தக்சிணேஸ்வர் பவதாரிணி காளி கோயில், மேற்கு வங்காளம்
முகவரி
தக்சிணேஸ்வர் பவதாரிணி காளி கோயில், தக்சிணேஸ்வர், கொல்கத்தா மாவட்டம், மேற்கு வங்காளம் – 700 076.
இறைவன்
இறைவன்: சிவன், கிருஷ்ணன் இறைவி: பவதாரிணி (காளி), ராதா
அறிமுகம்
காளி கோயில், தக்சிணேஸ்வர் இந்தியாவின், மேற்கு வங்க மாநிலத்தின் தலை நகரான கொல்கத்தாவின் தக்சிணேஸ்வர் என்னும் பகுதியில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயில் ஆகும். ஹூக்ளி ஆற்றின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள இக் கோயிலின் முதன்மைக் கடவுள் காளியின் ஒரு அம்சமான பவதாரிணி. தலைமைக் கோயில் ஒன்பது விமானம் போன்ற அமைப்புகளைக் கொண்டு விளங்குகிறது. இக் கோயிலைச் சுற்றி வெளியிடமும், அதனைச் சூழவுள்ள மதிலின் உட்புறத்தில் அறைகளும் அமைந்துள்ளன. ஆற்றங்கரையில் சிவனுக்குப் பன்னிரண்டு சிறு கோவில்கள் அமைந்துள்ளன. கடைசிச் சிவன் கோயிலுக்கு அருகே வட மேற்கு மூலையில் அமைந்துள்ள கூடம் ஒன்றிலேயே இராமகிருஷ்ண பரமஹம்சர் தனது வாழ்வின் குறிப்பிடத்தக்க காலப் பகுதியைக் கழித்தார் என்று சொல்லப்படுகிறது.
புராண முக்கியத்துவம்
1847 ஆம் ஆண்டில், ஜமீந்தாரிணியான ராணி ராஷ்மோணி (ராணி ராசமணி) என்பவர் இந்துக்களின் புனிதத் தலமான காசிக்கு ஒரு நீண்ட யாத்திரை செல்வதற்கு விரும்பினார். இவரும், இவரது உறவினர்களும், வேலையாட்களும், தேவையான பொருட்களுடன் 24 படகுகளில் செல்வதாக இருந்தது. கிளம்புவதற்கு முதல் நாள் இரவில் ராணியின் கனவில் தோன்றிய காளி, காசிக்குப் போக வேண்டிய தேவை இல்லை என்றும், கங்கை ஆற்றங்கரையில் அழகிய கோயிலொன்றைக் கட்டி அங்கே தனது சிலையை வைத்து வணங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதன் பின்னர் உடனடியாகவே ராணி ஒரு நிலத்தை வாங்கி கோயிலைக் கட்டுவதற்குத் தொடங்கினார். 1847 ஆம் ஆண்டுக்கும் 1855 ஆம் ஆண்டுக்கும் இடையில் இப் பெரிய கோயில் தொகுதியின் கட்டிட வேலைகள் நிறைவேறின. இதன் தலைமைக் குருக்கள் அடுத்த ஆண்டில் காலமாகவே அப்பதவி அவரது தம்பியான இராமகிருஷ்ணருக்கு வழங்கப்பட்டது. அப்போதிருந்து 30 ஆண்டுகளுக்குப் பின் 1886 ஆம் ஆண்டில் அவர் இறக்கும்வரை அக் கோயிலின் புகழுக்கும், பெருமளவில் பக்தர்கள் வருவதற்கும் அவர் காரணமாக இருந்தார்.
சிறப்பு அம்சங்கள்
வங்காளக் கட்டிடக்கலையின் நவரத்னா அல்லது ஒன்பது கோபுரப் பாணியில் கட்டப்பட்ட, மூன்று நிலைகள் கொண்ட தெற்கு நோக்கிய கோவிலான இக்கோவில் இரண்டு நிலைகளில் நான்கு கோபுரங்களையும் முடிவில் ஒரு கோபுரத்தையும் கொண்டுள்ளது. மேலும் உயரமான மேடையில் படிக்கட்டுகளுடன் நிற்கிறது, ஒட்டுமொத்தமாக இது 46 அடி (14 மீ ) சதுரம் மற்றும் 100 அடி (30 மீ) உயரத்திற்கு மேல் உயர்கிறது. கருவறையில் காளி தேவி சிலை உள்ளது, பவதாரிணி என்று அழைக்கப்படுகிறது, இது சிவபெருமானின் மார்பில் நிற்கிறது, மேலும் இரண்டு சிலைகளும் வெள்ளியால் ஆன ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை சிம்மாசனத்தில் வைக்கப்பட்டுள்ளன. பிரதான ஆத்-சலா வங்காளக் கட்டிடக்கலையில் கிழக்கு நோக்கி கட்டப்பட்ட பன்னிரண்டு ஒத்த சிவன் கோயில்களின் வரிசை பிரதான கோவிலுக்கு அருகில் உள்ளது, அவை ஹூக்ளி ஆற்றின் இருபுறமும் கட்டப்பட்டுள்ளன. கோவில் வளாகத்தின் வடகிழக்கில் விஷ்ணு கோவில் அல்லது ராதா கந்தா கோவில் உள்ளது. கோவிலுக்குள் வெள்ளி சிம்மாசனம் கொண்ட 21+1⁄2 அங்குல (550 மிமீ) கிருஷ்ணருடன் மற்றும் 16 அங்குல (410 மிமீ) ராதையின் சிலை உள்ளது.
காலம்
19 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தக்சிணேஸ்வர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஹெளவ்ரா நிலையம்
அருகிலுள்ள விமான நிலையம்
கொல்கத்தா