Tuesday Jan 28, 2025

திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி

அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், திருக்காட்டுப்பள்ளி அஞ்சல் – 613 104 தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91 94423 47433

இறைவன்

இறைவன்: அக்னீஸ்வரர் இறைவி: சௌந்தரநாயகி

அறிமுகம்

திருக்காட்டுப்பள்ளி தீயாடியப்பர் (அக்னீஸ்வரர்) கோயில் திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் அக்கினீசுவரர். இவர் தீயாடியப்பர் என்றும் அறியப்படுகிறார். அம்பாள் சௌந்தரநாயகி என்றும் அழகமர்மங்கை என்றும் அழைக்கப்படுகிறார். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள ஒன்பதாவது சிவத்தலமாகும்.இச்சிவாலயம் இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி எனும் ஊரில் அமைந்துள்ளது. இந்த ஊரானது புராணக் காலத்தில் மேலைத்திருக்காட்டுப்பள்ளி என்று அழைக்கப்பட்டுள்ளது.

புராண முக்கியத்துவம்

புராண காலத்தில் தேவர்களும், அவர்கள் தலைவனான இந்திரனும் இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்கினர். அப்போது அக்னிதேவன் தான் தொட்ட பொருட்கள் யாவும் சுட்டெரிக்கப்பட்டு நாசமாகி விடுகிறதென்றும் அதனால் ஏற்படும் பழியிலிருந்து விடுபட வழி சொல்ல வேண்டுமென்றும் இறைவனிடம் முறையிட்டான். இறைவன் சிவன் அக்னிதேவன் முன் தோன்றி இத்தலத்தில் ஒரு குளம் அமைத்து அதற்கு அக்னி தீர்த்தம் என்று பெயரிட்டு அந்த குளத்து நீரைக்கொண்டு தன்னை அபிஷேகம் செய்தால் என்னை வழிபடும் உனக்கு அந்தப் பழி தீரும் என்றும் அதில் நீராடும் பக்தர்களுக்கும் அவர்கள் செய்த பாவங்கள் தீரும் என்றும் வரமளித்தார். இந்த தீர்த்தத்தில் கார்த்திகை ஞாயிறு, மாசிமகம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் முதலிய நாள்களில் நீராடி வழிபடுவோர் எல்லா நலன்களும் பெறுவர். உறையூரிலிருந்து ஆண்டு வந்த மன்னன், உறையூர் நந்தவனத்தில் இறைவனுக்குரியதாக பூத்துவந்த செவ்வந்தி மலர்களைப் பணியாளன் பறித்து வந்து தர, அவற்றைப் பெற்று தன் இரு மனைவியருக்கும் தந்தான். மூத்தமனைவி அம்மலரைச் சிவபெருமானுக்கு அணிவித்து வந்தாள். இளையவள் தான் சூடி மகிழ்ந்தாள். இதனால் இளையவள் இருந்த உறையூர் மண் மாரியால் அழிந்தது. மூத்தவள் இருந்த திருக்காட்டுப்பள்ளி மட்டும் அழியாமல் பிழைத்தது எனக் கூறுவர். மூலவரைச் சுற்றி வரும் பிரகாரத்தில் கோஷ்ட மூர்த்தமாக யோக தெட்சிணாமூர்த்தி விளங்குகின்றார். ஐந்து நிலைகளுடன் கூடிப் பொலிவுடன் ராஜகோபுரம் உள்ளது. செப்புக் கவசமிட்ட கொடிமரம் உள்ளது. வலமாகச் சென்றால் விநாயகர் சன்னதி உள்ளது. உட்சென்றதும் வலப்பால் அம்பாள் சன்னதி உள்ளது – தெற்கு நோக்கியது – நின்ற திருக்கோலம். சன்னதி வாயிலில் துவாரபாலகிகள் உள்ளனர். உள் பிரகாரத்தில் விநாயகர் உள்ளார். இலிங்கோற்பவர், கோஷ்ட மூர்த்தமாக இருக்காமல், விநாயகருக்குப் பக்கத்தில் சன்னதியாகவுள்ளது. இலிங்கோற்பவரிடத்தில் அர்த்தநாரீஸ்வரர் உள்ளார். அடுத்து வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகப்பெருமான் உள்ளார். பக்கத்தில் காசி விசுவநாதர் விசாலாட்சி, கஜலட்சுமி, துர்க்கை சன்னதிகள் உள்ளன. முன் மண்டபத்தில் வலப்பால் பைரவர், நால்வர் திருமேனிகள் உள்ளன. நித்திய வழிபாடுகள் முறையாக நடைபெறுகின்றன. மாசிமகம் பங்குனிப் பெருவிழாவும் இங்குச் சிறப்புடையன.

நம்பிக்கைகள்

திருமணத்தடை நீங்கவும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும், செல்வச்செழிப்புடன் திகழவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

இங்கு மூலவர் அக்னீஸ்வரர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். நவக்கிரக சந்நிதியில், எல்லாக் கிரகங்களும் சூரியனைப் பார்த்தவாறே அமைந்துள்ளன. அக்கினி வழிபட்ட தலமாதலின் கோயிலுக்கு அக்னீஸ்வரம் என்பது பெயர். அக்னி தீர்த்தம் இன்று கிணறு வடிவில் உள்ளது.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 72 வது தேவாரத்தலம் ஆகும். இறைவனைத் திருமால், பிரமன், சூரியன், பகீரதன், உறையூர் அரசி ஆகியோர் வழிபட்ட தலம். அக்கினி வழிபட்ட தலமாதலின் கோயிலுக்கு “அக்னீஸ்வரம்’ என்பது பெயர். அக்னி தீர்த்தம் இன்று கிணறு வடிவில் உள்ளது. திருமால், பிரமன், சூரியன், அக்கினி, பகீரதன், உறையூர்ச் சோழனின் மூத்த மனைவி ஆகியோர் வழிபட்டு அருள்பெற்ற தலம். இக்கோயில் முதலாம் ஆதித்த சோழன் காலத்துத் திருப்பணியைப் பெற்றது. சுந்தர பாண்டியன், கோனேரின்மை கொண்டான் காலத்தில் கல்வெட்டுக்கள் உள்ளன. இவ்விரு கல்வெட்டுக்களில் அம்மன் பெயர் அழகமர்மங்கை எனக் குறிக்கப்படுகிறது. நான்கு கால நித்திய பூஜைகள் நடைபெறுகின்றன. பங்குனி உத்திரத்தில் காவிரியில் தீர்த்தம் கொடுத்தருளுவார். அக்னி தீர்த்தத்தில் கார்த்திகை ஞாயிறு, மாசிமகம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் ஆகியநாட்களில் நீராடி வழிபடுவோர் எல்லா நலன்களும் எய்துவர். 1983 – ல் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. முதல் ஆதித்திய சோழனின் காலத் திருப்பணியைப் பெற்ற கோயில். “பள்ளி’ என்ற சொல்லைக் கொண்டு இவ்வூரில் ஒரு காலத்தில் சமணர்கள் வாழ்ந்திருக்கலாம் என்று கருதுகின்றனர். அதற்கேற்ப 24- ஆவது தீர்த்தங்கரரின் சிலை இத்தலத்தில் கிடைத்துள்ளதாம்.

திருவிழாக்கள்

மாசி மகம், பங்குனிப் பெருவிழா, சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை.

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருச்சி

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருச்சி

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top