Friday Jan 10, 2025

தில்லையாடி காசிவிஸ்வநாதர் கோயில், மயிலாடுதுறை

முகவரி

தில்லையாடி காசிவிஸ்வநாதர் கோயில் தில்லையாடி, தரங்கம்பாடி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609310.

இறைவன்

இறைவன்: காசி விஸ்வநாதர் இறைவி: விசாலாட்சி

அறிமுகம்

திருக்கடையூருக்கு தெற்கில், திருவிடைக்கழி செல்லும் பாதையில் நான்கு கிமி தூரத்தில் மகிமாலையாற்றை கடந்தவுடன் தில்லையாடி அமைந்துள்ளது. ஊரின் மையப்பகுதியில் உயர்ந்த கோபுரத்துடன் பெரியகோயில் எனும் பெயர் கொண்டு சிவன்கோயில் அமைந்துள்ளது. இதே தில்லையாடியில் எண்ணூறு ஆண்டு பழமையான ஒரு சிவாலயம் அமைந்துள்ளது. பெரியகோயிலின் சுற்றுவீதியில் ஈசான்ய திக்கில் ஒரு விநாயகர் கோயில் உள்ளது, அந்த விநாயகர் கோயிலை ஒட்டியவாறு வடக்குநோக்கிய சிறிய ஒற்றையடி பாதை மகிமாலை ஆற்றின் கரை நோக்கி செல்கிறது, ஆற்றின் தென் கரையில் கிழக்கு நோக்கிய ஒரு சிவாலயம் பெரும் சிதைவுக்குள்ளாகி முள்காட்டின் நடுவில் பெரும் புதர்களின் மத்தியில் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆம் உழவார பணிமக்களின் பெருமுயற்சியில் பெரும்பகுதி சுத்தப்படுத்தப்பட்டு சென்றுவர ஒரு பாதை ஏற்ப்படுத்திவிட்டனர் என்பது பெருமகிழ்ச்சிக்குரியது. சேராத துறை தனில் சேர்ந்து விட்டதால் அம்புப்படுக்கையில் வீழ்ந்து நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் பீஷ்மரைப்போல் இப்பெருங்கோயில் சிதைந்து கிடக்கிறது. தனி நபருக்கு சொந்தமானது எனவும் சொல்லப்படுகிறது.

புராண முக்கியத்துவம்

தில்லையாடி, தேவனூர், பொறையார், கொட்டுபாளையம், ஒழுகைமங்கலம், ஆகிய 5 ஊர்களிலும் ஒரே மாதியான விசாலாட்சி அம்மன் உடனாகிய காசிவிஸ்வநாதர் கோயில் கட்டப்பட்டது. இதில் பொறையார் மற்றும் தேவனூர், கொட்டுபாளையம் ஆகிய இடங்களில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயில்கள் நல்ல நிலையில் உள்ளன. ஆனால் தில்லையாடியில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயில் முழுமையாக உருதெரியாமல் சிதிலமடைந்து கோயிலை சுற்றி காடு மண்டி கிடக்கிறது. அதனால் பக்தர்கள் சென்று வழிபட முடியாத நிலை உள்ளது. இன்று ஒருவழி பாதையாவது உள்ளதென்றால் அந்த புண்ணியம் உழவார பணிமக்களுக்கே. இக்கோயிலை வெளிக்கொணர தில்லையாடி சரவணன் என்பவர் பல சிரமங்கள் அவமானங்கள் பட்டுள்ளதாக பணி மக்கள் கூறினார். நாம் சென்றிருந்த காலை வேளையில் அவருக்கு தெரிந்த ஆத்மார்த்த பூஜை செய்துகொண்டிருந்தார். முகப்பு மண்டபம் இடிந்த நிலையிலும் தன் அழகை வெளிக்காட்டிக்கொண்டிருந்தது. இன்றே சுண்ண சுதைகள் அழகாக இருக்கிறதென்றால் அன்றைய நிலையில் எவ்வளவு அழகுடன் இருந்திருக்கும் என மனக்குதிரை சில நூறு ஆண்டுகளுக்கு பின்னால் சென்றது. சுற்று சுவர்கள் இடிந்தும் சாய்ந்தும் கிடக்கிறது, மடைப்பள்ளி சரிந்து கிடக்கிறது. இறைவன் கருவறை முகப்பு மண்டபம் இடிந்து பின்னர் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. இறைவனின் கருவறை மட்டும் கிழக்கு நோக்கி உள்ளது அம்பிகையின் கருவறை இருந்த இடமே தெரியவில்லை. ஆனால் இந்து அறநிலையதுறை ஒரு தகர தட்டியை வைத்ததுடன் தங்கத்தை உருக்க சென்றுவிட்டது. விநாயகர் முருகன் கோஷ்ட்ட தெய்வங்கள், சண்டேசர் விசாலாட்சி, நந்தி என அனைவரும் இறைவனின் முன்னுள்ள இடைநாழி பகுதியில் ஆளுக்கொரு திக்கை பார்த்த வண்ணம் உள்ளனர், பிரதோஷம் சிவராத்திரி நேரங்களில் மட்டும் அருகாமை அன்பர்கள் வந்து செல்கின்றனர். தினசரி பூஜைகளை மட்டும் சரவணன் வந்திருந்து கிடைத்த பொருட்களைக்கொண்டு பூஜை செய்துவிட்டு பணிக்கு சென்றுவிடுகிறார். பின்னர் மாலையில் விளக்கேற்றல் மட்டும் செய்துவிட்டு செல்கிறார். யாரேனும் கொடுக்கும் பொருட்களை கூட சிலர் களவாடி சென்றுவிடுவதாக கூறினார். # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

தில்லையாடி

அருகிலுள்ள இரயில் நிலையம்

மயிலாடுதுறை

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top