திருவிழந்தூர் தான்தோன்றீஸ்வரர் சிவன்கோயில், மயிலாடுதுறை

முகவரி :
திருவிழந்தூர் தான்தோன்றீஸ்வரர் சிவன் கோயில்,
திருவிழந்தூர், மயிலாடுதுறை வட்டம்,
மயிலாடுதுறை மாவட்டம் – 609001.
இறைவன்:
தான்தோன்றீஸ்வரர்
இறைவி:
ஒப்பிலாநாயகி
அறிமுகம்:
மயிலாடுதுறை – நீடூர் சாலையில் 2 கிமீ தூரத்தில் உள்ளது திருஇந்தளூர் இதுவே தற்போது திரிந்து திருவிழந்தூர் ஆனது. மயிலாடுதுறை சப்தஸ்தான தலங்களில் ஒன்று இந்த திருவிழந்தூர் தான்தோன்றீஸ்வரர் கோவில். கோயில் கிழக்கு நோக்கிய கோயில், மூன்று நிலை ராஜகோபுரம் கொண்டுள்ளது. கோபுரத்தின் முன்னரே நந்தி மண்டபம் உள்ளது. அருகில் ஒரு கொடிமர விநாயகரும் உள்ளார். ஆனால் கொடிமரம் இல்லை. இது ஒரு மாடக்கோயில் ஆகும், தரை மட்டத்தில் இருந்து எட்டு அடி உயரத்தில் உள்ளது இறைவன் கருவறை. இறைவன் கருவறை முன்னர் ஒரு கூம்பு வடிவ மண்டபம் உள்ளது. அதில் தரை மட்டத்தில் தெற்கு நோக்கிய இறைவியின் கருவறை உள்ளது.
இறைவன்-தான்தோன்றீஸ்வரர், இறைவி-ஒப்பிலாநாயகி இறைவன் கிழக்கு நோக்கியும் இறைவி தெற்கு நோக்கியும் உள்ளனர். தரைதளத்தில் பிரகார வலம் வரும்போது முதலில் காசி விஸ்வநாதர் சிற்றாலயம் உள்ளது,. மேற்கு திருமாளிகை பத்தியில் தென்மேற்கில் விநாயகர் சன்னதியும் அடுத்த பகுதியில் வாகனங்கள் சில பழுதடைந்து கிடக்கின்றன. அடுத்து முருகன் சன்னதியும் அடுத்த இடத்தில் அஷ்ட நாகங்களில் ஆறு நாகர்கள் உள்ளனர். இரு லிங்கங்களும் இரு லிங்கபாணங்களும் உள்ளன. அம்பிகை சிலை ஒன்றும் தென்முகனின் சிலை ஒன்றும் உள்ளன. ஒரு லிங்கத்தின் முன்னர் ஒரு சிறிய நந்தி உள்ளது. வடமேற்கில் மகாலட்சுமி உள்ளார்.
முதல் தளத்தில் வலமாக சென்றால் முதலில் கருவறை கோட்டத்தில் தென்முகனும் இரு முனிவர்களும் உள்ளனர். பின்புறம் லிங்கோத்பவர் வடக்கில் பிரம்மன், துர்க்கை உள்ளனர். சண்டேசர் தரை தளத்தில் தனி சிற்றாலயத்தில் உள்ளார். வடகிழக்கில் இரண்டு பைரவர்கள், சனி ஆகியோர் உள்ளனர். திருப்பணி காலத்தில் அழகுபடுத்துவதாக நினைத்துக்கொண்டு Tiles எனப்படும் பீங்கான் ஓடுகளை சன்னதிகளிலும், சன்னதி சுவர்களிலும் ஒட்டுவதும், துர்க்கை தக்ஷணமூர்த்தி சன்னதிகளின் மேல் கான்கிரீட் தளமிட்டு முன்னிழுத்தலும் கோயிலின் அழகை கெடுப்பதாக அமைந்துவிடும், மேலும் இவை கோயிலின் தொன்மையை நிர்ணயிக்க இடையூறுகளாக இருக்கவே செய்யும். கோயில் சரியான பராமரிப்பில்லை என்றே சொல்லவேண்டும், காலை மாலை என இரு வேளை குருக்கள் வந்து பூஜை செய்து சிறிது நேரம் கழித்து சென்று விடுகிறார். ஒரு கோயில் அழகும், சிறப்பும், நகரின் அருகில் இருந்தாலும், பிரசித்தி அடையாமல் போவதற்கு காரணம் மக்கள் நித்தம் சென்று வராததால் தான்.

















காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருவிழந்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி