Friday Jun 28, 2024

திருவிடந்தை நித்ய கல்யாணப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

அருள்மிகு நித்ய கல்யாணபெருமாள் திருக்கோயில், திருவிடந்தை- 603112 கோவளம் அருகில், புதுச்சேரி சென்னை கிழக்கு கடற்கரை சாலை. காஞ்சிபுரம் மாவட்டம் போன்: +91 -44- 2747 2235,98405 99310, 98409 36927

இறைவன்

இறைவன்: நித்யகல்யாணப்பெருமாள் இறைவி: கோமளவல்லித்தாயார்

அறிமுகம்

திருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமாள் கோவில் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாகும். இது செங்கல்பட்டு மாவட்டம் சென்னையிலிருந்து புதுச்சேரிவரை செல்லும் கிழக்குகடற்கரை சாலையில் கோவளம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் திருவிடந்தை எனும் கடற்கரை கிராமத்தில் உள்ளது. மூலவர் நித்ய கல்யாணப்பெருமாள், அகிலவல்லித் தாயார் ஆவர். மூலவரின் சன்னதிக்கு வலதுபுறத்தில் கோமளவல்லித்தாயாருக்கு ஒரு சன்னதியும், இடதுபுறத்தில் ஆண்டாளுக்கு ஓரு தனிச்சன்னதியும் உள்ளது. திருவரங்கப்பெருமாளுக்கும் ஓரு தனிச்சன்னதி உள்ளது. தலவரலாற்றின்படி மூலவர் நித்ய கல்யாணப்பெருமாளான மகாவிஷ்ணு தினம் ஒரு பெண்ணாக வருடம் முழுவதும் திருமணம் செய்ததாகவும் அதனாலே மூலவர் நித்ய கல்யாணப்பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார்.

புராண முக்கியத்துவம்

திரேதாயுகத்தில் மேகநாதன் என்ற அரசனின் புதல்வன் பலி நல்லாட்சி புரிந்து வந்தான். அக்காலத்தில் மாலி, மால்யவான், ஸுமாலி ஆகிய அரக்கர்கள் தேவர்களுடன் போர்புரிய பலியின் உதவியை நாடினர். பலி மறுத்து விட்டான். இதனால் அரக்கர்கள் தேவர்களுடன் சண்டையிட்டு தோற்று, பின் பலியிடம் மீண்டும் உதவி கேட்டனர். அரக்கர்களுக்காக தேவர்களுடன் பலி சண்டையிட்டு வென்றான். இதனால் பலிக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் போக்க பெருமாளை குறித்து இத்தலத்தில் தவமிருந்தான். தவத்திற்கு மெச்சிய பெருமாள் வராஹ ரூபத்தில் அவனுக்கு காட்சி கொடுத்து தோஷம் போக்கினார். தினமும் திருமணம்: ஒருமுறை குனி என்ற முனிவரும் அவரது மகளும் சொர்க்கம் செல்ல தவம் இருந்தனர். குனி மட்டும் சொர்க்கம் சென்றார். அங்கு வந்த நாரதர் அந்தப் பெண்ணிடம்,””நீ திருமணமாகதாவள். எனவே உன்னால் சொர்க்கம் செல்ல முடியாது என்று சொல்லி அங்கிருந்த பிற முனிவர்களிடம் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினார். காலவரிஷி என்பவர் அவளை திருமணம் செய்து கொண்டு 360 பெண் குழந்தைகளைப் பெற்றார். தன் பெண்களை ஏற்றுக் கொள்ள வேண்டுமென நாராயணனை வேண்டி தவமிருந்தார். நாராயணன் வரவில்லை. ஒருநாள் ஒரு பிரம்மச்சாரி வந்தான். திவ்ய தேச யாத்திரைக்காக வந்ததாக கூறினான். அவனது தெய்வீக அழகு பெருமாளைப் போலவே இருக்கவே, தனது பெண்களை திருமணம் செய்து கொள்ள அந்த இளைஞனை வேண்டினார். அவன் ஒப்புக்கொண்டு தினம் ஒரு பெண் வீதம் திருமணம் செய்து கொண்டான். கடைசி நாளில் அந்த இளைஞன் தன் சுயரூபம் காட்டினான். அது வேறு யாருமல்ல. வராஹமூர்த்தி வடிவில் வந்த நாராயணன். அவர் 360 கன்னியர்களையும் ஒன்றாகச் சேர்த்து ஒரே பெண்ணாக்கி தனது இடப்பக்கத்தில் வைத்து கொண்டு சேவை சாதித்தார். திருவாகிய லட்சுமியை இடப்புறம் ஏற்றுக்கொண்ட எம்பெருமான் ஆன படியால் இத்லதலம் திருவிடவெந்தை எனப்பட்டது. இது காலப்போக்கில் மருவி திருவிடந்தை ஆனது.

நம்பிக்கைகள்

திருஷ்டி தோஷம், ராகு கேது தோஷம், சுக்ர தோஷம் , திருமணத்தில் தடை உள்ளவர்களுக்குரிய பரிகார தலம்.

சிறப்பு அம்சங்கள்

இத்தலத்தை திருமங்கையாழ்வாரும் மணவாள மாமுனிகளும் மங்களாசாசனம் செய்துள்ளனர். நித்யகல்யாண பெருமாளாக அருள்பாலிக்கும் இத்தல பெருமாளின் தாடையில் ஒரு பொட்டு இருக்கிறது. திருஷ்டிப்பொட்டு போல இயற்கையாக அமைந்துள்ளது சிறப்பு. 360 கன்னியரை ஒரே பெண்ணாகச் செய்தமையால் இங்குள்ள தாயாருக்கு அகிலவல்லி நாச்சியார் என்ற பெயர் சூட்டப்பட்டது. 360 கன்னியரில் முதல் கன்னிக்கு கோமளவல்லி என்று பெயர். இங்கு தனி சன்னதியில் உள்ள தாயாருக்கு கோமளவல்லி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதாவது, நாமெல்லாம் நாயகி, பெருமாள் ஒருவரே நாயகன் என்பது தான் இக்கோயிலின் தத்துவம். இங்குள்ள பெருமாள் தனது ஒரு திருவடியை பூமியிலும், மற்றொன்றை ஆதிசேஷன் மற்றும் அவரது மனைவியின் தலை மீது வைத்துக் கொண்டும், அகிலவல்லி தாயாரை இடது தொடையில் தாங்கி கொண்டும் வராக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

திருவிழாக்கள்

வைகுண்ட ஏகாதசி

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கோவளம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

ஊரப்பாக்கம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top