Sunday Jun 30, 2024

திருப்புள்ளம்பூதங்குடி வல்வில்ராமன் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி

அருள்மிகு வல்வில்ராமன் திருக்கோயில், திருப்புள்ள பூதங்குடி- 612301, தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91- 94435 25365

இறைவன்

இறைவன்: வல்வில் ராமன், சக்கரவர்த்தி திருமகன், இறைவி: பொற்றாமரையாள், ஹேமாம்புஜவல்லி

அறிமுகம்

சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாக இருக்கிறது திருபுள்ளம்பூதங்குடி அருள்மிகு வல்வில் ராமன் திருக்கோயில். இக்கோயிலின் பிரதான இறைவனாக ஸ்ரீ ராமர் வல்வில் ராமன், சக்கரவத்தி திருமகன் ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறார். தாயார் பொற்றாமரையாள், ஹேமாம்புஜவல்லி ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறார். இக்கோயிலின் தல விருட்சமாக புன்னை மரம் இருக்கிறது. கோயிலின் தீர்த்தம் ஜடாயு தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவ கோயில்களில் ஒன்றாக இது இருக்கிறது.

புராண முக்கியத்துவம்

சீதையை ராவணன் கவர்ந்து சென்றபோது கழுகுகளின் அரசனான ஜடாயு அவனிடம் போரிட்டார். அப்போது ஜடாயுவை ராவணன் வாளால் வெட்டினான். ஜடாயு ராமா, ராமா என முனகியபடி குற்றுயிராக கிடந்தார். அந்த வழியே வந்த ராம, லட்சுமணர்கள் முனகல் சத்தத்தை கேட்டு அருகில் சென்று பார்த்தனர். ஜடாயு, ராவணன் சீதையை கவர்ந்து சென்ற விஷயத்தை கூறிவிட்டு உயிர் துறந்தார். இதைக்கண்டு வருந்திய ராமன் ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்ய எண்ணினார். ஈமக்கிரியை செய்யும் போது மனைவியும் அருகில் இருக்க வேண்டும் என்பது விதி. சீதை இல்லை என்பதால் மானசீகமாக சீதையை மனதால் நினைத்தார். உடனே ராமனுக்கு உதவிபுரிவதற்காக சீதையின் மறு அம்சமாகிய பூமாதேவி காட்சியளித்தாள். அவளோடு இணைந்து ஜடாயுவிற்கு செய்ய வேண்டிய ஈமக்கிரியைகளை செய்து முடித்தார். இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் இத்தலத்தில் கோயில் அமைக்கப்பட்டது.

நம்பிக்கைகள்

புதனுக்குரிய பரிகார தலமான இங்கு, பித்ருக்களுக்கு பரிகாரம் செய்வது உகந்தது. மேலும் திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வழிபாடு நடத்துகின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

ஜடாயுவாகிய புள்ளிற்கு ராமன் மோட்சம் கொடுத்து ஈமக்கிரியை செய்த நிகழ்வை குறிக்கும் தலமாதலால் இத்தலம் திருப்புள்ள பூதங்குடி ஆனது. வைணவ சம்பிராத யத்தில் வைணவர்களுக்கு இரண்டு பூதபுரிகள் உண்டு. ஒன்று காஞ்சிபுரம் அருகே ஸ்ரீபெரும்புதூர். ராமனுஜர் அவதரித்த இத்தலத்ததை ஆழ்வார்கள் சிறப்பித்தார்கள். மற்றொன்று தஞ்சாவூர் அருகே திருப்புள்ளபூதங்குடி. இதை ஆச்சாரியார்கள் சிறப்பித் தார்கள். ராமன் இத்தலத்தில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சியளிப்பது விசேஷத்திலும் விசேஷம். திருமங்கையாழ்வார் இங்கு வந்த போது, இக்கோயிலில் வேறு ஏதோ தெய்வம் இருப்பதாக கருதி, கவனிக்காமல் சென்றார். அப்போது பெரிய ஒளி தோன்றி அதிலிருந்து சங்கு சக்ரதாரியாக ராமன் காட்சியளித்தார். இதைக்கண்ட திருமங்கை, அறிய வேண்டியதை, அறியாமல் சென்றேனே என 10 பாசுரம் பாடினார். தந்தை தசரதருக்கு செய்ய வேண்டிய இறுதி காரியத்தை செய்ய முடியாவிட்டாலும், ஜடாயு விற்கு செய்ததை நினைத்து மகிழ்ந்ததால் இத்தல ராமன் வல்வில் ராமன் என அழைக்கப்படுகிறார்.

திருவிழாக்கள்

மார்கழியில் (டிசம்பர்-ஜனவரி) வைகுண்ட ஏகாதசி குறிப்பிடத்தக்கது.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருப்புள்ளம்பூதங்குடி

அருகிலுள்ள இரயில் நிலையம்

தஞ்சாவூர்

அருகிலுள்ள விமான நிலையம்

தஞ்சாவூர்

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top