Sunday Jul 07, 2024

சாயாவனம் சாயாவனேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி

அருள்மிகு சாயாவனேஸ்வரர் திருக்கோயில், சாயாவனம்- 609 105, நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91- 4364 – 260 151

இறைவன்

இறைவன்: சாயாவனேஸ்வரர் இறைவி: குயிலினும் இனி மொழியம்மை, கோஷாம்பாள்

அறிமுகம்

திருச்சாய்க்காடு – சாயாவனம் சாயாவனேஸ்வரர் கோயில் அப்பர், சம்பந்தர் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரை சிவத்தலமாகும். இத்தலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பூம்புகார் அருகில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத்தலங்களில் இது 9வது தலம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் இது 9 வது தேவாரத்தலம் ஆகும். இயற்பகை நாயனார் தம் மனைவியை இத்தலத்தின் எல்லை வரை அழைத்துவந்து இறைவனுடன் வழியனுப்பி வைத்தார் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்), அத்துடன் இயற்பகை நாயனாரின் அவதாரத்தலம் இதுவாகும்.

புராண முக்கியத்துவம்

இந்திரனின் தாயான அதிதிக்கு பூமியில் உள்ள சாயாவனேஸ்வரரை வழிபட வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாக இருந்தது. அந்த ஆசையை நிறைவேற்ற அவள் பூமிக்கு வந்தாள். தாயைக் காணாத இந்திரன், அவள் சாய்க்காட்டில் இருப்பதை அறிந்து, இத்தலத்தின் சிறப்பை உணர்ந்து கொண்டான். அவள் தினமும் இத்தலத்தை தரிசிக்கும் வகையில், இந்த கோயிலையே தனது ஐராவத யானையை வைத்து தேர் பூட்டி இந்திரலோகம் இழுத்து செல்ல முயற்சித்தான். கோயிலை இழுத்ததுமே பார்வதி குயில் போல இனிமையாக கூவினாள். (எனவே தான் அம்மனுக்கு “குயிலினும் இனிமொழியம்மை’ என்ற திருநாமம் ஏற்பட்டது.) உடனே சிவன் தோன்றி, “”இந்திரா! இந்த கோயிலை தேவலோகம் கொண்டு சென்று வழிபடவேண்டும் என்று நினைக்காமல், இங்கு வந்து வழிபட்டு நலமடைவாயாக,” என அருள்புரிந்தார். இக்கோயிலுக்கு அண்மையில்தான் பூம்புகார்க்காவல் தெய்வமான சம்பாகி அம்மன் கோயில் உள்ளது. கோயில் குளத்திற்கு தெற்கில் உள்ளது. முகப்பு வாயிலைக் கடந்ததும் கொடி மரம் இல்லை. கொடிமரத்து விநாயகர் மட்டும் உள்ளார். மாடக் கோயிலாதலின் நந்தி உயரத்தில் உள்ளார். வெளிப்பிரகாரத்தில் சூரியன், இந்திரன், இயற்பகைநாயனார் துணைவியாருடன் உள்ள சன்னதிகள் உள்ளன. அடுத்துள்ள நால்வர் சன்னதியில் “மூவர் முதலிகளே’ உளர். விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, உயர்ந்த பீடத்தில் பைரவர், நவக்கிரக சன்னதி முதலிய சன்னதிகளைத் தொழுதவாறே வலம் முடித்து படிகளேறி, வெளவால் நெத்தி மண்டபத்தை அடைந்தால் வலப்பால் பள்ளியறையும் பக்கத்தில் அம்மன் சன்னதியும் உள்ளன.

நம்பிக்கைகள்

எதிரி பயம் இருப்பவர்கள் வில்லேந்திய வேலவரை வழிபட்டு நலம் பெறலாம்.

சிறப்பு அம்சங்கள்

கோச்செங்கண்ணன் என்ற சோழ மன்னன் நிறைய சிவாலயங்கள் கட்டினான். அதில் மாடக்கோயில்கள் தான் அதிகம். மாடக்கோயில் என்றால் “யானையால் புக முடியாத கோயில்’ என்பதாகும். இக் கோயிலும் ஓர் மாடக்கோயிலாகும். 63 நாயன்மார்களில் ஒருவர் இயற்பகை நாயனார். இவர் பிறந்து, முக்தியடைந்தது இத்தலத்தில் தான். இவரது மனைவியும் சிறந்த சிவ பக்தை. இவர்களது சிவபக்தியை உலகிற்கு எடுத்துக்காட்ட சிவன் விரும்பினார். ஒரு முறை இவர்களது இல்லத்திற்கு, சிவனடியார் வேடமிட்டு வந்தார். இயற்பகையாரிடம், “”நீ கேட்டதையெல்லாம் இல்லை என்று கூறாமல் அள்ளி கொடுப்பவன் என்பதை அறிவேன். எனவே உனது மனைவியை என்னுடன் அனுப்பி வை,” என்றார். இயற்பகையாரும் சிறிதும் யோசிக்காமல் தன் மனைவியை சிவனுடன் அனுப்பி வைத்தார். அதற்கு இவரது மனைவியும் சம்மதித்தார். அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் என இயற்பகையார் சிவனடியாரிடம் கேட்க அதற்கு அவர், “”நான் உனது மனைவியை அழைத்து செல்வதால் உனது உறவினர்கள் என் மீது வெறுப்பு கொள்ள நேரிடும். எனவே இந்த ஊர் எல்லையை கடக்கும் வரை எங்களுக்கு நீ பாதுகாப்பு தர வேண்டும்” என்றார். இயற்பகையார் அதற்கும் சம்மதித்து கையில் பெரிய வாளுடன் சிவனடியாரையும் தன் மனைவியையும் முன்னே செல்ல கூறிவிட்டு அவர்களுக்கு பாதுகாப்பாக பின்னே சென்றார். சுற்றத்தார் அவர்களைத் தடுத்தனர். இயற்பகையார் அவர்களை எல்லாம் வென்றார். ஊர் எல்லையை அடைந்தவுடன் சிவனடியார், “”நான் உன் மனைவியுடன் செல்கிறேன், நீ ஊர் திரும்பலாம்” என்கிறார். இயற்பகையாரும் அதன்படி செய்தார். திடீரென அங்கிருந்த சிவனடியார் மறைந்து, வானத்தில் அன்னை உமையவளுடன் தோன்றி,””நீ உனது துணைவியாருடன் இந்த பூவுலகில் பல காலம் சிறப்புடன் வாழ்ந்து, என் திருவடி வந்து சேர்க” எனக்கூறி மறைந்தார். மனிதன் மனஉறுதி மிக்கவனாகவும், தைரியசாலியாகவும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே இந்த நாடகம் இறைவனால் நிகழ்த்தப்பட்டது. வில்லேந்திய வேலவன்: இந்த தலத்தில் முருகப்பெருமான் வில் ஏந்தி போருக்கு புறப்படும் நிலையில் சத்ரு சம்ஹார மூர்த்தியாக காட்சி தருகிறார். கடலில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த முருகன் தன் வலது காலில் சிவனால் கொடுக்கப்பட்ட வீர கண்டரமணியை அணிந்திருக்கிறார். எதிரிகளை அழிக்க முருகனுக்கு சக்தி கொடுத்த வேல் எப்படியோ, அதே போல் சிவன் கொடுத்தது தான் இந்த வீர கண்டரமணி. எதிரி பயம் இருப்பவர்கள் இவரை வழிபட்டு சங்கடங்களைச் சமாளிக்கும் தைரியம் பெறலாம்.

திருவிழாக்கள்

சித்திரைப் பௌர்ணமியில் தொடங்கி இந்திர விழா 21 நாள்களுக்கு நடைபெறுகிறது. ஆடி அமாவாசையில் அன்னமளிப்பு, சித்திரை வைகாசி மாதங்களில் இயற்பகை நாயனார் பெயரில் தண்ணீர்ப் பந்தல், வைகாசியில் குமரகுருபரர் பூஜை, மார்கழியில் இயற்பகை நாயனாருக்கு ஐந்துநாள் விழா அதில் நான்காம் நாளிரவு இறைவன் காட்சி கொடுக்கும் விழாக்களும் நடைபெறுகின்றன.

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருச்சாய்க்காடு

அருகிலுள்ள இரயில் நிலையம்

சீர்காழி

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top