Wednesday Jul 03, 2024

கொழுமம் மாரியம்மன் கோயில், திருப்பூர்

முகவரி :

அருள்மிகு மாரியம்மன் கோயில்,

கொழுமம், மடத்துக்குளம் வட்டம்,

திருப்பூர் மாவட்டம் – 642 102.

போன்: +91-4252 – 278 001, 278 510, 278 814.

இறைவி:

மாரியம்மன்

அறிமுகம்:

கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவில் என்பது திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் கொழுமம் என்ற ஊரில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலாகும். கருவறையில் உள்ள மாரியம்மன் லிங்கவடிவில் உள்ளார். இவரை சுயம்பு மாரியம்மன் என அழைக்கின்றனர்.குமண மன்னன் என்பவர் இப்பகுதியை ஆட்சி செய்து வந்ததாகவும், அம்மன்னின் கோட்டைப் பகுதி இருந்த இடத்தில் இக்கோவில் கட்டியதால் கோட்டை மாரியம்மன் என அழைக்கின்றனர்.

புராண முக்கியத்துவம் :

இத்தலத்தின் அருகேயுள்ள அமராவதி ஆற்றில் மீனவர் ஒருவர் மீன் பிடிக்க வலைவீசியபோது, லிங்க வடிவ கல் ஒன்று சிக்கியது. அதனை கரையில் போட்டு விட்டு மறுபடியும் மீனவர் வலையை வீசினார். திரும்பவும் அதே கல்லே வலையில் சிக்கியது. மீனவர் மீண்டும், மீண்டும் வலைவீச, அந்தக்கல் வந்துகொண்டே இருந்தது. பயந்துபோன அவர் வீட்டிற்கு திரும்பி விட்டார். அன்றிரவில், அவரது கனவில் தோன்றிய அம்பாள், “ஆற்றில் லிங்க வடிவில் உனக்கு தரிசனம் தந்தது நான்தான்’ என்றாள். மீனவர் இத்தகவலை ஊர் மக்களிடம் கூறினார். மக்கள் அனைவரும் ஆற்றங்கரையில் கல்லை தேடியபோது கிடைக்கவில்லை. ஓரிடத்தில் கல் மண்ணில் புதைந்து சிறிய புடைப்பு போல வெளிப்பட்டிருந்ததைக் கண்டு அவ்விடத்தில் தோண்டினர். எவ்வளவோ தோண்டியும் அடிப்பாகத்தை காணமுடியவில்லை. பின் அங்கேயே அம்பாளுக்கு கோயில் கட்டினர்.

நம்பிக்கைகள்:

அம்மை நோய், கண்நோய் தீர, குடும்பம் செழிக்க வேண்டலாம். கண்நோய் கண்டவர்கள், இங்கு தரப்படும் தீர்த்தத்தை கண்ணில் விட்டுக்கொள்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்:

கருவறையில் அணையாவிளக்கு ஒன்று எப்போதும் எரிந்து கொண்டிருக்கிறது. அமராவதி ஆற்றின் கரையில் கிழக்கு நோக்கியபடி அம்மன் வீற்றுள்ளாள். புதியதொழில் தொடங்கும்போதும், வீட்டில் சுபநிகழ்ச்சி நடத்தும் போதும், அம்பாளின் தலையில் பூ வைத்துத் உத்தரவு கேட்டு, அனுமதி கிடைத்தால் மட்டுமே அதனை செயல்படுத்தும் பழக்கம் நடைமுறையில் உள்ளது.

திருவிழாக்கள்:

சித்திரைப் பெருந்திருவிழா, ஆடி மாதத்தில் லட்சார்ச்சனை விழா, லட்ச தீப விழா திருக்கல்யாணம், தேர் திருவிழா, சிம்ம வாகன உலா. சித்திரை திருவிழா பதினெட்டு கிராமங்களை சேர்ந்த மக்களால் கொண்டாடப்படுகிறது. கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல், பறவை காவடி, அலகு குத்துதல் ஆகியவை நடத்தப்படுகின்றன.

காலம்

500 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கொழுமம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

மடத்துக்குளம், திருப்பூர்

அருகிலுள்ள விமான நிலையம்

கோயம்புத்தூர்

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top