சத்தியமங்கலம் அங்காள பரமேஸ்வரி திருக்கோயில், ஈரோடு
முகவரி :
அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில்
சத்தி – கொமாரபாளையம்,
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம்- 638 401.
இறைவி:
அங்காள பரமேஸ்வரி
அறிமுகம்:
ஆதி சக்தியான பிரம்மாண்ட நாயகி, சத்தியமங்கலம் கொமாரபாளையத்தில் அங்காள பரமேஸ்வரியாக அருள்பாலித்து கருணைத் தாயாக வீற்றிருக்கின்றாள். இதற்காக அவ்விடத்தை அன்னையே தேர்ந்தெடுத்து கோவில் கொண்டு வீற்றிருக்கின்றாள் என்பது மிகவும் அதிசயமான நிகழ்வு ஆகும்.
புராண முக்கியத்துவம் :
சுமார் 600 வருடங்களுக்கு முன்னால் நான்கு அன்பர்கள், மைசூரில் அங்காள பரமேஸ்வரியின் ஆழ்ந்த பக்தர்களாக இருந்தனர். கேட்பவர்களுக்கெல்லாம் கேட்கும் வரம் தரும் இந்த அன்னைக்கு நாமே ஓர் ஆலயம் கட்டலாமே என்று அன்னையின் அருளால் தீர்மானித்தனர். அதற்காக மூல சக்தியாக விளங்கும் மேல் மலையனூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரியை அழைத்து வர வேண்டும். அவளின் சக்தி அம்சமாக விளங்கும் புற்றிலிருந்து மண் எடுத்து வந்து, அதோடு மேல் மலையனூரிலேயே சிலையை வடித்துத் கொண்டு வந்து அந்த மூல ஆற்றலோடு கோவில் கட்ட வேண்டும் என்று எண்ணம் கொண்டார்கள்.
அதன்படியே மேல்மலையனூர் சென்று ஓர் அங்காளி சிலையை வடித்து, அதோடு புற்று மண் எடுத்துக் கொண்டு, மைசூர் நோக்கி புறப்பட்டார்கள். அதன் பின்னர் தான் அம்மனின் திருவிளையாடல் ஆரம்பமானது. அந்த நான்கு மைசூர் அன்பர்களும் அம்பிகையின் திருவுள்ளம் அறியாமலே ஆழ்ந்த பக்தியோடு சிலையையும், புற்று மண்ணையும் சுமந்து கொண்டு மைசூர் நோக்கி சென்றார்கள்.
வழியிலேயே இறை சக்திகள் சூழ்ந்திருக்கும் சத்தியமங்கலம் எனும் ஊரில் கொமாரபாளையம் என்ற இடத்தில் பவானி நதிக்கரையில் சந்தியா வந்தனம் செய்ய எண்ணினர். அன்னையின் எண்ணம் அறியாத அவர்கள், அம்பிகையின் சிலையை கீழே வைத்து விட்டு, நீராடி தங்கள் கடன்களை முடித்தார்கள். பிறகு மீண்டும் பயணம் செய்ய அம்பிகையின் சிலையை எடுத்தார்கள். அப்போது தான் அம்பிகையின் அற்புத திருவிளையாடல் அங்கு நடந்தது. அந்தச் சிலையை எடுக்க முடியவில்லை. நால்வரும் சேர்ந்து எடுக்க முயற்சி செய்தார்கள். ஆனால் சிலை சிறிதும் கூட அசையவில்லை. எத்தனையோ முயற்சித்தும் எடுக்க முடியாமல் போனது,
அப்பொழுது தான் அவர்களுக்குப் புரிந்தது. அம்பிகை தான் அமர்ந்து அருள் பாலிக்க வேண்டிய இடத்தை, அவளே தேர்ந்தெடுத்து, நிச்சயித்துக் கொண்டால் என்பது. அம்பிகையின் எண்ணப்படியே, அந்த நான்கு அருள் அன்பர்களும் மனமுருகி அசைக்க முடியாத சிலைக்கு முறைப்படி வழிபாடு நடத்தி, அந்த இடத்திலேயே ஓர் சிறிய ஆலயம் கட்டினார்கள். இப்படிப்பட்ட திருவிளையாடலோடு அங்கே ஆட்சி புரிய வந்தவள் தான் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி.
சிறப்பு அம்சங்கள்:
தானே அங்கே விரும்பி அமர்ந்ததனால் மிக மிக சாந்த சொரூபிணியாக காட்சி தருகிறார்கள். அருளாட்சி புரிகின்றாள். இவள் மூன்று சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குக் குலதெய்வங்களாகக் கோலோச்சி விளங்குகிறாள். சிம்ம வாகனத்தை விட்டு நந்தியை வாகனமாகக் கொண்டு வந்த சாந்த சொரூபிநியாக இருக்கிறாள்.
அம்பிகையின் அருட்கதைகள் எண்ணற்றது. அவளின் அன்பைப் புரிந்து கொண்டவர்கள், அவளால் வரம் பெற்று வளம் நிறைந்தோர்கள், என அவளின் பக்தர்கள் ஒன்று கூடினார்கள், ஒருங்கிணைந்தார்கள். அன்னையை வணங்கி அமுதுண்டார்கள்.
சாந்த சொரூபிணியான, அன்னையின் ஆலயத்தில் உயிர் பலிகள் தரக் கூடாது, என எண்ணம் கொண்டு சாத்வீக பூஜைகளும், ஆராதனைகளும் செய்து அம்பிகையின் அருளைப் பெற்றுக் கொண்டிருக்கும் சிறப்பு இந்த அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் காணும் மிக அற்புதமான ஒன்றாகும்.
மைசூர் அருளாளர்களின் சிறிய ஆலயப் பணிக்குப் பின் சுமார் 600 வருடங்கள் கழித்து, 19.01.2000ல் அம்பிகை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி, திருக்குட நன்நீராடினாள். தீமைகளைத் தீய்க்கும் திரு அவதாரம் கொண்டாள்.
94 சக்திகளோடு சக்தியாய் எழுந்துள்ளது கம்பீரமான இராஜகோபுரம். இராஜகோபுரம் கடந்தால் வசந்த மண்டபத்தின் முன்பாகவே கருப்பராயரும் பெச்சியம்மனும் அடி உயரமாக துஷ்ட சம்கார ரூபர்களாக விஸ்வரூபமாய் அமர்ந்திருக்கின்றனர். வசந்த மண்டபத்தில் அலங்காரத் தூண்களின் அணிவகுப்பு கன்னி மூலையில் விநாயகர் சந்நிதி அருகில் செந்திலாண்டவர் ஆலயம், மகா மண்டபத்தில் தச விதத் தூண்கள், அதில் அஷ்டலக்ஷ்மி ரூபங்கள் உள்ளது.
திருவிழாக்கள்:
அமாவாசை விசேஷ அபிஷேகம், அன்னதானம், மூலமந்திர ஜபஹோமம், கோபூஜை, மார்கழி தினசரி அபிஷேகம், பிரதோஷ வழிபாடு, பௌர்ணமி பூஜை, மஹா சிவராத்திரி, மாசி மாதம் அர்த்த ஜாம பூஜை, அபிஷேகம், சித்ரா பௌர்ணமி, அங்காள பரமேஸ்வரி அஷ்டோத்ரம், அங்காள பரமேஸ்வரி சகஸ்ரநாம பூஜை. புரட்டாசி மாத வழிபாடு ஆகியவை இங்கு கொண்டாடப்படும் விழாக்கள் ஆகும்.
காலம்
600 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கொமாரபாளையம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஈரோடு
அருகிலுள்ள விமான நிலையம்
கோயம்பத்தூர்