், ராமானுஜர் ஏதோ வசியம் செய்து, மன்னரின் மகளைப் பேயிலிருந்து மீட்டுள்ளார் எனப் பழி சுமத்தினர் சமண ஆச்சார்யர்கள். எங்களுடன் வாதாடி வெல்லத் தயாரா ? என்று உடையவரை அழைத்தனர். உடையவரும் சவாலை ஏற்றார். அதன்படி 12,000 சமணர்கள் சூழ்ந்திருக்க, அவர்களுக்கும் தனக்கும் இடையே திரைச்சீலையைக் கட்டும்படி பணித்தார். திரையும் கட்டப்பட்டது. திரைக்குப் பின்னால், ஆயிரம் தலைகள் கொண்ட ஆதிசேஷனாக உருவெடுத்த உடையவர். வாதத்தில் 12000 சமணர்களையும் வென்றார்.
நம்பிக்கைகள்
பில்லி, சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள ராமானுஜரை வணங்கிச் செல்கின்றனர்.
சிறப்பு அம்சங்கள்
ராமானுஜர் எழுப்பிய தொண்டனூர் நம்பி நாராயாணர் கோயிலில், சுமார் 18 அடி உயரத்தில், வலது கரத்தில் சங்கு இடது கரத்தில் சக்கரம் என மாறி, ஏந்தியுள்ளார் மூலவர். நரசிம்மர் கோயிலில், ஆதிசேஷன் உருவெடுத்த ராமானுஜரின் திருவிக்கிரகம் காட்சி தருகிறது. இந்தக் கோயிலுக்கு அருகில் அழகிய ஏரியையும் அமைத்தார், உடையவர். இன்றுவரை வற்றாத ஏரியாகத் திகழ்வதாகப் போற்றுகின்றனர், பக்தர்கள். இந்தியத் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிற்ப நுட்பங்கள் கொண்ட ஆலயத்தை, பார்த்துக்கொண்டே இருக்கலாம். கொள்ளை அழகு!
திருவிழாக்கள்
சித்திரை மற்றும் வைகாசியில் இங்கே திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது.
காலம்
11 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்தியத் தொல்லியல் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தொண்டனூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மைசூர்
அருகிலுள்ள விமான நிலையம்
மைசூர்