செங்கம் ரிஷபேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை
முகவரி
செங்கம் ரிஷபேஸ்வரர் திருக்கோயில், செங்கம், திருவண்ணாமலை மாவட்டம் – 606701.
இறைவன்
இறைவன்: ரிஷபேஸ்வரர் இறைவி: அனுபாம்பிகை
அறிமுகம்
திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள செங்கம் (கண்ணை என்னும் ஊர் தற்போது செங்கம் என்று அழைக்கப்படுகிறது) என்னும் ஊரில் இக்கோயில் உள்ளது. இவ்வூர், கல்வெட்டில் தென்கண்ணை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் இருந்து மேற்கே சுமார் 30 கி.மீ. தொலைவில் சேயாற்றின் கரையில் செங்கம் ஊர் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள இறைவன் ரிஷபேஸ்வரர் ஆவார். இறைவி அனுபாம்பிகை ஆவார். இக்கோவில் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள தேவார வைப்புத்தலமாகும்.
புராண முக்கியத்துவம்
சுமார் 3 ஏக்கர் நிலப்பரவளவில் இவ்வாலயம் ஒரு கோபுரத்துடனும், பிராகாரத்துடனும் அமைந்துள்ளது. மூலவர் ரிஷபேஸ்வரர் சுயம்பு லிங்கத் திருமேனியுடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். அம்பாள் சந்நிதியும் கிழக்கு நோக்கியே அமைந்துள்ளது. இந்த இரு சந்நிதிக்கும் இடையே முருகர் சந்நிதி உள்ளது. பிராகாரத்தில் விநாயகர், மகாலட்சுமி, வீரபத்திரர், நவக்கிரக சந்நிதி ஆகியவை அமைந்துள்ளன். கோஷ்ட மூர்த்திகளாக தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோர் உள்ளனர். செங்கம் சங்ககாலம் தொட்டே வழங்கி வரும் ஒரு பழமையான ஊராகும், சங்க நூல்கள் மூலம் இவ்வூரைத் தலைநகராகக் கொண்டு நன்னன்சேய் நன்னன் என்ற அரசன் ஆண்டு வந்தான் என்பதை அறியலாம். பல்லவ மன்னர்கள் மகேந்திரவர்மன், நரசிம்மவிஷ்ணு ஆகியோர் இவ்வூரை ஆட்சி செய்து வந்துள்ளதை கல்வேட்டுகள் மூலம் அறியலாம்.
சிறப்பு அம்சங்கள்
இக்கோயிலில் ஆண்டுக்கொரு முறை பங்குனி 3ஆம் தேதி மாலையில் சூரிய ஒளி கோயில் கோபுரத்தில் விழுந்து சிறிது நேரத்தில் நந்தி மீது விழும். அப்போது சில நிமிடங்கள் நந்தி பொன் நிறத்தில் மின்னுவதைக் காணமுடியும்.
திருவிழாக்கள்
இக்கோவிலில் நாள்தோறும் இரு கால பூஜைகள் நடைபெறுகின்றன. சித்திரை மாதத்தில் பிரமோத்சவம், பங்குனி உத்திரம், திருக்கலயாண உற்சவம் ஆகியவை இக்கோவிலில் நடைபெறும் விழாக்களாகும்.
காலம்
1200 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
செங்கம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவண்ணாமலை
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை / புதுச்சேரி