சந்திரபாடி சோமநாதர் சிவன்கோயில், மயிலாடுதுறை
முகவரி :
சந்திரபாடி சோமநாதர் சிவன்கோயில்,
சந்திரபாடி, தரங்கம்பாடி வட்டம்,
மயிலாடுதுறை மாவட்டம் – 609307.
இறைவன்:
சோமநாதர்
இறைவி:
மீனாட்சி
அறிமுகம்:
சந்திரபாடி ஓர் கடற்கரையோர கிராமம். நாகை- காரைக்கால் மாவட்டங்களின் எல்லைப் பகுதிகள் இணையும் இடமான பூவம் / நண்டலாறு பாலத்தில் இருந்து கிழக்கில் 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்த ஊருக்கு, காரைக்கால் மாவட்ட பகுதியை தாண்டித்தான் செல்ல முடியும். சாலையின் இருபுறமும் பள்ளமான பகுதிகளுடன் மிகவும் குறுகலாக இந்தச் சாலை அமைந்துள்ளது. நண்டலாறு இரண்டாக பிரிந்து இக்கிராமத்தை ஒரு ஆற்றிடை தீவாக ஆக்கியுள்ளது. அதனால் பெருமளவிலான பறவைகள் இங்கு வந்து செல்கின்றன.
சந்திரன் இத்தல ஈசனை வழிபட்டதால் சந்திரபாடி எனவும் அழைக்கப்படுவதாக கூறுவர். இறைவன் பெயரும் சோமநாதர் என உள்ளது. ஊரின் நடுவில் சிவன்கோயில் உள்ளது, அருகில் ஒரு மாரியம்மன் கோயில் ஒன்றும் உள்ளது. கிழக்கு நோக்கிய கருவறையில் இறைவன் சோமநாத சுவாமி உள்ளார், இறைவி மீனாட்சி அம்மன் தெற்கு நோக்கிய கருவறையில் உள்ளார். இறைவனின் எதிரில் நந்தியும் பலிபீடமும் உள்ளன. இறைவன் கருவறை வாயிலில் சிறிய அளவிலான விநாயகர் மற்றும் சுப்ரமணியர் உள்ளனர், மற்றொரு புறம் மகாலட்சுமி உள்ளார். இரு கருவறைகளையும் ஒரு மண்டபம் இணைக்கிறது. கருவறை கோட்டத்து தெய்வங்களாக தென்முகனும், துர்க்கையும் மட்டும் உள்ளனர். சண்டேசர் தனி சன்னதியில் உள்ளார். மீனவ மக்கள் சிறப்பு பூஜை நாட்களில் குழுவாக வந்து செல்கின்றனர். மற்ற நாட்களில் அருகாமை வீட்டில் உள்ள பெண்கள் விளக்கேற்றுகின்றனர்.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சந்திரபாடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
தரங்கம்பாடி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி