திருச்சுழி திருமேனிநாதர் திருக்கோயில், விருதுநகர்
முகவரி
அருள்மிகு திருமேனிநாதர் திருக்கோவில் திருச்சுழி அஞ்சல் திருச்சுழி வட்டம், விருதுநகர் மாவட்டம் PIN – 626129
இறைவன்
இறைவன்: திருமேனிநாதர், இறைவி:துணைமாலையம்மன்
அறிமுகம்
திருச்சுழி திருமேனிநாதர் கோயில் திருச்சுழியல்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் இந்தியாவின் தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் அமைந்துள்ளது. இத்தலத்தில் சிவன் ஒரு சமயம் பிரளயத்தைச் சுழித்து பூமிக்குள் புகச் செய்தார் என்பது தொன்நம்பிக்கை. மேலும் இது ரமண மகரிஷி பிறந்த தலமும் ஆகும். தல விருட்சம்:அரசு, புன்னை தீர்த்தம்:பாகவரிநதி (குண்டாறு), கவ்வைக்கடல் (சந்நிதிக்கு எதிரில் உள்ளது.) புராண பெயர்:திருச்சுழியல்
புராண முக்கியத்துவம்
சிவபெருமான் இத்தலத்தில் பிரளய வெள்ளத்தை ஓர் அம்பினால் சுழித்துப் பாதாளத்தில் செலுத்தியதால் இவ்வூர் திருச்சுழியல் என்று அழைக்கப்பட்டது. ஒவ்வொரு யுகத்திலும் இவ்வூரில் பெருவெள்ளம் ஏற்பட்டு பேரழிவு உண்டாவதுண்டு. துவாபர யுகத்தில் பேரழிவு ஏற்பட்ட போது இப்பகுதியை ஆண்டுவந்த மன்னன் இந்த இயற்கை அழிவிலிருந்து இவ்வூரைக் காப்பாற்ற வேண்டிச் சிவபெருமானை வேண்டினான். அவனது வேண்டுதலை ஏற்றுக் கொண்ட சிவனும் தனது சூலத்தால் தரையில் குத்தி நிலத்தில் ஒரு பெரிய ஓட்டையிட்டு; வெள்ளத்தைப் பூமியில் புகுமாறு செய்தார். சிவபெருமானின் சூலத்தைச் சுற்றி வெள்ளம் சுழித்துச் சென்றதால் “சுழி” என்று பெயர் பெற்றுப் பின்னர் “திரு” எனும் அடைமொழி சேர்ந்து “திருச்சுழியல்”‘ ஆயிற்று என் தலபுராணம் விவரிக்கிறது.
நம்பிக்கைகள்
திருமணத்தில் தடை உள்ளவர்கள் திருமணக்கோலத்தில் உள்ள இறைவனை வணங்கி பலனடைகின்றனர். நேர்த்திக்கடன் தங்களது கோரிக்கை நிறைவேறியவுடன் சிவனுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம், ஆராதனை செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
சிறப்பு அம்சங்கள்
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ரமண மகரிஷி பிறந்த தலம்சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 202 வது தேவாரத்தலம் ஆகும்.திருச்சுழியல் பெரிய ஊர். தேரோடும் நான்கு வீதிகள் சூழத் திருக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பிள்ளையாரை வழிபட்டு ஆலயத் திருவாயிலுள் நுழைந்தால் எதிரே அம்பாள் சன்னதி. வலதுபுறம் சுவாமி சன்னதிக்கு எதிரே கவ்வைக்கடல் தீர்த்தம் உள்ளது. அருகே ஆஸ்தான மண்டபம் உள்ளது. முதலாவதாகக் காணப்படும் கம்பத்தடி மண்டபத்தில் கொடிமரம் நந்தி பலிபீடங்கள் உள்ளன. திருவாயிலின் இருமருங்கிலும் விநாயகர், முருகன் உள்ளனர்.சுவாமி சன்னதியிலுள்ள ராஜகோபுரம் ஏழுநிலைகளுடன் கூடியது. வாயிலில் உள்ள அதிகாரநந்தி தேவரை வணங்கி உள்ளே சென்றால் அறுகாற்பீடம் காணப்படுகிறது. இங்கு இத்தலத்திருப்பதிகக் கல்வெட்டு உள்ளது. அடுத்து சபாமண்டபம், அந்தாரளமண்டபம், அர்த்த மண்டபங்கள் உள்ளன. மூலலிங்கப் பெருமானாகிய திருமேனிநாதர் சுயம்புலிங்கமாகக் கருவறையில் காட்சி தருகிறார்.
திருவிழாக்கள்
நவராத்திரி, ஆவணி மூலம், சித்திரை விஷு, கார்த்திகை சோமவாரம், ஆடித்தபசு, தைப்பூசம், பங்குனி பிரமோற்ஸவ திருவிழாவில் திருக்கல்யாணம், தேரோட்டம்.
காலம்
1000-2000 வருடங்களுக்கு முன்
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருச்சுழி
அருகிலுள்ள இரயில் நிலையம்
விருதுநகர்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை