திருமயம் சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில், புதுக்கோட்டை
முகவரி
அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில், திருமயம்– 622 507 புதுக்கோட்டை மாவட்டம் +91-4322 -221084, 99407 66340
இறைவன்
இறைவன்: ஸத்யகிரிநாதன், சத்யமூர்த்தி இறைவி: உச்சிவனத்தாயார்
அறிமுகம்
திருமயம் என்ற திருமெய்யம், பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 43 ஆம் திருப்பதியாகும். புதுக்கோட்டையிலிருந்து கிட்டத்தட்ட இருபது கி.மீ தொலைவில் திருமெய்யம் திருக்கோயில் அமைந்துள்ளது.இத்திருக்கோயில் முத்தரையர்களால் கட்டபட்ட குடைவரைக்கோவில். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட (பாடப்பட்ட) 108 திவ்ய தேசங்களில் 18 திவ்ய தேசங்கள் பாண்டிய நாட்டில் அமைந்துள்ளன. திருமங்கை ஆழ்வார் தனியாக சென்று மங்களாசாசனம் செய்த கோயில்கள் மொத்தம் 46 ஆகும். அவற்றுள் இந்தத் திருமெய்யமும் ஒன்று. இத்தலத்தில் சத்திய மூர்த்தி, திருமெய்யர் என இரண்டு மூலவர்கள் உள்ளனர். சைவ வைணவ ஒற்றுமைக்கு அருகருகே அமைந்த சத்திய கிரீஸ்வரர் (சிவன்) கோவிலும் ,சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலும் சாட்சி பகர்கின்றன. திருமயத்தின் விஷ்ணு கோயிலுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. இக்கோவில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலை விட மிகவும் பழைமையானது என்றும், இது காரணமாக இதற்கு ‘ஆதி ரங்கம்’ என்றும் பெயர் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. சத்ய மகரிஷி முன் தோன்றி பெருமாள் காட்சி தந்த தலம். தல விருட்சம் – ஆல மரம் தீர்த்தம் – சத்ய புஷ்கரணி
புராண முக்கியத்துவம்
பெருமாள் அரவணையில் படுத்து யோக நித்திரையில் ஆழ்ந்திருந்த சமயம், மது மற்றும் கைடபர் என்ற இரு அரக்கர்கள் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய தேவியரை அபகரிக்க முயன்றனர். இதற்கு அஞ்சிய தேவியர் இருவரும் ஒளிந்து கொள்ளலாயினர். பெருமாளின் திருவடிக்கருகில் பூதேவியும், மார்பில் ஸ்ரீதேவியும் தஞ்சமடைந்தனர். பெருமாளின் நித்திரை கலைந்துவிடுமே என்ற கவலையில் அவரை எழுப்பாமல் ஆதிசேஷன் என்ற ஐந்து தலை நாகம் தன் வாய் மூலம் விஷத் தீயை கக்கினார். பயந்து நடுங்கிய அரக்கர்கள் ஒடி ஒளிந்தனர். கண்விழித்த பெருமாளிடம் தன் செய்கை பெருமாளுக்கு சினத்தை ஏற்படுத்திவிடுமோ என்று பயந்து அஞ்சியவாறு இருந்த ஆதிசேஷனை, பெருமாள் தான் துயில்கையில் அரக்கர்கள் செய்த வனகொடுமையினைத் தடுக்க எடுத்த வீரச்செயல்களை மெச்சிப் புகழ்ந்தார். புராண வரலாறு திருமெய்யம் திருக்கோயிலின் பெருமை பிரம்மாண்ட புராணத்தில் விளக்கப்பட்டுள்ளது. சிவபெருமானே நாரதருக்கு இத்திருத்தலப் பெருமைகளைக் கூறியதாகவும், சத்திய தேவதையும் தர்மதேவதையும் கலியுகத்தில் இங்கு வந்து வழிபடுவர்களுக்கு கவலை இல்லா மனத்தையும் நீண்ட ஆயுளையும் அளிப்பதாகவும் புராண வரலாறு கூறுகிறது. சத்தியகிரி எனும் இம்மலை சாளக்கிராம மலைக்கு ஒப்பானது என்று பிரம்மாண்டப் புராணத்தில் கூறப்படுகிறது.
நம்பிக்கைகள்
குழந்தை பாக்கியம் திருமண பாக்கியம் ஆகியவை நிறைவேறுகிறது. உஜ்ஜீவனத்தாயாரை வழிபட்டால் நிச்சயம் குழந்தை பாக்கியம் மற்றும் சகல சௌபாக்கியங்களும் பெறலாம். மேலும் மனநிலை சரியில்லாதவர்கள், பேய், பிசாசு பிடித்தவர்கள் நரம்பு தளர்ச்சி, நோயில் துன்புறுபவர்கள் பலர் இத்தாயாரை வழிபட்டால் தங்கள் பிரச்சினைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தாயாருக்குத் திருமஞ்சனம், புடவை சாத்துதல், வளையல், பொம்மை ஆகியவற்றை உபயம் செய்து வழிபடுகிறார்கள். பெருமாளுக்கு வெண்ணெய் பூசுதல், சுவாமிக்குத் தூய உலர்ந்த ஆடை சாத்தலாம். ஊதுவத்தி, வெண்ணெய், சிறு விளக்குகள், துளசி தளங்கள், பூக்கள் பூமாலைகள் முதலியன படைக்கலாம். பிரசாதம் செய்து இறைவனுக்குப் பூஜை செய்து பக்தர்களுக்கும் கொடுக்கலாம். இது தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.
சிறப்பு அம்சங்கள்
இத்தலத்திற்கு திருமெய்யம் எனும் பெயர் வரக்காரணமாகிய பெருமாள், திருமெய்யர் எனும் திருநாமத்துடன் மற்றொரு சன்னதியில் பாம்பணை மேல் பள்ளிகொண்டு காட்சி அளிக்கிறார். இத்திருஉருவம் இந்தியாவிலேயே மிகப்பெரியது என்றும் கூறப்படுகிறது. பெருமாளின் பங்கையக் கண்கள் அரைக்கண்ணாக மூடியிருக்க, இதழ்களில் மென்நகையுடன் பாம்பணை மேல் பள்ளி கொண்ட நிலையில் வலக்கரம் ஆதிசேசனை அணைத்துக் கொண்டு காட்சி தருகிறார். சுற்றிலும் தேவர்கள் ரிஷிகள் பெருமாளின் நாபிக் கமலத்திலிருந்து புறப்படும் தாமரை மலரில் பிரம்மாவும் மார்பில் குடியிருக்கும் மகாலட்சுமியும் மாமல்லபுரச் சிற்பங்கள் போல் மலையை குடைந்து பாறைகளில் செதுக்கப்பட்ட இச்சிற்பங்கள் தெய்வீக உணர்வையும் கலையுணர்வையும் ஒருங்கே ஏற்படுத்துகின்றன. 7ம் நூற்றாண்டு குடவரைக்கோயில். சத்ய மகரிஷிக்கு பெருமாள் காட்சி தந்த தலம்
திருவிழாக்கள்
வைகாசி பௌர்ணமி தேர் – 10 நாட்கள். ஆடிப்பூரத் திருவிழா – 10 நாள். கிருஷ்ணஜெயந்தி, வைகுண்ட ஏகாதேசி ஆகிய நாட்களில் கோயிலில் பக்தர்களின் வருகை லட்சக்கணக்கில் இருப்பது சிறப்பு. தமிழ், ஆங்கில வருடப்பிறப்பு, தீபாவளி, பொங்கல் ஆகிய விசேச நாட்களில் பெருமாளுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெறும்.
காலம்
1000 -2000ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருமயம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
புதுக்கோட்டை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி