கோகூர் ருத்ரகோடீஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
கோகூர் ருத்ரகோடீஸ்வரர் சிவன்கோயில்,
கோகூர், கீழ்வேளுர் வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 611104.
இறைவன்:
ருத்ரகோடீஸ்வரர்
அறிமுகம்:
திருவாரூர் அருகில் உள்ள கீழ்வேளூரிலிருந்து வடக்கே வெட்டாறு செல்கிறது அதன் தென் கரையில் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் கோகூர் உள்ளது. ருத்ர அம்சமான “அஞ்சுவட்டத்தம்மன்’ என்ற தெய்வம் கீவளூரில் முருகனின் சிவபூஜைக்கு இடையூறு ஏற்படாவண்ணம் காவல் இருந்தார். நான்கு திசைகள் மற்றும் ஆகாயம் ஆக ஐந்து புறங்களிலும் இருந்து பிரச்னை ஏற்பட்டாலும், பாதுகாப்பு தருபவளாக விளங்குவதால் இந்தப்பெயர். முருகனின் பூஜை முடிந்தவுடன் அஞ்சுவட்டத்தம்மன் இத்தலத்தில் வந்து இறைவனை வணங்கியதால் இறைவனுக்கு ருத்ரகோடீஸ்வரர் என பெயர். கோ எனும் காமதேனுவுக்கு அருள் செய்த தலம் என்பதால் கோ-ஊர் எனப்பட்டு பின்னர் கோகூர் ஆனது. அதனால் நுழைவாயில் மேல் காமதேனுவுக்கு இறைவனும் இறைவியும் அருள் செய்யம் காட்சி உள்ளது.
இங்கு கிழக்கு நோக்கிய ஒரு பெரிய சிவாலயம் உள்ளது. ஊரில் இருந்து தள்ளி ஆற்றின் கரையோரமாக உள்ளது. இறைவன்- ருத்ரகோடீஸ்வரர் இறைவி- பெயர் தெரியவில்லை. இரண்டு ஏக்கர் அளவுக்கு பரந்துள்ளது கோயில், உயர்ந்த மதில் சுவர்கள் கோயிலுக்கு அணி செய்கிறது. நுழைவாயில் மேல் காமதேனுவுக்கு இறைவன் அருள் செய்யும் காட்சி சுதையாக்கப்பட்டுள்ளது. அதனை தாண்டியது முகப்பு மண்டபமும் அதன் முன்னர் நந்தி மண்டபமும், பலிபீடமும் உள்ளன. கொடிமர விநாயகரும் உள்ளார். ஈசான்ய மூலையில் பெரிய அரசமரம் வளர்ந்து நிற்கிறது. நுழைவாயிலின் உட்புறம் பைரவர் சூரியனும் இரு மாடங்களில் உள்ளனர். மற்றொருபுறம் சந்திரன் ஒரு மாடத்தில் உள்ளார்.
முகப்பு மண்டபம், அர்த்த மண்டபம் இறைவன் கருவறை என உள்ளது. இறைவன் ருத்ரகோடீஸ்வரர் நடுத்தர அளவுடைய லிங்கமூர்த்தியாக உள்ளர். மகாமண்டபத்தில் தெற்கு நோக்கிய சன்னதியாக அம்பிகை உள்ளார். அருகில் நடராஜருக்கான சன்னதி உள்ளது. ஆனால் மூர்த்திகள் இல்லை. கருவறை கோட்டங்களில் தென்முகன் அழகாக உள்ளார். அவரின் இருபுறமும் கொல்லிமலை அருள் வாக்கு சித்தர் ஜானகிராம் சுவாமிகள் சுதையாலான சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. பழுதடைந்து கிடந்த கோயிலை 1999 ஆம் ஆண்டில் முழுமையாக திருப்பணிகள் செய்துள்ளனர்.
மிக அழகான பழமையான சிற்பம். பிரகாரத்தில் விநாயகர் மகாவிஷ்ணு முருகன் ஆகியோருக்கு தனி சிற்றாலயங்கள் அமைக்கப்பட்டுளள்ன. முருகனின் சிற்றாலயம் முகப்பு மண்டபத்துடன் சற்றே பெரியதாக உள்ளது. முருகனுக்கும் விஷ்ணுவிற்கும் இடையில் ஒரு தட்டையான கூரையுடன் ஒரு மண்டபம் அமைத்து அதில் மூன்று லிங்கங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை பெருங்கோயிலின் பிரகார லிங்கங்களாக இருத்தல் கூடும். சண்டேசர் சன்னதியும் பெரிதாக உள்ளது, ருத்ரகோடீஸ்வரரை வணங்கினால் தன்னம்பிக்கை தைரியம் எதிரிகளை எதிர்கொள்ளும் துணிவும் கிடைக்கும்.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கோகூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி