Monday Jan 27, 2025

சதுரங்கப்பட்டினம் மலைமண்டலப் பெருமாள் (கிரிவரதராஜப் பெருமாள்) திருக்கோயில், கல்பாக்கம்

முகவரி

அருள்மிகு மலைமண்டலப் பெருமாள் (கிரிவரதராஜப் பெருமாள்)திருக்கோயில், சதுரங்கப்பட்டினம், கல்பாக்கம், சென்னை – 603102.

இறைவன்

இறைவன்: மலைமண்டலப் பெருமாள், கிரிவரதராஜப் பெருமாள் இறைவி: : பெருந்தேவி

அறிமுகம்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கல்பாக்கம் அருகே சதுரங்கப்பட்டினம் கிராமத்தில் அமைந்துள்ள மலைமண்டலப் பெருமாள் கோயில் (கிரிவரதராஜப் பெருமாள் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது) விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. வரதர் கருடனின் தலையின் அதே மட்டத்தில் கால்களுடன் நடந்து செல்லும் தோரணையில் காட்சியளிக்கிறார். சர்ப்ப தோஷத்தில் இருந்து விடுபட இது ஒரு பிரார்த்தனா ஸ்தலம். பல சிறப்பு அம்சங்கள் இந்த கோவிலை சுவாரஸ்யமாக்குகிறது. இது திரு கடல் மல்லை திவ்ய தேசத்திற்கு தெற்கே 15 கி.மீ தொலைவிலும், கல்பாக்கத்திற்கு இரண்டு கி.மீ தொலைவில் திருக்கழுகுன்றம்-கல்பாக்கம் எஸ்.எச் 58 இல் அமைந்துள்ளது. இந்த கோவில் சத்ராஸ் கோட்டையில் இருந்து 0.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மூலவர் கிரி வரதர் என்று அழைக்கப்படுகிறார்.

புராண முக்கியத்துவம்

கி.பி. 850-ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாகக் கருதப்படும் இத்தலம் விஜயநகரப் பேரரசுடன் தொடர்பு கொண்டது. இத்தலத்தில் அருள்பாலிக்கும் பெருமாளின் கோபுர வாசலில் ஒரு கல்வெட்டைக் காணலாம், அதைக் கொண்டே இத்திருக்கோயிலின் புராதனத்தை உணரலாம். சுமார் 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட கதவு இன்று வரை பிரதான வாயிற்கதவாய் அமைந்துள்ளது. ராஜகோபுரம் இல்லாதது ஒரு குறைதான். சற்று மேடான பகுதியில் பெருமாள் அமைந்துள்ளார் என்பதை நாம் கோயிலுக்குள் சென்றாலே புரிந்துவிடும். பல படிகள் ஏறித்தான் கருவறைக்குச் செல்ல வேண்டும். கருடனின் திருமுடியும் பெருமாளின் திருவடியும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்பு இத்தலம் சற்று மேடான பகுதியில் அமைந்திருந்ததால், இத்தல எம்பெருமாள் மலைமண்டலப் பெருமாள் என்றும்; கிரிவரதர் என்றும் அழைக்கப்படுகிறார்.

நம்பிக்கைகள்

திருமணத் தடை நீங்கவும், புத்திர பாக்கியம் கிடைக்கவும், பல காரணங்களால் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும் இங்குள்ள கருடனை வழிபடுகின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

இங்குள்ள கருட பகவான் மிகவும் விசேஷமானவர். தலையில் ஒன்று; இரு காதுகளில் ஒவ்வொன்று; மார்பினில் மாலையாக இரண்டு; இரு தோள்களிலும் ஒவ்வொன்று; இடுப்பில் அரைஞாண் கயிறாக ஒன்று என எட்டு நாகங்களை ஆபரணமாய்க் கொண்ட இவரை அஷ்டநாக கருடன் என்று அழைக்கிறார்கள். இதனால் இவரைத் தரிசிப்பவர்களுக்கு சகலவித சர்ப்ப தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. கருடனைக் கடந்து முன்மண்டபம் சென்றால் அங்கே ஒரே கல்லில் அமைக்கப்பட்ட பிரபையுடன் கூடிய லட்சுமி நாராயணனைத் தரிசிக்கலாம். மேலும் அவரருகில் லட்சுமி பிராட்டியையும் தரிசிக்கலாம். இவர்தான் இத்தலத்தின் மூலமூர்த்தியாய் இருந்தவர். திருப்பணிகள் செய்தபோது பூமியிலிருந்து கிடைக்கப் பெற்ற ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் கூடிய கிரிவரதராஜரே பிற்காலத்தில் மூலவராகப் பிரதிஷ்டை செய்யப்பட்டு விட்டார். இந்த சன்னிதியில் அமைந்துள்ள ஒரு விளக்கு மிகவும் மகிமை வாய்ந்ததாகவும் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கலைப் பொக்கிஷமாகவும் விளங்குகிறது. விளக்கின் மேற்பாகத்தில் கருடன்களும் நாகங்களும் தாங்குமாறு ஓர் அமைப்பு உள்ளது. கீழ் பாகத்திலோ கிளிகள் தாங்குவது போன்ற அமைப்பு. இவ்விளக்கில் நெய் ஊற்றிப் பிரார்த்தனை செய்து கொண்டால் நம் வாழ்வில் ஒளி பிறக்கும். சிதம்பரத்தைச் சார்ந்த ஒரு அன்பரின் வீட்டில் இருந்த இவ்விளக்கு கிரிவரதராஜன் அருளாணைப்படி இத்திருக்கோயிலுக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டது. புரட்டாசி சிரவணத்தன்று இவ்விளக்குக்கும் விசேஷ பூஜை உண்டு. கர்ப்பக் கிரக நுழைவு வாயிலில் இரு துவார பாலகர்கள் உள்ளனர். நிலைப்படியில் எங்கும் காணாத அதிசயமாக யோக நரசிம்மரின் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. (பொதுவாக கஜ லட்சுமியைத்தான் காணலாம்) இவரும் சிறந்த வரப்பிரசாதி. இவருக்கும் அபிஷேக ஆராதனைகள் உண்டு. பிரதோஷ வழிபாடு விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. கருவறைக்குள் கருணாமூர்த்தியாம் கிரிவரதராஜப் பெருமாள் ஸ்ரீ தேவி, பூமாதேவியுடன் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார். பெருமாள் சுமார் ஆறடி உயரம் கொண்டவர். ஒரு காலை முன் வைத்தபடி கஜேந்திர மோட்சத்திற்குச் செல்லும் நிலையில் காணப்படுகிறார். அதுபோல வலக்கை சக்கரமும் சற்று சாய்ந்து ஏவிய நிலையில் உள்ளது. முன்னதாக உற்சவ மூர்த்திகள் உள்ளன. உற்சவத் தாயாரும் இங்கே பெருமாளுடன் தரிசனம் தருகிறார். இத்திருத்தலத்தில் லட்சுமி மூன்று வடிவங்களில் அருட்காட்சியளிப்பது குறிப்பிடப்பட வேண்டிய அம்சம். லட்சுமி நாராயணனுக்கு இருபுறமும் இரண்டு தாயார்கள். தவிரவும் தனிக்கோயில் தாயாராக பெருந்தேவி உள்ளார். மூலஸ்தானத்தில் உள்ள புஷ்பாஞ்சலி ஆஞ்சநேயர். கலைநயமும் காருண்யமும் நிறைந்த விஜயநகர காலத்திய பஞ்சலோக ஆஞ்சநேயர். பொதுவாக அஞ்சலிஹஸ்தத்துடன் காட்சியளிக்கும் அனுமன் திருக்கரத்தில் புஷ்பமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்க அம்சம். மகான் ராகவேந்திரரும் இத்தலத்தில் தங்கி இப்பெருமாளுக்கு கைங்கரியங்கள் செய்துள்ளார். இத்திருக்கோயில் அருகிலேயே மகான் ராகவேந்திரரின் மிருத்திகா பிருந்தாவனம் அமைந்துள்ளது. பிருந்தாவனத்தில் மகான் ராகவேந்திரர் சிலாமூர்த்தியாய் கம்பீரமாய் எழுந்தருளியுள்ளார். அவரின் எதிரே பஞ்சமுக அனுமனின் சன்னதியும் அமைந்துள்ளது.

திருவிழாக்கள்

வைகுண்ட ஏகாதசி

காலம்

850 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சதுரங்கப்பட்டினம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

மதுராந்தகம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top