திருக்கோடிக்காவல் வள்ளி மாகாளி (தட்சிண காளி) திருக்கோயில், தஞ்சாவூர்
முகவரி :
அருள்மிகு வள்ளி மாகாளி திருக்கோயில்,
அருள்மிகு திருக்கோடீஸ்வர சுவாமி திருக்கோயில்,
திருக்கோடிக்காவல், கும்பகோணம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 609802.
இறைவி:
வள்ளி மாகாளி(தட்சிண காளி)
அறிமுகம்:
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே திருக்கோடிக்காவல் என்னும் இடத்தில் – திருக்கோடீஸ்வர சுவாமி ஆலயத்தில், தட்சிண காளி அருள்பாலிக்கிறாள். யம பயம் போக்கும் தலம் இது. கங்கைக்குச் சமமான காவிரி நதியாள் ‘உத்திர வாஹினி’ யாக இங்கே பாய்கிறாள். லலிதா சகஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் செய்யப்பெற்றதும், சனீஸ்வரர் பாலரூபியாக அருள்வதும், மூவாயிரம் கோடி மந்திர தேவதைகள் நிலைத்தப் பதவி அடைந்ததும் இங்குதான் என்கின்றன புராணங்கள். மட்டுமன்றி, திருக்கோடிக்காவல் அகத்தியரும் துர்வாசரும் வழிபட்டுப் போற்றிய தலம்.
புராண முக்கியத்துவம் :
அஷ்டகாளியாக எட்டு இடங்களில் குடிகொண்டாள். அவற்றில் ‘தட்சிண காளி’ முதன்மையானவள் என்கின்றன ஆன்மிக நூல்கள். அற்புதமான இந்தத் தலத்தில் கோடீஸ்வரர் ஆலயத்தின் வெளிச்சுற்றில் வடக்கு நோக்கி அருள்கிறாள் ‘வள்ளி மாகாளி’ என்ற திருநாமம் கொண்ட தட்சிண காளி. `வள்ளி’ என்றால் போர்க்களத்தில் புறமுதுகுக் காட்டாது போரிடும் திறம் மிகுந்த வீரன் அணிந்திருக்கும் வீரக் கழல். இது அரசனால் அந்த வீரனுக்கு அளிக்கப்படும் உயரிய விருது என்கிறார்கள். அப்படியான வள்ளி எனும் பொன் வீரக்கழலை அணிந்த கோலத்தில் அருள்வதால், இந்தக் காளிதேவிக்கு ‘வள்ளி மாகாளி’ என்று திருப்பெயராம்! ‘ஜ்வாலாகேச அஷ்டபுஜ உத்குடிகாசன சம்ஹார காளியாக’ இந்த அன்னை விளங்கினாலும், பக்தர்களுக்கு ஒரு தாயைப் போன்று கருணையுடன் அருள்கிறாள் என்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள்.
வாள், மணி, கேடயம், சூலம் போன்ற ஆயுதங்களைத் திருக்கரங்களில் தாங்கியபடி, மிகச் சாந்தமான திருமுகத்துடன் மங்கல ரூபிணியாக இவள் விளங்குகிறாள். அன்னையின் அசுரனின் உடல் வீழ்ந்து கிடக்கிறது. அசுர உருவம் ஆணவத்தின் உருவகமாம். அன்னை ஆணவம் எனும் தீமையை அழித்து ஞானம் அளிப்பவள். அங்ஙனம் அவள் அசுர சக்தியை அழித்தது ஒரு தடாகத்தின் கரையில். அது இன்றளவும் ‘பூதக்குளம்’ என்று வழங்கப்படுகிறது.
‘தட்சிணா’ என்றால் பல பொருள் உண்டு. தட்சிணம் என்றால் தெற்கு. தென் திசை வந்த முதல் காளி என்பதால் தட்சிணகாளி என்று பெயர். தென் திசைக்கு உரிய யமனை அந்த திசையைவிட்டே ஓடும்படிச் செய்பவள் அதனால் இந்தப் பெயர். ‘தட்சிணா’ என்றால் வல்லவள் என்றும் பொருள் உண்டு. வரமளிப்பதில் இவளே வல்லவள் என்பதால் இப்பெயர் உண்டாயிற்று.
இப்படி, அன்னையின் திருப்பெயருக்குப் பல காரண மகிமைகளைச் சொல்கிறார்கள். மட்டுமன்றி, நல்லவர்களுக்கு அவரவர் தர்மத்துக்கு தக்கவாறு, உரிய பலாபலன்களை தட்சணை போன்று வழங்குபவள் இந்த காளி. ஆதலால் இவள் ‘தட்சணாகாளி’ என்றும் கூறுகிறார்கள். மொத்தத்தில், காலத்தால் மிக மூத்தவளான இந்தக் காளியின் வடிவமும் ஆற்றலும் மகத்து வமானவை என்கிறார்கள் ஊர் மக்கள்.
நம்பிக்கைகள்:
செவ்வாய், வெள்ளி ஆகிய நாள்களில் இங்கு வந்து மாகாளிக்கு உகந்த சிவப்பு வண்ண பட்டு சாத்தி, எலுமிச்சை மாலை சூட்டி, சர்க்கரைப் பொங்கல் படைத்து, அரளிப் பூக்களால் அர்ச்சித்து வழிபட்டால், வேண்டிய வரங்கள் கிடைக்கும்; வேதனைகள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை. இந்தத் தலத்துக்குச் சென்று ஞானம், ஆற்றல், சக்தி, வீரம், ஆளுமை, தாய்மை, அன்பு என அனைத்தும் கொண்ட காளியை வணங்க நாம் வாழ்வு மேம்படும்.
சிறப்பு அம்சங்கள்:
யமதருமன் செயலற்று ஈஸ்வர பிரக்ஞையிலேயே ஒடுங்கியிருந்த க்ஷேத்திரம் இது. ஆகவே, இங்கு வந்து வழிபட்டால், மரண பயம் நீங்கும் என்கிறார்கள் ஆன்மிக ஆன்றோர்கள். இங்கு சிவபெருமானுக்கு விசேஷித்த அனுக்கிரக சக்தி உண்டு. ஆகவே நவகிரகங்கள் மற்றும் அஷ்டதிக் பாலகர்களால் உருவான தோஷங்களும் இங்கு வந்து வழிபட்டால் நீங்கும் என்பது ஐதீகம்.
மேலும் இத்தலத்து மூலவரைச் சுற்றி நின்று அருள்பாலிக்கும் அம்சத்தில் ஐயனார், முனியப்பர், மதுரைவீரன் போன்ற தெய்வங்களும் ஊருக்குள் சந்நிதி கொண்டுள்ளார்கள். அதேபோல், ஊரின் நாற்புறச் சந்திகளிலும் விநாயகர் ஆலயங்கள் அமைந்திருப்பது மற்று மொரு சிறப்பு.
திருக்கோடிக்காவல் இறைவன் கோடீஸ்வரருக்கு இடது பாகத்தில் எழுந்தருளியிருக்கும் திரிபுரசுந்தரி அம்மையும், இந்த தட்சிண காளியும் ஒருவரையொருவர் நோக்கும் படி அமைந்திருப்பது விசேஷ அம்சம். ஆகவே, அறக்கருணையும் மறக்கருணையும் ஒருசேர துலங்கும் புண்ணிய ஆலயம் இது.
காலம்
1500 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருக்கோடிகாவல்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி