சாயாவனம் சம்பாபதி அம்மன் கோயில்
முகவரி
சாயாவனம் சம்பாபதி அம்மன் கோயில், சாயாவனம், மணிக்கிராமம், சீர்காழி – பூம்புகார் சாலை – 609 107
இறைவன்
இறைவி: சம்பாபதி அம்மன்
அறிமுகம்
பண்டைய பூம்புகார் நகரின் பெரும் பகுதி கடலுக்குள் இருக்கிறது. அவற்றின் ஒரு சில எச்சங்கள் மட்டும் கடலுக்கு வெளியில் இருந்து பூம்புகாரின் பெருமை சொல்லிக் கொண்டிருக்கின்றன.அதில் சம்பாபதி அம்மன் கோயிலும் சதுக்க பூதங்களும் இதில் முக்கியமானவை. சீர்காழி – பூம்புகார் சாலையில் பூம்புகாருக்கு இரண்டு கிமி தொலைவில் முன்னால் உள்ளது சாயாவனம். இங்குள்ள சாய்க்காடுடையார் திருக்கோயிலுக்கு தென்புறம் சம்பாபதி அம்மன் கோயில் உள்ளது. சோழர்களால் புதுப்பிக்கப்பட்ட இக்கோயில் இன்று சிதைந்து போய் கிடக்கிறது. சம்பாபதியம்மன் கோயிலையும் சதுக்க பூதங்களையும் பற்றி பத்தி பத்தியாய் விவரிக்கிறது சிலப்பதிகாரம். அப்படி ஒரு சிறப்பு கொண்ட வரலாற்றுச் சின்னங்கள் தற்போது சிதிலமடைந்து கேட்பாறின்றி கிடக்கிறது என்பது தான் வேதனைக்குரிய செய்தி.
புராண முக்கியத்துவம்
கோயிலுக்கு செல்வதற்கு முன்னர் சம்பாபதி அம்மன் பற்றியும் சதுக்க பூதம் பற்றியும் சொல்கிறேன் கேளுங்கள். சிலப்பதிகாரத்திற்கு அடுத்ததாக பெருமைவாய்ந்த ஒன்று மணிமேகலைகாப்பியம், ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்று அப்படின்னு சொல்வாங்க. இக்காப்பியத்தின் முக்கிய நாயகி மணிமேகலை, கோவலன் மற்றும் மாதவிக்கு பிறந்த மகள். கோவலனின் துயர மரணத்திற்குப் பிறகு கண்ணகி மதுரையை எரித்து பின் கேரள எல்லையில் கோயில் கொள்கிறாள். மாதவி தன் மகளை ஒரு புத்த துறவியாக வளர்த்தாள். ஒரு சமயத்தில் மணிமேகலையும் அவளுடைய தோழியும் பூப்பறிக்கச் சென்றிருந்தபோது, உதயகுமரன் என்ற சோழ மன்னன் மணிமேகலையின் மீது காதல் கொண்டான். கடலின் கடவுளான மணிமேகலா தெய்வம் மணிமேகலையின் துறவு வாழ்க்கையைப் பாதுகாக்க, அவளை மணிபல்லவம் என்ற தீவில் கொண்டு சென்று விட்டுவிடுகிறது. அத்தீவில் இறங்கியவுடன் மணிமேகலைக்கு தனது முன்பிறப்பு நினைவுக்கு வருகிறது. அதன் பிறகு மணிமேகலா தெய்வம் மணிமேகலையிடம் ஏன் அவளை மணிபல்லவத்திற்கு அழைத்து வரப்பட்டாள் என்பதைக் கூறி, மூன்று மந்திரங்களையும் கற்றுக்கொடுகிறது. ஓர் அட்சய பாத்திரத்தையும் கொடுத்தனுப்புகிறது. அதிலிருந்து எடுக்க எடுக்க குறையாத உணவை புகார் நகரிலுள்ள ஏழைஎளியோருக்கு வழங்கி வருகிறாள். ஆனால் மன்னன் உதயகுமரன், மணிமேகலையை தன்னை மணந்து கொள் என அவளை வற்புறுத்துகிறான்.அவளோ பயந்து கொண்டு இந்த குச்சரகுடிக்கையில் ஒளிந்து கொள்கிறாள். மேருமலை உச்சியில் தோன்றிய சம்பு எனும் தெய்வம் முக்காலத்தில் அரக்கர்களால் புகார் நகர் மக்களுக்கு ஏற்பட்ட துயரத்தினைக் கேட்டு அங்கிருந்து தென்திசை நோக்கி வந்து இந்த நகரத்தில் நிலை கொண்டமையால் இவ்வூரிற்கு சம்பாபதி என்ற பெயர். இந்த சம்பாபதி அம்மனை மாதவியின் குலதெய்வம் என்கிறது சிலப்பதிகாரம். துரத்தி வந்த உதயகுமாரனிடம் இருந்து மணிமேகலையை மீட்ட தெய்வம் இது தான் என்கிறது மணிமேகலை காப்பியம். சம்பாபதி அம்மன் கோயிலை அக்காலத்தில் குச்சரக்குடிகை என அழைப்பார்கள். இக்கோயில் காவிரிபூம்பட்டினத்தில் இடுகாட்டுக்கு அருகில் இருந்தது என்றும் மணிமேகலை தகவல் தருகிறது. வாணிபத்துக்காக மரக்கலத்தில் செல்வோரை மணிமேகலா எனும் தெய்வம் கடலில் நின்று காத்தது போல் நிலத்தில் சம்பாபதி அம்மன் நல்லோரைக் காக்கும் தெய்வமாய் நின்றதாக ஒரு செய்தி உண்டு. சிதிலமடைந்து கிடக்கும் சம்பாபதி அம்மன் கோயிலை செங்கலால் ஆன இரண்டு பிரம்மாண்ட பூதங்கள் இன்னமும் காவல் காத்தபடி நிற்கின்றன. இவைதான், ’பொய் பேசினால் கொன்று விடும்’ என இளங்கோவடிகளால் சிலப்பதிகாரத்தில் விவரிக்கப்படுகின்றன இந்த சதுக்க பூதங்கள். யாரையெல்லாம் தண்டிக்கும் என இளங்கோவடிகள் சொல்கிறார் பாருங்கள். பிறன்மனை நோக்குவோர், விலைமாதர், போலிச்சாமியார்கள், சூது செய்து பொருள் சேர்க்கும் அமைச்சர்கள், பொய்சாட்சி சொல்பவர் பொதுப்பணத்தை கையாடல் செய்பவர்கள், – இவர்களை எல்லாம் சதுக்க பூதங்கள் கடுமையாக தண்டிக்கும் என்கிறார் இளங்கோவடிகள். ஆனால், இப்படியொரு பெருமை வாய்ந்த கோயில் இருப்பதே இங்குள்ள மக்களுக்கு தெரியவில்லை சீர்காழியிலிருந்து பூம்புகாருக்கு போகிற சாலையில் இருக்கிறது சாய்க்காடு சிவன் கோயில். இதன் தென் புறம் செல்லும் தெருவில் சென்று இடதுபுறம் உள்ள அடர்ந்த தென்னை மரங்கள், மூங்கில் பனை மரங்களுக்கு நடுவே ஒரு ஒத்தையடிப் பாதை போகிறது. அந்த வழியாகப் போனால் ஓங்கி வளர்ந்த மரங்களடர்ந்த பகுதியில் இருக்கிறது பண்டைய சம்பாபதி அம்மன் கோவில். முறையான பராமரிப்பு செய்யப்படாத காரணத்தால் கோவில் இடிபாடுகளோடு காட்சியளிக்கிறது. ஆதிகாலத்தில் அழைக்கப்பட்ட ‘குச்சரக் குடிகை’ என்ற பெயருக்கேற்ப தற்போது சம்பாபதியை ஒரு தகர கொட்டகையில் புதிதாய் குடிவைத்திருக்கிறார்கள். பழைய கோயில் சிதைந்து மண்மேடாக உள்ளது அந்த குடிகை வாயிலில் இரண்டு பூதங்களும் உள்ளன. வடக்கு நோக்கிய இக்குடிகையின் எதிரில் பெரிய உருவில் இரண்டு சதுக்க பூதங்கள் ஆண்பூதம் ஒன்றும் பெண் பூதம் ஒன்றும் சம்பாதியை காவல் காக்கின்றன. தற்போது அங்குள்ள சம்பாதியை மட்டும் எடுத்து தனி கோயில் கட்டி வைத்துள்ளனர். உடன் விநாயகர் உள்ளார். வாயிலில் பைரவர் உள்ளார். எதிரில் சிம்மமும் பலிபீடமும் உள்ளன. சம்பாபதி கோவிலுக்குச் சொந்தமான பல சொத்துக்கள் இருந்தும், அறநிலையத்துறை அவளை, சாய்க்காட்டின் துணைக் கோவிலாக்கிவிட்டு, அன்றாடம் நடக்கும் பூஜை கூட ஒரு ஏழை பக்தனின் தயவில்தான் நடக்கிறது. பெயர் மருதவாணன். செங்கல் சுதையும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த சதுக்க பூதங்கள் மற்றும் ஒரு பெரிய குதிரை சிலைகள் 2000 ஆண்டு பழமையானவை எனப்படுகிறது. ஆனால், இந்திய, தமிழக தொல்பொருள் துறைகளால் கண்டுகொள்ளாமல் கைவிடப்பட்டன. இது கண்ணகியும், கோவலனும் , மாதவியும் உலவிய மண். வணங்கிய தெய்வம் என்பது தமிழர்களின் நினைவில் இருந்தே அழிந்துவிட்டன. நம் மக்களின் மூளையில் திணிக்கப்பட்ட இரண்டே வார்த்தை திராவிடம் ஆரியம். தமிழ் தமிழ் என பெருமை பேசும் நாம் மூன்றாயிரம் வருடம் பழமை கொண்ட இக்கோயிலை கூட காப்பாற்றாவிட்டால் வரலாறு ஒருபோதும் நம்மை மன்னிக்காது. # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 to 2000
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சாயாவனம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சீர்காழி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி