Wednesday Dec 18, 2024

சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில், ஈரோடு

முகவரி

அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில், சத்தியமங்கலம், பண்ணாரி – 638 451, ஈரோடு மாவட்டம். போன்: +91-4295-243366, 243442, 243 289

இறைவன்

இறைவி: மாரியம்மன்

அறிமுகம்

பண்ணாரி மாரியம்மன் கோயில் தமிழ் நாட்டில் உள்ள மாரியம்மன் கோவில்களில் சிறப்புவாய்ந்த கோவிலாகும். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் – மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 209 இல் பண்ணாரி எனும் ஊரில் அமைந்துள்ளது. கோவையில் இருந்து 70 கி.மீ., தூரத்தில் உள்ள சத்தியமங்கலம் சென்று, அங்கிருந்து மைசூர் செல்லும் ரோட்டில் 15 கி.மீ., தூரத்தில் பண்ணாரியை அடையலாம். ஈரோட்டில் இருந்தும் இங்கு செல்லலாம்.

புராண முக்கியத்துவம்

சுமார் 300 வருடங்களுக்கு முன்பு இச்சுற்று வட்டார மக்கள் ஆடு மாடுகளை மேய்க்க இந்த வனப்பகுதிக்கு வருவது வழக்கம். ஒருநாள் காராம் பசு ஒன்று தினந்தோறும் பட்டியை (மாடுகள் கூட்டம்) விட்டுவிட்டு தனியே சென்று வருவதை மேய்ப்பன் கவனித்து விட்டான். பிறகு அப்பசுவை பின்தொடர்ந்து சென்று பார்க்கையில் அப்பசு தன்தனத்தூறும் பாலை ஒரு வேங்கை மரத்தின் அடியில் கணம் புற்கள் சூழ்ந்த ஒரு குறிப்பிட்ட இடத்தில் தன்னிச்சையாக பொழிவதை பார்த்தான். இதை ஊர் மக்களிடம் தெரிவிக்க அவர்கள் வந்து அந்த குறிப்பிட்ட இடத்தை சுத்தம் செய்கையில் கணம்புற்கள் சூழ்ந்த ஒரு புற்றும் அதனருகில் சுயம்புலிங்கத் திருவுருவம் வேங்கை மரத்தடியில் இருப்பதைக் கண்டார்கள். அப்போது அங்கிருந்தவருக்கு அருள் வந்து கேரளாவிலிருந்து பொதிமாடுகளை ஓட்டிக்கொண்டு மைசூர் செல்லும் மக்களுக்கு வழித்துணையாக வந்தேன், எழில் மிகுந்த இவ்விடத்தில் தான் தங்கி விட்டதாகவும் தன்னை இனிமேல் பண்ணாரி மாரியம்மன் என போற்றி வழிபடுங்கள் என்று அருள் வாக்கு கூறினார். இதையடுத்து குடில் அமைத்து மக்கள் வழிபட்டனர். காலப்போக்கில் அம்மனின் அருள் பரவத்தொடங்கி இப்போது மிகப் பெரிய புகழ் பெற்ற கோயிலாக திகழ்கிறது.

நம்பிக்கைகள்

கண்பார்வை இல்லாதவர்கள், அம்மை நோய் தீர, குழந்தை வரம், வேலை வாய்ப்பு உள்ளிட்ட முக்கிய வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறுகிறது. இங்கு தரும் வேப்பிலையை வாங்கி சென்று வைத்தால் அம்மை கண்டறிந்தவர்கள் உடனே குணமடைகிறார்கள். இவை தவிர திருமணபாக்கியம், கை, கால் உறுப்புகள் குறைபாடுள்ளவர்கள், விவசாய செழிப்பு வேண்டுவோர் இத்தலத்தில் வேண்டிக்கொண்டால் பிரார்த்தனை கைகூடுகிறது.

சிறப்பு அம்சங்கள்

இங்கு விபூதி கிடையாது. புற்று மண்தான் விபூதி பிரசாதமாக தரப்படுகிறது. தெற்கு நோக்கி இருக்கும் அம்மன் கோயில் இது. அம்மன் சுயம்புவாக முளைத்துள்ளது இத்தலத்தின் சிறப்புகளில் ஒன்று. பக்தர்கள் காடுகளுக்கு போய் மரம் வெட்டி ( இதை கரும்பு வெட்டுதல் என்கிறார்கள்) கொண்டு வந்து மலை போல் குவித்து அவற்றை எரித்து 8 அடி நீளம் பரப்பு கொண்ட அக்னி குண்டமாக்கி விடுவார்கள். முதலில் தலைமை பூசாரி இறங்கி நடந்து செல்வார். பின்பு லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னி குண்டம் இறங்குவார்கள். காலை 4 மணி முதல் மாலை நடைசாற்றும் வரை பக்தர்கள் தொடர்ந்து அக்னி குண்டம் இறங்குவது மிகப்பெரிய பிரம்மாண்டமான மெய்சிலிர்க்கும் காட்சி ஆகும். கடைசியாக ஆடு, மாடு, போன்ற கால்நடைகளையும் பக்தர்கள் குண்டம் இறக்கி நடக்க வைப்பார்கள். இக்கோயிலில் மிக சிறப்பு வாய்ந்த குண்டம் திருவிழா தமிழ்நாட்டில் மிகப்புகழ் பெற்றது.

திருவிழாக்கள்

பங்குனி குண்டம் பெருந்திருவிழா 20 நாள் திருவிழா 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வர். அமாவாசை உள்ளிட்ட விஷேச தினங்களில் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இவை தவிர வாரத்தின் செவ்வாய், வெள்ளி கிழமைகளில் இக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். மேலும் தீபாவளி, பொங்கல், தமிழ் ஆங்கில வருடப்பிறப்பின் போதும் இக்கோயிலில் பெருந்திரளான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பண்ணாரி

அருகிலுள்ள இரயில் நிலையம்

மேட்டுப்பாளையம்

அருகிலுள்ள விமான நிலையம்

கோயம்பத்தூர்

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top